RSS

மாதம் மும்மாரி பொழிகிறதா?

30 டிசம்பர்

 

புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அரண்மனையின் அந்தப்புரத்தை விட்டு வெளியே வராத அந்தக்காலத்து மாமன்னர்கள், மந்திரிமார்களைப் பார்த்து “மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்ட கதையாகத் தான் இருக்கிறது நம்முடைய பிரதமரின் பேச்சு.

புவனேஸ்வரத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 92வது ஆண்டு மாநாட்டில் பேசும் போது பிரதமர் தன்னுடைய புதிய கண்டு பிடிப்பை வெளியிட்டுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறிய அதே நேரத்தில், வறுமையை ஒழிப்பதில் நமது இலக்கை இதுவரை எட்டமுடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

வறுமை ஒழிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி நேரு காலத்திலிருந்தே கோஷம் கொடுத்து வருகிறது. இந்திரா காந்தி அவசரநிலைக் காலத்தின் போது, ‘வறுமையே வெளியேறு’ என்று கூட கோஷம் கொடுத்தார். ஆனால் வறுமை வெளியேறியபாடில்லை. மாறாக வறுமையில் வாடும் மக்கள் தொகை எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

பொருளாதார புள்ளிவிவரங்களில் பல்வேறு மோசடிகளை செய்துவரும் மத்திய ஆட்சியாளர்கள் வறுமைக்கோட்டை தீர்மானிப்பதிலும் மோசடி செய்து வருகின்றனர். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவே வறுமைக் கோட்டு அளவுக்கான மதிப்பீட்டை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் பிரதமர் மன்மோகன் சிங் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல குறைந்து வருகிறது என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங். அப்போதுதான் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற பளபளப்பான வார்த்தை விளையாட்டுகளோடு புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்தைநோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு, புதிய பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக வெகுவாக அதிகரித்து, அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலை அலங்கரிக்கத் துவங்கியுள்ளனர். மறுபுறத்தில் கடன் சுமை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதை ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடைய அரசு பின்பற்றி வரும் கேடுகெட்ட பொருளாதாரக் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படவில்லையென்று நெஞ்சாரா பொய் உரைக்கிறார். அதிகரித்து வரும் வேலையில்லாப் பட்டாளம், பட்டினிச் சாவுகள் என கண்முன்னால் தெரிகிறது இவரது புதிய பொருளாதாரக் கொள்கையின் லட்சணம்.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் திசெம்பர் 30, 2009 in அரசியல், டாலர்

 

குறிச்சொற்கள்:

1 responses to “மாதம் மும்மாரி பொழிகிறதா?

  1. குருத்து

    திசெம்பர் 31, 2009 at 1:15 பிப

    நல்ல பதிவு. காங்கிரஸ் கட்சிக்கு வயது 125 ஆம். காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு செய்த துரோகங்களை தேடிப்பிடித்து ஒரு தொடர் மாதிரி எழுதுங்களேன். பலருக்கு போய் சென்று சேரும்.

     

பின்னூட்டமொன்றை இடுக