RSS

Tag Archives: மநு கர்நாடகா காதலர் ராமர்சேனை பாஜக ஆபாசப்படம்

மநுவின் வாரிசுகள்


“நாங்கள் வித்தியாசமான கட்சி” என்று ஓயாது பீற்றிக்கொள்ளும் பாஜகவின் லட்சணம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சட்டமன்றத்தில் மிக முக்கியமான பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருக்கிறபோது மூன்று பாஜக அமைச்சர்கள் அலை பேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சில தொலைக்காட்சிகள் அந்தக் காட்சியை அப்படியே ஒளிபரப்பி விட்டன.நாடே கொந்தளிக்கிறது. வேறு வழியில்லாமல் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதியும், மகளிர்- குழந்தைகள் நல அமைச்சர் சி.சி. பாட்டீலும், விளையாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண பலேமரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பண்பாட்டைப் பற்றி வாய்கிழியப் பேசும் பாஜகவின் முகமூடி மட்டுமல்ல உடை முழுமையுமே கழன்று விழ நாட்டு மக்கள் முன்னால் நிர்வாணமாய் நிற்கிறது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தன் மனைவி என்று சொல்லி இன்னொருவர் மனைவியை கூட்டிக்கொண்டு போன அசிங்கம் ஏற்கெனவே அரங்கேறி நாடே காறித் துப்பியது. பொதுவாக பாஜகவை காவிக்கட்சி என கூறுவது வழக்கம். ஆசிரமங்களில் சில போலிச்சாமியார்கள் நடத்துகிற காமக்களியாட்டங்கள் வீடியோ காட்சிகளாய் நாட்டையே உறை யவைத்ததுபோல் காவிக்கட்சியும் தன் பங்கை நிறைவேற்றி இருக்கிறதோ?

காதலர் தினத்தன்று இளைஞர்கள் கொண்டாடுவதை பண்பாட்டு விரோதம் என்று கூப் பாடு போட்டு காதல் ஜோடிகளை தாக்குகிற அயோக்கியத்தனம் கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறும். ஒருமுறை காதல் ஜோடிகளை கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறோம் என இந்தக் காலிக்கூட்டம் களத்தில் இறங்கியது. பூங்காவில் பேசிக்கொண்டிருந்த அண்ணன்- தங்கையை கட்டாயத் தாலி கட்ட வைத்த அராஜகத்தை மறந்துவிட முடியுமா? இந்த ஆண்டும் அந்த ‘ராமர்சேனை’ தன் கரசேவையைத் தொடங்கிவிட்டது.

கல்லூரி மாணவிகள் உடை உடுத்துவதில் கூட நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என இந்தக் காலி(வி)க்கூட்டம் செய்கிற அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. இப்போது இவர்களுடைய முழு யோக்கியதையும் கண்டு நாடே சிரிக்கிறது.

அதுமட்டுமல்ல, ஊழலைப் பற்றி இவர்கள் உரக்கப் பேசுவார்கள். ஆனால் பங்காரு லட்சுணன் முதல் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் வரை பாஜகவுடைய இரட்டை வேடத்தை ஊரறிய படம்பிடித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். மதவெறியும், பதவிவெறியும், பணவெறியும், ஒழுக்கக் கேடுகளும் மிகுந்தவர்களுடைய கூடாரம்தான் பாஜக என்பதை ஒவ்வொரு சம்பவமும் நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக்கொள்கையிலும் எந்த விதத்திலும் மாற்றுக்கொள்கை இல்லை. சமூகத் தளத்திலும் மிகவும் பிற்போக்கானவர்களே இவர்கள். பெண்களை வெறும் போகப் பொருளாகவும் ஆணின் அடிமைகளாகவும் பார்க்கிற சனாதன மநுவின் பார்வைதான் இவர்களின் அடிப்படைக் கோட்பாடு என்பதால், இவர்கள் ஆசிரமத்தில் இருந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் ஆபாசப்படம் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், இந்த பஞ்சாங்கத்தனம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியவை. மக்கள் இந்த ‘யோக்கிய சிகாமணிகளை’ அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். வெறுத்து ஒதுக்க வேண்டும்.

 

குறிச்சொற்கள்: