
ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் கிறிஸ்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு ஏராளமான சேதாரங்கள் ஏற்பட்டுவிட்டன. வீடிழந்தோர், பொருளிழந்தோர், தீயில் பொசுக்கப்பட்டோர், அடித்தே கொல்லப்பட்டோர், பாலியல் வன்முறைக்கு ஆளானோர், ஆயிரக்கணக்கில் அனாதைகள் ஆனோர் என இப்படி அவர்கள் பட்ட துயரங்கள் நீளுகின்றன.
கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டன; சில கொளுத்தப்பட்டன, ஏசுபிரான் சிலைகள், மாதாவின் சிலைகள் சிதைக்கப்பட்டன – உடைக்கப்பட்டன, பைபிள்கள் கொளுத்தப் பட்டன – கிழிக்கப்பட்டன – மிதிக்கப்பட்டன – இப்படி அராஜகங்கள் விரிவடைந்தன.
அந்த இரண்டு மாநிலங்களிலும் அரசுகள் இருந்தனவா, இயங்கினவா என ஐயப்பாடு கொள்ள வேண்டியுள்ளது.
சிறுபான்மையோர் மீது இப்படிச் சீரழிவுகளை வாரியிழைக்கும் சிறு மதியாளர்கள் சொல்லும் காரணங்கள்தான் என்ன?
கிறிஸ்தவஅமைப்புகள் இந்துக்களைக் கட்டாயப்படுத்தி “கன்வர்ட்” செய்கிறார்கள், ஜனத்தொகையில் கிறிஸ்தவர்கள் பெருகிவருகிறார்கள், இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள் என்கிறார்கள். அறிவியல் கணக்குகள், ஆய்வுகள் எல்லாம் இந்தப் பெருக்கக் கணக்கு அபாண்டமான பொய் என நிரூபித்துவிட்டன.
இந்துக்களை மதமாற்றம் செய்வது ஆகப் பெரிய மகா பாவம், அட்டூழியம், ஆக அதற்குக் காரணமானவர்கள் அழிக்கப்பட்டே தீர வேண்டுமென சூலாயுதம் தூக்கிக் கொண்டு நர வேட்டை ஆடுகிறார்கள்.
பா.ஜ.க. தலைவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், பின்னாள் வரவிருக்கிற பிரதமர் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவரான அத்வானியும் சொல்லும் வாதம் இந்த மத மாற்றம் பற்றி நாடு பூராவும் பொது விவாதம் நடத்த வேண்டும் என்று திசை திருப்புகிறார்கள், அட்டூழியங்களை நியாயப்படுத்த மத மாற்றங்களைப் பூதாகரப்படுத்துகிறார்கள், மாபெரும் குற்றம் என்கிறார்கள்.
ஆனால், காயப்பட்ட மக்களுக்கு கடுகளவு கூட கண்ணீர் சிந்தவில்லை. இரும்பு இதயம் படைத்த சுத்த இந்துக்கள்.
மதம் மாறுவதோ, மதத்தை பரப்புவதோ சட்டப்படி குற்றமில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லுவது என்ன?
“சமய உரிமைப் பேற்றுக்கான உரிமை” என்ற தலைப்பில் விதி 25 சொல்லும் விளக்கம் :
“…. அனைவரும் மனச்சான்று உரிமைப் பேற்றுக்கும், தங்கு தடையின்றி சமயத்தை வெளிப்பட மேற்கொள்ளுதல், பயிலுதல், பரப்புதல் ஆகியவற்றுக்கான உரிமைக்கும் சமமாக உரிமைப்பாடு உடையவர் ஆவர்” – என விவரிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி விளக்கிக் கொள்ளுவது?
அ.தங்கு தடையின்றி வெளிப்படையாக எந்த சமயத்தையும் மேற்கொள்ளலாம்; மனச்சாட்சிபடி;
ஆ. எந்த மதத்தையும் பயிலலாம்;
இ.எந்த மதத்தையும் பரப்பலாம்.இது ஒரு குடிமகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை. மதம் அவன் சொந்த விவகாரம்.
இங்கே கடைசியாகச் சொல்லப்பட்டுள்ள பரப்பலாம் என்பதின் பொருளை ஆழமாகப் புரிதல் வேண்டும்.
ஒரிசாவில் கடந்த 40 ஆண்டுகளில் ஒருவர் கூட – ஒரு பழங்குடியினர் கூட கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படவில்லை. என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கலவரங்களையும், அட்டூழியங்களையும் நேரில் பார்வையிடச் சென்ற தேசிய சிறு பான்மைக் கமிஷன் சொன்ன விவரங்கள் “பஜ்ரங்தள்” சதியாளர்களை அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.
ஒரிசா மாநிலத்தில் மதச் சுதந்திர சட்டப்படி கட்டாயப்படுத்தி பழங்குடியினர் மதம் மாற்றினார்கள் என்ற ஒரு புகாரும் இதுவரை மாநில அரசால் பதிவு செய்யப்படவில்லை. ஒரு கிறிஸ்தவ பிரமுகரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்று சொல்லி “பஜ்ரங்கள்” – பயங்கரவாத செயலில் ஈடுபட்டது.
சொந்த மாநிலத்திலேயே 20,000க்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிமக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டு 14 இடங்களில் அகதிமுகாமில் முடங்கிக் கிடக்கிறார்கள். பயத்தால் பதுங்கிக் கிடக்கிறார்கள். பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தள் போடும் கட்டளை, ‘மீண்டும் அந்த ஏழை பாழைகள் தங்கள் இருப்பிடம் செல்ல வேண்டுமென்றால், மீண்டும் இந்துவாக மதம் மாறித்தான் செல்ல வேண்டும், அல்லாது போனால் அவர்கள் கடைசிவரை அனாதைகளாகத்தான் வாழ வேண்டும் என்று பய முறுத்துகிறார்கள். இந்த பயங்கரவாதிகள்தான் கட்டாய மதமாற்றத்துக்கு நிர்ப்பந்தம் செய்கிறார்கள். சட்டப்படி இவர்கள் தான் இப்போது தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
நேரில் பார்த்து விசாரணை நடத்த வந்த தேசிய சிறுபான்மைக் கமிஷன் சரியாகவே ஒரு பரிந்துரையைச் செய்துள்ளது.
“மாநில அரசு அமைதி சூழலை உருவாக்க முடியவில்லை என்றால், கதியற்றும் கிடக்கும் கிறிஸ்தவ மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையை உருவாக்க இயலவில்லை என்றால், நடுவண் அரசு அரசியலமைப்புச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அரசின் செயலற்றத் தன்மையினால், உற்சாகம் பெற்ற பயங்கரவாத பஜ்ரங்தள் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு இந்த அராஜகத்தை பரப்புகிறது. உடனடியாக நடுவண் அரசின் நடவடிக்கையைக் கோரி இவ்வளவு அழுத்தமாகப் பரிந்துரைத்துள்ளது.
“மதநல்லிணக்கத்துக்கு ஊறு செய்து மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்” என்றும் கோருகிறது.
கர்நாடகாவிலும் இதே கசப்பான சம்பவங்கள் தான் நடந்துள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களை உடைத்துத் தள்ளியது நான் தான். மேலும் உடைப்பேன் – என பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ‘பஜ்ரங்தள்’ தலைமையின் மீது கர்நாடக சர்க்கார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்பதையும், கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூட மதக் கலவரங்களை உருவாக்கும் அமைப்புகளை பஜ்ரங்தள் போன்றவைகளைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மதக் கலவரங்களுக்குப் பக்கபலமாய் இருக்கும் அரசாங்கங்களைக் கலைக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இந்துத்துவாவாதிகள் மதமாற்றம் என்ற பிரச்சனையை ஒரு கவசமாகப் பயன்படுத்துகிறார்கள். நெருங்குகிற ஐந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், வரவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தல் என இதன் மீது நரியாய் கண் வைத்து, இந்துக்களின் வாக்கு வங்கிகளை வளைத்துப் போட இந்துத்துவாவாதிகளின் சதித் திட்டமாகும் இது. இப்படி ஏற்கனவே சதி செய்து ஆட்சி சுகத்தை சுவைத்தவர்கள்.
அரசியல் லாபம் பெறத்தான் மக்களை மதத்தின் பேரால் பிரித்து நாட்டை நாசப்படுத்தும் நய வஞ்சக செயல் இது.
மேற்படி பாஜகவும், அதன் சங்பரிவாரங்களும் கூக்குரலிடுவது போல் இந்து மதத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடவில்லை.
இறை நம்பிக்கையாளர் குன்றக்குடி அடிகளார் சொன்ன பொன்னான கருத்து இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
“இந்து மதம் ஒரு மா சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் சிலர் குவளை கொண்டோ, குடம் கொண்டே நீரை அள்ளிச் செல்லுவதால், இந்து மாசமுத்திரம் வற்றிவிடாது”- என்றார்.
பின் ஏன் சங்பரிவார் கூட்டத்தார் மதமாற்றம் பற்றி கவலைப்படுகிறார்கள், இந்து மதத்துக்கு ஆபத்து என்கிறார்கள்!
கடவுள் மறுப்பாளர், பகுத்தறிவாளர் பெரியார் சொன்னதும் நூறு சதம் சரி!
மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்களும், சுயலாபம் தேடுகிறவர்களும்தான் மத மாற்றம் பற்றி பூசல் எழுப்புவார்கள்? கவலைப் படுவார்கள்” என்றார்.
பாஜக, சங்பரிவார் அமைப்புகளால், அவர்களின் வஞ்சனைமிக்க செயல்களால் சமூக இணக்கம், ஜனநாயகப் பண்பாடு சிதைக்கப்படுகிறது, பாழடிக்கப்படுகிறது. இதன் பின் விளைவு இந்தியாவை மீட்க பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் அற்புதம், அதிசயம். இந்த அதிசயம், அற்தம் காக்கப்பட மதச் சார்பின்மை – எனும் கோட்பாடுதான் பலமான தூண். இந்தத் தூண் பலகீனமானால், மக்கள் மதத்தின் பேரால் பகைத்துக் கொள்ளும், அடித்துக் கொள்ளும், அழித்துக் கொள்ளும் நிலைமை உருவாகும். விளைவு கங்கையிலும், காவிரியிலும் ஓடும் தண்ணீர் செந்நீராய் மாறிப் போகும். இந்த இழப்பு வராமல் தடுக்க ஒரே வழி, ஒரே தாரக மந்திரம் ஒவ்வொரு இந்தியனும் மதச்சார்பற்ற கொள்கையை அடைக்காப்பது தான்!