RSS

Tag Archives: medicine indian pharma medical Rep. pfizer abbott doctor fake ranitidine omez gelisil digine

மருந்து நிறுவனங்களின் பகல் கொள்ளை


சமீபத்தில் உச்சநீதிமன்றம், மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய மருந்துகள் மத்திய அரசின் விலைக் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றனவா என்றும் ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் உள்ளனவா என்றும் மத்திய அரசை வினவியுள்ளது. இதுநாள் வரையில் மத்திய அரசும், பெட்ரோலியத்துறை அமைச்சகமும் இதன்மேல் மௌனம் சாதித்து வருகின்றன. அப்படியென்றால் மருந்துகளின் விலைகள், நிர்ணய விலைக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அதை கட்டுப்படுத்திட மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுத்திட வில்லை என்று தான் அர்த்தமாகும்.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வானளாவிய உயரத்தில் உயர்ந்துகொண்டிருக்கும் வேளை யில் மருந்துகளின் விலைகள் என்பது விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு இந்தியன் வருமானத்தில் மருந்துகளின் செலவு என்பது மாதாமாதம் உயர்ந்து கொண்டி ருக்கிறது. இந்திய அரசின் 2004-05 அறிக்கையின்படி தனி மனித செலவீனத்தில் மருத்துவத்திற்காக கிராமங்களில் 7 சத வீதமும் நகரங்களில் 5 சதவீதமும் செலவிடப்படுகிறது. 2010-11ல் இதில் குறைந்த பட்சம் 150-200 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் தாராளமயக் கொள்கையின் விளைவாக, மருந்துத் துறையில் 100சதவீதம் அந்நிய மூலதனம் அனுமதித்ததன் காரணமாக பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் இந்திய மருந்துத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகி, இந்திய மக்களை, தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது. இதை தடுத்திட வேண்டுமென்று இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மருந்து சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு, விலைகள் குறைய வேண்டுமென்றால் சாத்தியமே இல்லை.

348 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ஆனால் 37 மருந்துகள் மட்டும்தான் விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் உள்ளன. மற்ற 311 மருந்துகளும் மருந்து நிறுவனங்களின் லாபவெறிக்கு விட்டு விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தத்திற்கான மருந்து மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

மேலும் கே.ஸ்ரீநாத் தலைமையிலான திட்டக் குழுவின் மக்கள் நலன் உபகுழு தனது அறிக்கையில், “மருந்துகளின் விலை நிர்ணயத்தில் இந்திய அரசின் மெத்தனப் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு மருந்துகளை அதிக பட்சமாக விலை உயர்த்தி தனது லாபத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வுக்கு காரணம்தான் என்ன?

1. மருந்து நிறுவனங்களின் லாப வெறிதான் காரணம். தயாரிப்பு விலைகளிலிருந்து பல நூறு மடங்கு வரை அதிகபட்ச விலை (M.R.P) வைத்து நோயாளி தலையில் கட்டுகிறது. நோயாளியும் தன் உயிர் பாதுகாப்பிற்காகவும், நலனிற்காகவும் தன் உடமைகளையெல்லாம் விற்று அதில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழியில்லை!

2. மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரை செய்திட மருத்துவர்களுக்கு அன்பளிப்பு, உபசரிப்பு என்கின்ற தரக் குறைவான யுக்திகளை கையாளுகின்றது.

உதாரணம்: குடல் புண்ணிற்கான ராணிடின் மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 2.33 கோடி ரூபாய் செலவு செய்து 466 மருத்துவர்களை துபாய்க்கு உல்லாச பயணம் ஏற்பாடு செய்திருக்கின்றது. அதேபோன்று  எனும், அல்சர் மாத்திரையை பரிந்துரைத்திட மருத்துவர்களுக்கு சராசரியாக ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ளது. அது மட்டுமல்ல, தங்க நாணயங்கள், வெள்ளிக் காசுகள், தொலை காட்சிப் பெட்டிகள், விலை உயர்ந்த ப்ளாக் பெர்ரி செல்போன்கள் என அள்ளிவீசியுள்ளது.

மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் இறுதியாக நோயாளிகளின் தலையில் தான் விழுகின்றது. குறிப்பாக உயிர்காக்கும் மருந்தான மெரோபனம் எனும் மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 2300. இது மருத்துவர்களுக்கு அல்லது மருந்துக் கடைக்கு ரூ.470க்கு கொடுக்கப்படுகின்றது. ஆக மருத்துவர்களுக்கு ரூ. 1830 லாபமாக கிடைத்துள்ளது. இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க, புதிய மருந்துகள் அறிமுகம் என்கின்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் சோதனைக்களமாக மாற்றி, கடந்த 2008-10 வரை 1660 அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இதில் பெரும் பாலானோர் மலை வாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் முறையற்ற சோதனையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. அதாவது தடாலில் எனும் மருந்து ஆண்களுக்கு அவர்களின் புணர்ச்சியை ஊக்குவிக்கும் மருந்தாகும். இதை ஒரு மருந்து நிறுவனம் இரத்த அழுத்த நோய்க்காக அப்பாவி மக்களிடம் அவர்களுக்கே தெரியாமல் சோதனை செய்தது. இதில் பலர் மடிந்துள்ளனர். இந்த கோர நிகழ்ச்சிக்கு காரணமான மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. இது தொடர்கதையாக இருக்கிறது.

இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதே நிறுவனங்கள் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டு சட்டத்தில் உள்ள உரிமைகள், சலுகைகள், சமூக பாதுகாப்பு போன்றவைகளை அளிப்பதே இல்லை.

குறிப்பாக “பிகாசில்ஸ்”(Becosule) எனும் சத்து மாத்திரை தயாரிக்கும் பைசா(Pfizer) எனும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது நிறுவனத்தில் தொழிலாளர்களும், மருந்து விற்பனை பிரதி நிதிகளும் இல்லை என்று தொழிலாளர் ஆணையரிடம் தெரிவித்துள்ளது. ஆனால் தொழிலாளர் அலுவலர் அவர்கள், தனது விசாரணை அறிக்கை யில் 1985 தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள்(Medical Rep) பணிபுரிகின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஆக, இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கான சலுகைகள், சட்ட உரிமைகளை மறுத்து, இதுநாள்வரை இந்தியாவில் வியாபாரம் செய்து பல ஆயிரக்கணக்கான கோடிகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மருந்து நிறுவனங்கள் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் இந்தியாவில் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்டிடவும், மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைத்திடவும், விலை நிர்ணயப் பட்டியலில் அனைத்து மருந்துகளும் கொண்டுவர வேண்டுமெனில், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

மருந்து நிறுவனங்களின் வானளாவிய லாபத்தை குறைத்திட சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மருந்துகளின் அதிகபட்ச விலைகளை நிர்ணயிக்க அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும். அந்த சட்டங் களை அமல் படுத்திடாத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மருந்து தயாரிப்பு, விநியோகத்தை ஊக்கப்படுத்திட வேண்டும். இதற்கான போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும்

 

குறிச்சொற்கள்: