RSS

Tag Archives: ஜெயமோகன் பாரதி கவிதை அரசியல் நீதி நூல்கள்

பாரதியை மீண்டும் சீண்டும் ஜெயமோகன்கள்


பாரதியின் மொத்தக் கவிதைகள் 268 என்று பேராசிரியர் அரசு தன்னுடைய குயில் பாட்டில் பாரதியின் கருத்து நிலை என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதில் பாடல்கள், கவிதைகள், வாழ்த்துப்பாக்கள் என அனைத்தும் அடக்கம். பாரதி தன் சமகாலத்திய இந்திய, உலக இலக்கியப் போக்குகளின் மீது கவனம் பதித்திருந்ததை அவனது  கட்டுரை தொகுப்பை படிக்கிற போது அறிந்து கொள்ள முடிகிறது. மு. ராகவையங்கார் வழியாக சங்க மரபை அறிந்து அதைப் பற்றிய அய்யங்கார் உரையை இந்தியா பத்திரிகையில்
பெருமகிழ்வோடு வெளியிடுகிறான்.

நீதி நூல்கள்,காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள், ஆண்டாள், வள்ளலாரின் படைப்புகள், நாட்டார்இசை மரபுகள், செவ்வியல் இசை
மரபுகள், இதிகாச, பஞ்சதந்திர மர கள் என பலவற்றிலும் கவனம் கொண்டு, கற்று தன்படைப்பை மிளிரச் செய்திருக் கிறான் பாரதி. பொது வாழ்வும்,இலக்கிய வாழ்வுமான தன் 16ஆண்டுகளை அடக்கு முறை,அச்சுறுத்தல்,புலம் பெயர்தல், வறுமையான வாழ்க்கைப் பாடு எனகழித்த தன் ஊடாகவே தன் படைப்பை நவீன தமிழ் மொழிப் பரப்பில் விட்டுச் சென்றிருக்கிறான்.

அடிமை இந்தியாவை விடவும் ஆசு வாசமான தற்காலத்திய சூழலில் வாழ்ந்து கொண்டு ,ஊடக பெருக்கத்தின் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வலைப்பூ கச்சேரி செய்யும் ஜெயமோகன்கள் இக்கவிதை மேன்மையினை சரியாக உணர முடியாது. இவர் தனது வலைப்பக்கத்தில் பாரதி அந்தகாலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞன் மட்டுமே இதைத்தாண்டி மகாகவி என அவனை சொல்ல வாய்ப்பு இல்லை. காரணம் அவனிடம் அசல்தன்மை கிடையாது; நகல் கவிஞன் என்ற ரீதியில் எழுதிச் செல்கிறார். அமைப்புகளில் செயலாற்ற மறுக்கும் தூய வெற்றிலக்கியசார். தன்னல நபர்களைப் போல் அன்றி ஒரே நேரத்தில் அமைப்பாளனாகவும்
படைப்பாளனாகவும் இருக்க வேண்டிய தேவையில் விடுதலை அரசியலுக்கான களமாக தன் படைப்பை பயன்படுத்துகிறான் பாரதி.இதற்கு ஆண்டாளின் திருப்பாவை, தொண்டரடிப்பொடி யாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி உட்பட பல உத்திகளையும் கைக் கொள்கிறான். திசைகள் எங்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுடர் கின்றன.நட்சத்திரங்களின் ஒளியும் குறைந்து சந்திரனும் மயங்கி விட்டான். விலகிய இருளினூடாக கமுகு மடல்களைக் கீறிக் கொண்டு, சுகந்த காற்று வீசும் அதிகாலைப் பொழுதில் துயில் கலைவாய் திருவரங்கனே என பெருமாளுக்கு வேண்டுகோள் விடுக்கும் மரபைத் தள்ளி வைத்து விட்டு,பெருமாள் இருந்த இடத்தில் சுதந்திரதேவியை முன்வைத்து அவளுக்கான திருப்பள்ளி எழுச்சி பாடுகிறான் பாரதி. இப்பள்ளி எழுச்சியில் வேண்டுகோள் கிடையாது. ஆணை,அதட்டல்,கோபித்தல் என சமயவடிவ ஊடாக சமய மறுமலர்ச்சியையும் விடுதலை உணர்வினையும் முன்னெடுக்கிறான்.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிக் கவிதை 40 அடிகளில் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் செய்த தவத்தால் இருள் விலகி பொற்சுடர் பரவி பொழுது புலர்ந்த காலையில் பல்லாயிரம் தொண்டர்கள் உன்னை வணங்கக் காத்திருக்கிறோம். பறவைகள் பறக்க,முரசங்கள் ஒலிக்க எங்கும் சுதந்திர சங்கு ஒலிக்கிறது. அறிவாளர்களும்,பெண்களும் உன் பெயர் சொல்லி காத்திருக்க , உன் காலடியில் அணி விக்கும்பொருட்டு எங்கள் இதய மலர் களைக் கொய்து வைத்திருக்கும் எங்கள் ஆவலை நீஅறிவாயா? பலகாலம் பற்பல தவங்கள் செய்து ஏழைகள் நாங்கள் காத்திருக்க இன்னும் உனக்கு உறக்கமா? விதவிதமான பதினெட்டு மொழி பேசும் மாநிலங்களை உடையவளே குழந்தைகள் நாங்கள் எழுப்புகிறோம் பள்ளி எழுந்தருளாயோ? என்பதில் பல செய்திகளையும் விரவித் தருகிறான்
பாரதி.

இந்தக் கவிதையை வாசிக்கிறபோது செய்யுளில் யாத்தக் கவிதை என்பதற்கும் அப்பாற்பட்டு மனத்திரையில் ஒரு பெரிய சித்திரத்தை தீட்டிக் காட்டி ,.தீட்டப்படும் சித்திரத்தின் ஊடாக விடுதலைப் பற்றாளர்களின் மனதை கிளர்ச்சியுறச் செய்து விடுதலைப் போரை மேலும் மூண்டெழச் செய்யும் உத்தி இது. காட்டுவழிப் பயணத்தின் போது விலங்குகள்,திருடர்களுக்கு அச்சத்தை தரும் பொருட்டும் சுய அச்சத்தைத் தணிக்கும் பொருட்டும் பாடப்படும் வழி நடைப்பாட்டு போலவும் ,போர்க் காலங்களில் படைகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு பாடப்படும் படை நடைப்பாட்டு போலவும் இந்த சித்தரிப்பு, வாசிப்பின் போது உற்சாகம் தருகிறது. இது ஒர் அமைப்பாளன் செய்ய வேண்டிய பணி.நம்பிய கொள்கை தழைக்கும் பொருட்டு அணிகளை உற்சாகப் படுத்த வேண்டிய, தரவுகளைச் சொல்லி
போராட்டத்தை கூர் தீட்ட வேண்டிய தலைவனின் பணியைச் செய்தான் பாரதி.

அரசியல் களத்திலும்,பண்பாட்டுக் களத்திலும்(இதன் உட்கூறான கவிதை உட்பட) மாற்றம் நிகழ்த்த இயங்குவோர் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் பற்றிய புரிதலை தன் மாநிலம், தேசம், சமூகம், உலகம் நடந்து வந்த பாதைகளின் ஊடாகவும் அந்தந்த கால கட்டத்திய ஆளுமைகளின் படைப்புகள்,கண்டுபிடிப்புகள், வரலாறுகள் வழியாகவும் திரண்ட அனுபவத்தைப் பெற்று இதன் வழி புதிய பாதையை, புதிய உத்தியைக் கண்டடைவது காலம் தோறுமான மானுடர்களின் பணி. இதைத் தாண்டிய அகமனத் தேடல், எதன் ஒன்றினும் பாதிப்பும் இன்றி சுயம்புவாக உணர்தல்தான் அசல் என்று கதைப்பது, தன்னை சமூகத்திலிருந்து தனியாக பிரித்துப் பார்க்கின்ற எதிரரசியல் போக்கு. வரலாற்றை, அறிவியலை மறுக்கின்ற மாயாவாத, வேதாந்த போக்கு.ஜெயமோகன் வ்ழி மொழியும் இந்தப் போக்கை அன்றே எட்டி மிதித்தவன் தான் மகாகவி பாரதி.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி கவிதையில் வீதியெல்லாம் அணுகுற்றனர் மாதர் தெள்ளிய அந்தணர் வேதமும், நின்றன் சீர்திரு நாமமும் ஓதி நிற்கின்றார். இதில் அந்தணர் என்பதை இன்றைய அடையாள அரசியல் நோக்கில் பார்க்காமல், அறிவாளிகள் என பார்க்கிறார் பாரதி. நவீன தமிழகத்தின் விழிப்பின் முன்னோடியாக செயற்பட்ட சுதேசமித்திரன், இந்து பத்திரிகை அதிபரும்,பாரதிக்கு உற்ற துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்,வழக்கறிஞர் துரைசாமிஅய்யர்,பெண்விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நீதிபதி சதாசிவ அய்யர் , விடுதலைப்போரில் ஆணுக்கு நிகராய் பெண்களின் பங்களிப்பை உணர்ந்து அமைப்பை முன்னெடுத்த அன்னிபெசண்ட், மங்களாம்பிகை போன்றோர்களை மனதில் கொண்டே மேற்கண்ட வரிகளை
வடிவமைத்திருக்கிறார் பாரதி.

கடைசி அடியில் மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? மாநிலம் பெற்றவள் இஃதுணராயோவிதமுறு நின்மொழி பதினெட்டும்
கூறி வேண்டியவாறு உனைப் பாடுதும் காணாய் மொழிவாரி மாநிலம் என்ற கோரிக்கையை காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முன்னெடுப்பதற்கு 30 ஆண்டுகள் முன்னரே பாரதி தன் கவிதையில் இதைப் பதிந்திருக்கிறான். மரபுகளிலிருந்து பெற வேண்டியதைப் பெற்று அதன் போதாமைகளை புதிய தேவைகளிலிருந்து நோக்கி தன் காலத்திய அரசியல் களத்தையும், இலக்கிய உலகத்தையும் ஒரு சேர வளர்த்தவன் பாரதி.புதியதும், புதிய மரபும் பழைய மரபின் சாரத்திலிருந்தே தன்னை வளர்த் தெடுக்க இயலும் என்பதை நாம் பாரதி போன்ற வர்களின் கவிதைமரபினூடாக புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்கிறோம்.*

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 24, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்: , ,