அமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒருபகுதியாக அந்நாட்டு மாணவர்களும் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடத்தும் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் கல்விக்கான பட்ஜெட்டில் வெட்களுக்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். நவம்பர் 28 அன்று முழுமையான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாணவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரவை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.
உயர்கல்வி பற்றிய அரசின் அணுகுமுறை அத்துறையை சீரழித்துவிடும் என்றும், மக்களின் போராட்டங்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டிக்கிறோம் என்றும் அந்தப் பேரவையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களும் அன்றைய தினம் இயங்காது என்று மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மாணவர்கள் அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கும் நவம்பர் 28 அன்று தான், பட்ஜெட்டில் கடுமையான வெட்டுகளை மேற்கொள்வது பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகிகள் கூடிப் பேசுகிறார்கள். மாணவர்களின் கல்விக்கட்டணமும் அதே நாளில் கடுமையாக ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவுகளை மாணவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள் என்பதை வேலை நிறுத்தம் காட்டும் என்பது மாணவர் அமைப்புகளின் கருத்தாகும்.
போராடும் மாணவர்கள் மீது மிளகுத்தூளைத் தூவியதற்கும் அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. அந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் இரண்டு காவல்துறை அதிகாரிகள் நிர்வாக ரீதியான விடுப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது