RSS

Category Archives: மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்

கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்! – சமஸ்


வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’ வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது.  அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங்களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!

அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட் டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுகளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சத விகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது. கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.
அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர்புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. அமெரிக்கப்பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.

பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத்
தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின்  டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு…
கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!

‘முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதியத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட்டங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப்
போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.

முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு  அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

நன்றி : ஜூனியர் விகடன்
(23.10.2011)

 

குறிச்சொற்கள்:

‘ஏங்கெல்ஸ்’ன் கவிதைகள்


ரஷ்ய நாட்டின் ரீனிஸ் மாநிலத்திலுள்ள பார்மென் நகரில் 1820ஆம் ஆண்டு நவம்பர் 28ம் நாள் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்தார்.

பார்மெனில் நகராட்சிப் பள்ளியில் படித்தபின் எல்பர் பீல்ட் இலக்கணப் பள்ளியில் பயின்றார். தனது அசாதாரணத் திறமை காரணமாக வெகு சீக்கிரத்தில் சகமாணவர்களில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். வரலாறு மற்றும் கிரேக்க, லத்தீன், ஜெர்மானிய இலக்கியங்களில் அவர் பேரார்வம் காட்டினார். அந்தக் காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவரது கடற்கொள்ளைக்காரர்கள் காதை கிரேக்க நாட்டின் சுதந்திர லட்சியத்தின்பால் ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தும் காவியமாகும்.

ஜெர்மன் நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை மட்டுமல்லாது சமகாலத்து ஜெர்மானிய எழுத்தாளர்களான, கதே, ஷில்லர், வைலாண்ட், டீய்க், குட்ஸ்கோவ், கார்ல் பெக் ஆகியோரின் படைப்புக்களையும் அவர் கற்றார். அவரது சொற்றொடரில் கூறுவதென்றால் “உலகத்தின் அனைத்து இலக்கியங்களும்” அவரால் படிக்கப்பட்டன. புதினங்களோடு தத்துவஞானம் மற்றும் வரலாற்று நூல்களையும் படித்து அந்நிய மொழிகளில் தனக்குள்ள ஞானத்தை விருத்தி செய்துகொண்டார். ஓவியங்கள் வரைதல் மற்றும் இசைக்காகவும் அவர் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவு செய்தார்.

இசைக்கச்சேரிகளுக்கும், இசை நாடகங்களுக்கும் செல்லுவதோடு அவர் இசைப்பயிற்சிக் கூடத்துக்கும் சென்று பயின்றார். பதினெட்டு வயதிலேயே அவர் இன்னிசைப் பாடல்களையும் இயற்ற முயன்றார். அவற்றைத் தனது பிரியத்திற்குரிய சகோதரிக்கும் நண்பர்களுக்கும் அனுப்பத் தவறமாட்டார். அப்படி அனுப்பப்பட்ட கவிதைகளில் சிலவே இங்கு வெளியிடப்பட்டிருப்பவை.

இந்தக் கவிதைகள் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பாகும்.

ஏட்டுப்படிப்பு

ஏட்டுப் படிப்புக் கவைக் குதவாதே;

எத்தனைப் புத்தகத் தேர்ச்சி பெறினும்

விவேகம் பெற்றதாய் விளம்புதற்கில்லை:

வாழ்க்கையைப் படிப்பதே மகோன்னதமானது;

தத்துவக் கூறுகள் புரிந்ததன் பின்னே

புத்தகம் என்பது காகிதக் குவியலே!

பாடப் புத்தக தடத்தின் வழியே

தாவர இயலைத் தேர்ந்தவனாலே

புல்லின் மூச்சொலி கேட்பது கூடுமோ?

அவன்

பொய்மை கலவா உண்மை விளக்கம்

புரிந்து பாடம் புகட்டுவதில்லை;

எல்லாம் அறிந்து (அ)தை எவர்தான் சொல்வார்?

இல்லை…இல்லை…ஒருவரும் இல்லை…

மனிதனின் சொந்த இதயத் துள்ளே

மணிகள் யாவையும் மறைந்தே கிடக்கும்;

வாழ்வியல் கலையைத் தேடுவோன் யாரோ

அவனே அதனுள் அனைத்தும் அறிவான்;

உணர்ச்சியின் ஒழுங்கு ரகசியம் யாவும்

நடுநிசி எரியும் எண்ணெய் விளக்கில்

படிப்பதால் வந்தே பதியுமோ நெஞ்சில்…

இதயம் தனக்குச் சொல்வதைக் கேட்டும்

அதனைப் புறத்தே ஒதுக்கித் தள்ளுவோன்

நிச்சயமாக நெறிபிறழ்ந் தோனே!

வார்த்தைகள் யாவினும் பண்பும் விவேகமும்

வாய்ந்தது மனிதனை முழுதும் விளங்கலே

மனிதத் துவமே மகோன்னத மானது;

மேதா விலாசம் என்பதும் அதுவே!

 

 

ஜூலை நாட்கள்

புயலின் உறுமல் பொங்கி மலையென

எழுகிற அலைகடல்! என்னே வலிமை!

இரக்கமே இல்லா அரக்கன் கிளம்பி

புயலாய் வருகிற ஊழிக் கூத்தோ?

நிமிர்ந்தே நிற்கும் நெட்டை மனிதராய்

நுரைக்கும் கடலிடை அலைப்புற் றெங்கும்

இறங்கியும் ஏறியும் செல்லும் படகு!

ரைன்நதிக் காற்றின் சுழற்சிப் போக்கே

வான்முகில் திரட்சியைக் கூட்டி வருமோ?

ஓக்ஸ் மரங்கள் ஒடிந்து விழவும்

குப்பை கூளம் பறந்தே ஓடவும்

ஆங்காரத்துடன் அலைக்கரம் வீசி

அடித்து நொறுக்குமே! அசைந்தே ஆடும்

படகில் இருந்த படியே உங்களை

ஒரு கணம் நினைக்கிறேன் . . .ஓ. . . என் ஜெர்மனி

தேச ராசாக்களே . . .! இளவரசர்களே. . .!

நீங்கள்

உட்கார்ந்திருக்கிற தங்கசிம் மாசனத்தை

அந்த

ஊமை ஜனங்கள் சுமப்பதும் எப்படி?

பூமியாவும் வென்ற மிதப்பில்

அந்த

வெற்றி வீரனையும் தூக்கியே மகிழ்ந்தனர்!

ஆனால் இப்போது அனைவர்க்கும் மேலாய்

இறுமாப் போடு அரியணை ஏறி

திமிர்பிடித்து ஆடத் துவங்கி இருக்கும்

எதேச் சதிகாரியே! ஏர்னெஸ்ட் அகஸ்டே . . .

வாக்குறுதிகள் கொடுத்தாய் அனைத்தையும்

தூக்கி எறிந்தாய் . . . துரோகம் இழைத்தாய் . . .

இப்போது இங்கே பிரான்சு முழுக்க

ஒரு புயல் காற்று வீசி அடிக்கிறது . . .

மக்கள் அனைவரும் திரண்டெழுகின்றனர்;

சூறைக் காற்றில் சிக்கிய படகாய் உன்

சிம்மா சனமும் சரியப் போகிறது . . .

சினம் கொப்பளிக்கச் சூளுரை ஒன்று

கனலாய் விடுக்கிறேன்; கடுகி ஓடு நீ . . .

சட்டம் வளைத்துச் சுக்கு நூறாக்கினாய் . . .

மக்கள் இப்போ தீக்கனல் விழியுடன்

உறைக்குள் போடா உருவிய வாளுடன்

உனக்கெதிராகத் திரும்பி விட்டனர்

நீரிடைப் படகில் நானிருப்பதுபோல்

சொல்; உன் தங்கச் சிம்மாசனத்தில்

நிம்மதியாகவா இருக்கிறாய் அடா நீ . . . ?*

 

 

மீசை

தேசந் தோறும் சீர்குண வான்களின்

மீசைகள் என்றும் பெருமைக் குரியன!

தேசம் காக்கும் போர்ப்படை வீரர்கள்

செறுப்பகை வெல்ல செந்நிறம் அல்லது

கருநிற மீசையை முறுக்கியே காட்டுவர்!

ஆகவே

போர்ப் புகழ் பெற்றிட மீசைகள் அவசியம்!

மீசை படர்வதைச் சுமையெனக் கருதி

உதறித் தள்ளும் பிலிஸ்தீன் மாந்தர்

கண்ணாடிச் சுத்தமாய் முகம் வழிக்கின்றனர்

நாங்கள் எல்லாம் பிலிஸ்தீன்கள் அல்ல-

எங்கள் மீசையைப் படரவே வளர்ப்போம்!

கிருதா வளர்க்கும் கிறிஸ்துவ னெல்லாம்

ஆண்மகனாக நீண்டநாள் வாழ்க!

மீசையை மழுங்கச் சிரைத்துக் கொண்ட-

மீசை வளர்க்கத் தடையை விதித்த

பிலிஸ்தீன்களை நாம் பேடிகள் என்போம்;

கண்டனம் செய்தே நரகம் தள்ளுவோம்!

 

குறிச்சொற்கள்:

இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த ஆப்பு-சீத்தாராம் யெச்சூரி


இந்தியாபாகிஸ்தான் கூட்டறிக்கை குறித்து பிரதமர் மாற்றி மாற்றிப்பேசுவது, அமெரிக்க நிர்பந்தத்திற்கு .மு.கூ. அடிபணிகிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.

எகிப்து மாநாட்டினை அடுத்து வெளியிடப்பட்ட இந்தியாபாகிஸ்தான் கூட்டறிக்கை இன்னமும் நாட்டையும் நாடாளுமன்றத்தினையும் உலுக்கிகொண்டிருக்கிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்காதவரை, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு நடைபெற்றது. இதற்கு முன்பாக பிரதமர் இதில் தலையிட்டு பேசியது, அதே போன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கும், அமைச்சரின் பேச்சுக்கும் பெரிய முரண்பாடு இருந்தது. இதுதான் வெளிநடப்பிற்கு காரணம். இந்த இரட்டை நிலைப்பாடு ஏதோ எதிர்க்கட்சிகள் உருவாக்கிய தோற்றம் என்பது போல் .மு.கூ. அரசு கூறிக்கொண்டாலும், கூட்டறிக்கை குறித்த பிரதமரின் முரண்பட்ட விளக்கங்கள், அவர்களின் இரட்டை நிலையினை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளன.

ஜூலை 17 பிரதமரின் அறிக்கையில் மூன்று முரண்பட்ட நிலைகளைக் காணமுடியும். ஒரு இடத்தில் அவர், “பாகிஸ்தானுடன் இந்தியா கூட்டுறவை நாடுகிறதுதொடர்ந்த விவாதங்கள் மூலம்தான் இதை முன்னெடுத்துச் செல்ல முடியும்இந்த விஷயத்தில் சர்ச்சைக்கு இடமில்லை என்கிறார். ஆனால், அதற்கு முன்பாக, “இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் எதையும் தங்கள் சொந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியினை, எழுத்தில் மட்டுமல்லாது, உணர்வுப் பூர்வமாகவும் நிறைவு செய்வதுதான் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகளின் தொடக்கப் புள்ளியாக அமையும் எனவும் கூறுகிறார். இதுவரை குழப்பம் எதுவுமில்லை. மாறாக, அடுத்தாற்போல் விளங்கிக் கொள்ள முடியாத மற்றொரு விளக்கத்தைக் கொடுக்கிறார். அதாவது, “பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளை, பேச்சுவார்த்தைகள் என்ற ஒட்டு மொத்த தொடர்பு நிரலுக்குள் இணைத்து விடக்கூடாது. அடுத்த கட்டத்தொடர்புகள் அதுவரை காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜூலை 29ம் தேதி அவர் பேசியதுதான் குழப்பத்தின் உச்சகட்டம். ஏற்கெனவே கூறியஅர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளின் தொடக்கப்புள்ளியாக என்பதை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக, “உறவுகள் முழுமையாக சகஜ நிலையை அடைய வேண்டுமென்றால் எனக்கூறி பாகிஸ்தான் தனது வாக்குறுதியினை நிறைவு செய்ய வேண்டும் என்ற முந்தைய விளக்கத்தின் பிற வாசகங்களைப் பயன்படுத்துகிறார்.

முழுமையான சகஜ உறவுகள் பேச்சு வார்த்தைகள் மூலமாகத்தான் சாத்தியம். ஆனால், ஜூலை 17, 29 ஆகிய இரண்டு தேதிகளுக்கிடையில், பிரதமரின் நிலைபாட்டில் ஒரு மாற்றம் தெரிகிறது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிகிறது என்பதைத் தவிர, அவருடைய முரண்பட்ட நிலைகளுக்கு வேறு விளக்கம் இருக்கமுடியாது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில், பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தானுடைய கவனம் அதனுடைய கிழக்குப் (இந்திய எல்லை) பகுதிக்கு திரும்பிவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா அக்கறை காட்டுகிறது. எனவேதான், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் இணைக்கக்கூடாது என நிர்பந்தம் செலுத்துகிறது.

உண்மையைச் சொல்வதென்றால், அணு சக்தி ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட கேந்திர உறவுகள் என்ற விரிவான திட்டத்தின் ஒரு பகுதியே இது. அண்மையில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் வருகை அதை மேலும் முன்னெடுத்துச் சென்றுள்ளது. இந்திய அணு சக்தி உற்பத்தியில் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறுதியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் உரிமையினை அமெரிக்காவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. “இது அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் பெரும் சாதனை” என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். “லாக்ஹீட் மார்ட்டீன், போயிங் போன்ற கம்பெனிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனவும் அவர் மகிழ்ச்சியினைத் தெரிவித்திருக்கிறார். அணுவர்த்தகம் 10 பில்லியன் டாலர் வரை செல்லும் என்ற அமெரிக்காவின் அபிலாஷைகளின் பின்னணியில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.

திருமதி கிளிண்டனின் இந்திய விஜயத்திற்கு முந்தைய தினமான ஜூலை 18ம் தேதி, ‘நியூயார்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்கா விற்கு ஆதரவாக ஐந்து அம்ச ஆலோசனையை முன்வைத்தது.

முதலாவதாக, “சர்வதேச ரீதியாக இந்தியா இன்னும் கூடுதல் பொறுப்புக்களை ஏற்க வேண்டிய காலம் வந்துவிட்டது. சென்ற ஆண்டு உலக வர்த்தக பேச்சுவார்த்தைகளை இந்தியா புரட்டிப்போட்டுவிட்டது. இப்போது அந்தப் பேச்சுவார்த்தைகளை மீட்டுயிர்ப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்கிறது. ‘நியூயார்க் டைம்ஸ் வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், விவசாயம் சாராத சந்தையில் அனுமதி மற்றும் விவசாயம் குறித்த பாதுகாப்பு போன்ற அம்சங்களில் டோஹா மாநாட்டில் இந்தியா எடுத்த அழுத்தமான நிலைபாட்டினை கைவிடவேண்டும் என்பதே அதன் பொருள்.

இரண்டாவதாக, “புவி வெப்பமடைவதில் பெரும் பங்கினை வகிக்கும் இந்தியா, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் சேர்ந்து பசுங்கூட வாயு வெளியேற்றத்தினைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான பொதுவான குறியிலக்குகள், புவி வெப் பத்திற்கு அதிககேடு விளைவிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஆதரவாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. புவிவெப்ப அதிகரிப்பில், அமெரிக்காவின் தனிநபர் சராசரியில் பதினேழில் ஒன்றுதான் இந்தியாவின் சராசரி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, பயங்கரவாத நடவடிக்கை குறித்து பாகிஸ்தானை நிர்பந்தப்படுத்துவதற்கு அமெரிக்கா வாக்குறுதி அளித்திருக்கிறது. இதற்கு கைமாறாக, “பாகிஸ்தானின் அச்சங்களைப் போக்குவது இந்தியாவின் கடமை” என அந்த நாளேடு குறிப்பிடுகிறது. கூட்டறிக்கையில், தேவையில்லாமல் பலுசிஸ்தான் பிரச்சனை நுழைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான் என்பதை நாம் இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

நான்காவதாக, “உலக அளவில் அணுப்பர வலை” தடுப்பதற்கு இந்தியா மேலும் பலவற்றைச் செய்யவேண்டும். அதாவது, அணுப்பரவலுக்கெதிரான ஒப்பந்தம்(NPT) , அணு சோதனை ஒட்டுமொத்தத் தடை ஒப்பந்தம் (CTBT), அணு எரிபொருள் குவிப்பு குறித்த ஒப்பந்தம் (FMCT) என அனைத்து ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்பதே இதன் சாராம்சம். அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத நாடுகளுக்கு ஆதரவினையும், பிற நாடுகளுக்கு சமத்துவ மற்ற கடமைகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட சட்டங்கள் இவை. ஆகையினால் தான், இந்தியா இவற்றைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இறுதியாக, இந்தியா தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. “உலகின் மாபெரும் சக்தியாக உருவாக வேண்டுமென்றால், “அணிச்சேராமை என்ற பாசாங்குகளை கைவிடவேண்டும் என்பதெல்லாம் அந்நாளேடு கூறியிருக்கும் அறிவுரை. “அணுசக்தி ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது ஈரானுக்கெதிரான தடை நடவடிக்கைகளில், இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. இந்தியா மனமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டாலும், ஈரானின் அணுசக்தித்திட்டங்களுக்கெதிராக, .நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்களை ஆதரித்தது. இந்தியா இதுபோல மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என அது மேலும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

முத்தாய்ப்பாக, அது கூறுகிறது: “மன்மோகன் சிங்கிற்கும் அவரது கட்சிக்கும் வலுவான மக்கள் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. மேற்கொண்டு எதுவும் செய்யாமலிருப்பதற்கு, இனிமேல் சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது (அரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு இனி தேவையில்லை என பொருள் கொள்ளவும்)

இந்தியாபாகிஸ்தான் கூட்டறிக்கை குறித்த சர்ச்சைகள் எல்லாம், வெட்டப்பட்ட துண்டுகளை ஒட்டவைக்கும் விளையாட்டின் (Jigsaw Puzzle) ஒரு பகுதியேயாகும். அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறிச் செல்லும் பாதையில் நாம் காணும் காட்சிகளே இவையெல்லாம். ஆனால், உலக நாடுகளின் மத்தியில் இந்தியா வகிக்கும் பெருமை மிக்க இடத்தை காவுகொடுப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.

நன்றி : ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் (ஜூலை 6, 2009)

 

குறிச்சொற்கள்:

பொங்கி எழுந்த சோலை


இரண்டு

வாரங்களுக்கு முன்னர் மும்பை நகர மக்கள் சாலைகளுக்கு வந்து போராடினார்கள். வழியே சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்தப் போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் தலைமை தாங்கவில்லை. வாழ்க்கைச் சுமைஇதய அழுத்தம் இயல்பான போராட்டத்திற்கு வழிவகுத்து விட்டது.

என்ன காரணம்?

மின்சார விநியோகத்தை மராட்டிய அரசு ரிலையன்ஸ் போன்ற பிரதான தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த நிறுவனம் மின்கட்டணத்தை மளமளவென்று உயர்த்தியது. அதனை எதிர்த்துத்தான் மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

வேறு நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட ரிலையன்ஸ் மின் கட்டணத்தை உயர்த்துகிறது என்று மும்பை நகர மக்கள் முழக்கமிடுகிறார்கள். போராட்டம் தொடரும்.

டெல்லி தலைநகரின் மின்விநியோகமும் தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அங்கேயும் குத்தகை பெற்ற நிறுவனங்களிடம் மாநில அரசு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் விநியோகத்திற்கான குத்தகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் பலமுறை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், டெல்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இறைவனைக் கூட பார்த்து விடலாம். ஆனால், மின்சாரத்தைத் தரிசிக்க முடியாது என்ற நிலைதான்.

எனவேதான் டெல்லி நகர மக்களும் சாலைகளுக்கு வந்து போராடுகிறார்கள். மக்களின் உள்ளக்கொதிப்பு வெடிக்கும் கொதிநிலைக்கு வந்திருக்கிறது.

நான்கு நாட்களுக்குள் மின்விநியோகம் சரி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஷீலாதீட்சித் எச்சரித்திருக்கிறார். ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் டெல்லி தவிக்கிறது. மின் தடை காரணமாக தண்ணீர் விநியோகமும் முழுமையாகத் தடைபடுகிறது. எனவே, பாயத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மாதிரி தலைநகர மக்கள் தயாராகிறார்கள்.

இந்த நிகழ்வுகளெல்லாம் நடைமுறையில் நாம் காணும் வேதனைச் சித்திரங்கள். தனியார் துறையின் மகத்துவங்கள்.
ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ன சொல்கின்றன? அனைத்தும் தனியார்மயம் என்பதுதான் நாட்டின் பிரச்னைகளுக்கு சர்வரோக நிவாரணம் என்று சொல்கின்றன. அவை சீர்திருத்தங்களாக இருக்காது. நாட்டின் சீரழிவிற்கு முன்னோடியாக இருக்கும். ஆனால், அவற்றைத்தான் வேகவேகமாக மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தப்போகிறது.

ரயில்வே, நிலக்கரிச் சுரங்கங்கள், அணுமின் உற்பத்தி ஆகிய அனைத்தையுமே தனியார் துறைக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

பாதுகாப்புத் துறையிலும் தனியார் மயம்!

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், சாதனங்கள் ஆகியவை பெரும்பாலும் பொதுத்துறையில் தயாரிக்கப்படுகின்றன. இனி அந்தத் துறைகளில் அன்னிய மூலதனங்களை 49 சதவிகித அளவிற்கு அனுமதிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தம் சொல்கிறது.

தொழில்துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கலாம். பன்னாட்டு நிதி நிறுவனங்களை அனுமதிக்கலாம். பிற அன்னிய முதலீட்டு நிறுவனங்களையும் அனுமதிக்கலாம். அவர்கள் முதலீடு செய்யும் அளவிற்கு அவற்றுக்கு நிர்வாகத்திலும் பங்கு தரலாம் என்றும் அந்தச் சீர்திருத்தம் சொல்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கலாம். உணவுப் பொருள் துறையையும் அன்னிய முதலீடுகளுக்கு அர்ப்பணிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தங்கள் நீட்டோலை வாசித்துக் கொண்டே போகிறது.

கடந்த பத்தாண்டுகளில் உலகை உலுக்கிய பல சரித்திர நிகழ்வுகளை தென் அமெரிக்கா சந்தித்திருக்கிறது. அந்தக் கண்டத்தின் பலப் பல நாடுகளும் இன்றைக்கு மன்மோகன் அரசு சமர்ப்பிக்கும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவைதான். அதன் விளைவு என்ன?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நோய்கள் வாட்டி வதைத்தன. அந்த நாடுகளின் செல்வங்களை அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் நாடுகளுக்கு அள்ளிச் சென்றனர். உள்நாட்டு வணிகம் மரணப் படுக்கையில் வீழ்ந்தது.

இதனைக் கண்டு ஏழைகளோடு பழகும் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் போர்க்கோலம் பூண்டனர். அவர்களின் முன்னணிப் படையாக இடதுசாரி சக்திகள் எழுந்தன.

அன்னிய முதலீடு என்றால், அந்த நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள்தான். இதனை எதிர்த்து வெனிசுலா நாட்டில் புரட்சி வெடித்தது. கத்தோலிக்க திருச்சபையும் இடது சாரி சக்திகளும் இணைந்து போராடின. வெனிசுலாவிற்கு கியூபா கலங்கரை விளக்கமாகக் காட்சி அளித்தது.

ஆட்சி அதிகாரத்தை மக்கள் இடதுசாரி சக்திகளுக்கு அளித்தனர். அனைத்து அன்னிய கம்பெனிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

இன்றைக்கு வெனிசுலா மட்டுமல்ல, அதன் அடிச்சுவட்டில் பிரேசில், சிலி, பொலிவியா போன்ற மேலும் ஆறு நாடுகளில் இடதுசாரி சக்திகளின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. எவற்றையெல்லாம் சீர்திருத்தங்கள் என்று மன்மோகன் சிங் அரசு உடுக்கை அடிக்கிறதோ, அவையெல்லாம் நாட்டிற்குக் கேடுகள் என்று அந்த நாடுகள் கப்பலேற்றி அனுப்புகின்றன. அதன் பின்னர்தான் அந்த நாடுகளின் சாமானிய மக்கள் வாழத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே ஆட்சிக்கு வந்தவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல. இடதுசாரி எண்ணம் கொண்ட தேச பக்தர்கள். அவர்களுக்குக் கரம் கொடுப்பது கத்தோலிக்கத் திருச்சபைகள்தான்.

மன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

அங்கே வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும், தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.

நமது பாட்டன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அரசு நிறுவனங்களெல்லாம், ஆலைகளெல்லாம் புதிய ஆலயங்களாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இனி அவற்றின் பங்குகளை ஆண்டிற்கு 25000 கோடி அளவிற்கு விற்பார்களாம்.

அந்தப் பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் உழைக்கும் மக்கள் அறுபதாண்டுகளாக உருவாக்கிய நமது சொத்துக்கள். அவற்றை விற்க மன்மோகன்சிங் அரசிற்கு அதிகாரம் அளித்தது யார்?

நெய்வேலியையோ, சேலத்தையோ, திருச்சி பெல் நிறுவனத்தையோ தவணை முறையில் விற்க முன்வந்தால், அதை தி.மு.கழகம் ஆதரிக்குமா?

மேற்கு வங்கத்துப் பொதுத்துறை நிறுவனங்களை அமெரிக்கத் துரைமார்களுக்கு விற்பதை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வாரா?

தென் அமெரிக்க நாடுகள் விரட்டியடிக்கின்ற பிசாசுகளை இங்கே தேவதைகள் என்று அழைத்து வருகிறார்கள். கொடுமை.

அனைத்தும் தனியார் துறைக்கே என்பதனை மோட்சத்தின் திறவுகோலாக அமெரிக்கா சித்திரித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நமது காயகல்பப் பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் கண்களை இழந்தவர்கள் இங்கே நமது கண்களை விலைபேச வரப்போகிறார்கள். அவர்களுக்கு விரிக்கப்பட்ட பட்டுக் கம்பளம்தான் இந்திய அரசின் நிதித்துறை சீர்திருத்தங்களாகும்.

தேவையில்லாத விருந்தாளியை அழைத்தால்,நமக்குத் தேவையானவற்றையெல்லாம் இழக்க நேரிடும்!,

 

குறிச்சொற்கள்:

கம்யூனிஸ்ட்டுகள் முடிவு இப்படித்தான் இருக்கும்


கம்யூனிஸ்ட்டுகள் முடிவு இப்படித்தான் இருக்கும் என எச்சரித்தது பிரண்டாஸ் நதி!

நதி எச்சரிக்குமா? ஆம். அழுகி மிதக்கும் பிணங்களும், கொல்லப்பட்டவர்கள் ரத்தத்தால் சிவப்பு நிறமாகி விட்ட அந்த நதியும், சகிக்க முடியாத துர்நாற்றமும், நதி ஓடும் கிழக்கு ஜாவா முழுமையையும் பயங்கர அச்சத்தில் உறையவைத்துக்கொண்டிருந்தது.

1965-66ல் இந்தோனேசியாவில் ஐந்து லட்சம் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் கோரப்படுகொலை செய்யப் பட்டனர்.

உலகில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் நாடு. அதேசமயம் வேறு பல மதத்தவரும், இனத்தவரும் வாழ்கிற வானவில் பூமி. தீவுக்கூட்டம் அதிகம்; அடிக்கடி சுனாமி மிரட்டும். சுனாமியப் பேரழிவுகள் மட்டுமல்ல; உலகின் மிகக் கொடிய மனிதப் படுகொலையின் பூமியும் இந்தோனேசியா என்பது வரலாற்றுச் செய்தி.

19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும், டச்சு நாட்டு காலனியாக இருந்தது இந்நாடு. பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளும் அப்படியே.

1919ஆம் ஆண்டு டச்சு நாட்டு சோஷலிஸ்டான ஹெனக் செனீவிலிட் என்பவரால் 85 உறுப்பினர்களைக் கொண்ட இந்தோனேசிய சமூக ஜனநாயகக் கழகம் துவக்கப்பட்டது. டச்சு ஆதிக்கத்திலுள்ள கிழக்கு இந்தோனேசியாவில்தான் இது பிறந்தது. துவக்கத்தில் இந்தோனேசிய விடுதலைக்காக இக்கட்சி குரல் கொடுக்கவில்லை. இக்கட்சியில் ஆரம்பத்தில் டச்சுக்காரர்களே அதிகம் இருந்தனர்.

1917 ரஷ்ய புரட்சி காலகட்டத்தில் இக்கழகம் பிளவுபட்டு இந்தோனேசிய சமூக ஜனநாயகக் கட்சியாக உருவெடுத்தது. இந்தோனேசிய துறைமுகங்களுக்கு வந்துபோன மாலுமிகள் மற்றும் ராணுவ வீரர்களைக் கொண்டு விரைவிலேயே செம்படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. உடனடியாக ஆயுதக் கலகத்தில் இறங்கியது. பலமின்மையும் பக்குவமான சூழல் இன்மையும் மக்கள் ஆதரவு இன்மையும் இவர்களுக்கு எதிராக அமைந்தது. டச்சு ஆதிக்கப்படைகளால் கலக முயற்சி முறியடிக்கப்பட்டது. தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர். 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இக்கலகம் தலைவர்களிடையே கருத்து மோதலுடன் கூடிய பிளவை உருவாக்கியது. செனீவிலிட் முயற்சியால் `இஸ்லாமிக் ஒன்றியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அது மக்களைக் கவர்ந்தது. இது கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது. 1920ஆம் ஆண்டு மே 23-ஆம் நாள் நடந்த மாநாட்டில் கட்சி பகிரங்கமாக தன்னை இந்தோனேசிய கம்யூனிஸ்ட் சங்கம் என்று அறிவித்தது. பி.கே. ஹெச். என சுருக்கமாக அழைக்கப்படும் இக்கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆசியாவில் உதித்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி. 1921ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் சர்வதேச அகிலத்தில் இக்கட்சியின் சார்பாக செனீவிலிட் பங்கேற்றார்.

`இஸ்லாமிய ஒன்றியம் என்கிற பெயரில் கட்சிக்குள் தனியாக இயங்கிய வெகுஜன மேடையின் இறுதி நோக்கம் கம்யூனிசமே என்பதை அறிந்து கொண்ட இஸ்லாமிய மதவெறியர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத்துவங்கினர். 1921ல் இஸ்லாமிய ஒன்றியம் உடைந்தது. ஆயினும் கட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன.

வெளிநாட்டு சிறைகளில் வாடிய தலைவர்களும், தலைமறைவாக வாழ்ந்த தலைவர்களும் நாடு திரும்பியதும் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கியது.

கட்சியாக இயங்கியபோதும் சங்கம் என்ற பெயர் இருந்ததால் 1924ல் மாநாட்டில் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி என பெயர் மாற்றப் பட்டது.

கட்சிக்குள் அதிதீவிர தலைமை தலையெடுத்தது. உடனடியாக டச்சு ஆதிக்கத்தை தூக்கி எறிவதென முழக்கமிட்டு, ரயில்வே வேலை நிறுத்தம் உட்பட போராட்டங்களைத் துவக்கினர். இம்முறையும் தோல்வி. தலைவர்கள் தலைமறைவாயினர். 13,000 பேர் கைது செய்யப்பட்டனர். 4,500 பேர் கடுஞ்சிறைத் தண்டனை பெற்றனர். ஆயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டனர். வழியிலேயே பலர் இறந்தனர்.

கட்சி ஓய்ந்துவிடவில்லை. தலைமறைவாக இருந்தே தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை உருவாக்கி வழிநடத்தினர். 1945ல் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசியல் களம் மறுபடியும் சூடானது. இப்போது ராணுவத்துக்குள்ளும் பிகேஐ செல்வாக்கு விரிந்தது. 1948ல் மீண்டும் விடுதலை முயற்சி. மீண்டும் தோல்வி. 36ஆயிரம் பேர் சிறையிலடைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கில் நாடு கடத்தப்பட்டனர்.

வெட்ட வெட்ட முளைக்கும் வாழையென மீண்டும் மீண்டும் வளர்ந்தது அங்கு கம்யூனிஸ்ட் கட்சி. தீபக் நசுந் துரா அதிக் என்பவர் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிலையை கணித்து புதிய தந்திரங்களை வகுத்தது. அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த சுகர்னோ கம்யூனிஸ்ட் அல்ல. ஆயினும் ஜனநாயகவாதி. 1955 தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் அவர் பிரதமர் ஆன பிறகு அவரது செயல்பாடு மேலும் மேலும் முற்போக்குத் திசையில் பயணித்தது.

1950களில் 5ஆயிரம் ஆக இருந்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1954ல் 15 லட்சமாக உயர்ந்தது. தேர்தலில் 16 சதம் வாக்குகளையும் 39 இடங்களையும் பெற்றது.

ராணுவத்தில் இருந்த அமெரிக்க ஆதரவு சக்திகள் 1958ல் கம்யூனிஸ்ட்டுகளை இராணுவத்தில் இருந்து களையெடுக்கவும், ஆட்சியைக் கைப்பற்றவும் செய்த முயற்சியை சுகர்னோ திறமையாக முறியடித்தார்.

1959ல் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலேயே சுகர்னோ பங்கேற்றார். தேசியம், மதம், கம்யூனிசம் என்ற மூன்று கருத்துக்களையும் ஒன்றாகக் குழைத்து இந்தோனேசிய மொழியில் இச்சொற்களின் முதல் எழுத்துக்களைக் கோர்த்துநசகோம் என முழக்கமிட்டார். சுகர்னோ ஆட்சியில் கம்யூனிஸ்ட்டுகள் இளைய பங்காளிகள் ஆனார்கள்.

கட்சியின் உறுப்பினர் பலம் 30 லட்சத்தையும் தாண்டியது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வெளியே மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சி இது என்றானது.

கம்யூனிஸ்ட்டுகள் வளர்ச்சி, இஸ்லாமிய மதவாத சக்திகள், ராணுவத்தில் அமெரிக்க ஆதரவு சக்திகள் இம்மூன்றையும் சமப்படுத்தி கையாள சுகர்னோ பெரும்பாடுபட்டார்.

பிரிட்டிஷ், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் எண்ணெய் வயல்கள் மற்றும் ஆலைகள், சொத்துக்கள் மீது கைவைக்க கம்யூனிஸ்ட் கட்சி செய்த நிர்பந்தம் அதிகரித்தது.

இனியும் தாமதித்தால் சொத்துகளை இழக்க நேரிடும், சுரண்டும் வாய்ப்பு கை நழுவிவிடும் என்பதால் வெறிகொண்ட அமெரிக்க சிஐஏ மிகப்பெரிய சதி வலையை பின்னியது.

திடீரென ராணுவ உயர் தளபதிகள் ஏழுபேர் கொல்லப்பட்டு நடுவீதியில் வீசப்பட்டனர். இதனைச் செய்தது கம்யூனிஸ்ட்டுகள் என்று அமெரிக்க ஊடகங்களும், ராணுவ வட்டாரமும் செய்தி பரப்பின. `கம்யூனிச வன்முறை என்கிற பூச்சாண்டியை ஏகாதிபத்தியம் மக்கள் முன் காட்டி மிரட்டியது.

மாணவர் அமைப்பை உருவாக்கி அதற்கு ராணுவப்பயிற்சி அளித்தது சிஐஏ. மேலும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன.

இதற்கிடையில் சுகர்தோ என்கிற அமெரிக்க கையாள் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். சுகர்னோ ஆட்சி தூக்கியெறியப்பட்டது. பயிற்று விக்கப்பட்ட மாணவ குண்டர் படை வீதிகளில் வெறியாட்டம் போட்டது.

மக்கள் கொந்தளிப்பை ஒன்றும் செய்ய முடியாது

மக்களின் தன்னெழுச்சியான கலவரம் இது.

என ராணுவம் கூறியது. ராணுவத்திற்குச் சாதகமான இரு பத்திரிகைகள் தவிர மற்ற அனைத்து ஊடகங்களும் முடக்கப்பட்டன. உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ளோர் இராணுவம் சொல்வதை மட்டுமே நம்பியாக வேண்டும்.

ஜாவா, பாலி என எங்கும் நர வேட்டை தாண்டவமாடியது. கம்யூனிஸ்ட்டுகளை மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் தொழிற்சங்க உறுப்பினர்களை, ஆதரவாளர்களை யாரையும் விட்டு வைக்கவில்லை. செப்டம்பர் 30ல் துவங்கிய இதனை செப்டம்பர் எழுச்சி என இராணுவம் கூறியது.

ஆணிவேர் சல்லிவேர் அற கம்யூனிஸ்ட்டுகளைப் பிடுங்கி எறி என இராணுவம் கொக்கரித்தது. இன்னும் அதிகாரப்பூர்வ கணக்கு தெரியவில்லை. சுமார் 5 லட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர். கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய ரத்த ஆறு அப்போதுதான் ஓடியது.

சிறையில் அடைக்கப்பட்டவர்களும் அங்கேயே மாயமான முறையில் இறந்து கிடந்தனர். இதையெல்லாம் மூடிமறைத்து மக்களின் எழுச்சி என சுகர்தோ முழங்கினார்.

பயபீதியில் மக்கள் உறைந்தனர். சிஐஏ தனது திட்டம் வெற்றிபெற்றதால் மகிழ்ந்தது. தமது சுரண்டல் பாதுகாக்கப் பட்டதால் ஏகாதிபத்தியம் கூத்தாடியது. கொன்றழிக்கப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதால் அவர்களை மனித ஜீவனாகக்கூட இந்த மனித உரிமைக் காவலர்கள் ஏற்கவில்லை. 30 ஆண்டுகள் சுகர்தோவின் ஆட்டம் தொடர்ந்தது. ஆவணங்கள் அழிக்கப் பட்டன. வரலாறு திருத்தப்பட்டது. வெற்றிக் கண்காட்சிகள் ஜோடிக்கப்பட்டன.

ஆனால் இப்போது ஆய்வாளர்கள் சிரமப்பட்டு வரலாற்றில் புதைந்துபோன மனிதப் படுகொலையை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

சிஐஏ ஆவணங்களே இந்த மனிதப் படுகொலைதான் உலகின் மிகப்பெரிய படுகொலை என ஒப்புக்கொள்கின்றது.

1965-66ல் `இந்தோனேசியாவில் தங்கள் சுரண்டலுக்கு ஆபத்து என்றதும் நடத்தப்பட்ட இப்படுகொலையை மீண்டும் மீண்டும் புதிய வடிவில் எங்கும் அரங்கேற்ற அமெரிக்கா தயங்காது. சிஐஏ தயங்காது. ஊடகங்கள் ஒத்து ஊதும்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் எதிராகச் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம் பழைய வரலாற்றை நினைக்கத் தூண்டுகிறது. இடதுசாரிகளுக்கு இது எச்சரிக்கை மணி.

 

குறிச்சொற்கள்:

நோபல் உன் விலை என்ன?


நோபல்

பரிசு பெற்றவர்களைவிட பெறாத மாமனிதர்களான இலக்கிய ஜாம்பவான்கள் லியோ டால்ஸ்டாய், மார்க்ட்வைன், சுப்ரமணிய பாரதி, மாக்ஸீம்கார்க்கி, இன்ஸன் என்ஸ்டிரிங் பர்க். இப்படி பலரது பகிஷ்கரிப்புதான் வரலாற்று செய்தியாக நம் முன் நிற்கிறது. அசிங்கமான ஒரு அரசியல் வாடை இன்னமும் கூட விடாமல் நோபல் பரிசை சுற்றி துர்நாற்றமாக வீசுவதை நாம் பார்க்கிறோம். முதலில் மாபெரும் இலக்கியவாதியும் தன் காலத்தின் தலைசிறந்த நாவலாசிரியருமான எமிலி ஸோலாதான் முதல் நோபல் பரிசை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரைவிட்டால் லியோடால்ஸ்டாய். ஆனால், இருவருமே கடைசிவரை பெறவில்லை. அதற்கு டாக்டர் காரஸ் டேவிட் ஆஃப் விர்ஸன் என்கிற ஒரு ஆள்தான் காரணம் என்றால் பலரும் இன்று நம்பக்கூட மாட்டார்கள். முதல் அதிர்ச்சி அடைந்தவர். அதிகம் யார் என்றே வெளியில் தெரியாத பிரெஞ்சு கவிஞர். அந்த ஆண்டு டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்வீடனில் போராட்டம் நடந்ததும், நாற்பது ஐம்பது ஸ்வீடிஷ் கலைஞர்கள், எழுத்தாளர்கள் அகாடமி வரை ஊர்வலம் சென்று டால்ஸ்டாய்க்கு நோபல் என்று மனுகூட கொடுத்தார்கள் என்பதும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், 1901ல் ஆல் பிரட் நோபல் இறந்து ஐந்தாண்டுகளே ஆகி இருந்தது. எமிலிஸோலாவின் நாநா நாவல் மோசமானது என்று நோபல் தனது நண் பர் ஒருவருக்கே கடிதம் எழுதியதை காரணம் காட் டிய 18 பேரில் ஒருவரான அந்த டாக்டர் விர்ஸனால் ஸோலாவுக்கு அந்த ஆண்டு விருது வழங்க விட வில்லை. இத்தனைக்கும் எட்டுபேர் ஆதரவு இருந்தது. உண்மையில் அந்த வருடம் டால்ஸ்டாயின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. 1902ல் டால்ஸ்டாயை அகாடமி உறுப்பினர் ஒருவரும் முதல் நோபல் கல்வி கவிஞரான புருதோனும் பரிந்துரைத்து இருந்தும் அவருக்கு வழங்கப்படவில்லை. மறுபடியும் டாக்டர் விர்ஸன் களத்தில் இறங்கினார். போரும் அமைதியும் நல்ல நாவல்தான். ஆனால், டால் ஸ்டாயின் அதன் பிறகான எழுத்து மனித நாகரீகத்தை நக்கல் செய்வதுடன் ஆபத்தானதாகவும் இருக்கிறது என்று தொடங்கி ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் மேற்கோள்களுடன் ஒன்றரை மணிநேரம் டால்ஸ் டாய் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து டால்ஸ்டாயை வீழ்த்திவிட்டார். அதன் பிறகு எட்டாண்டுகள் டால்ஸ்டாய் வாழ்ந்திருந்தும் அவரது பெயரை நோபல் குழு பேசவிடாமல் டாக்டர் விர்ஸன் தனது ஆளுமையால் தடுத்தார் என்பது யாருமே மறுக்க முடியாத வரலாறு.

பொதுவாக நோபல் பரிசு என்பது ரஷ்யாவுக்கும், கம்யூனிஸத்திற்கும் எதிரானதாக ஏன் இருந்து வருகிறது என்பதற்கும், அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாகவே பரிசுகள் உள்ளனவே என்பதற்கும் பதில் தேடுவது பெரும் அபத்தமாக உள்ளது. ரஷ்யாவை சேர்ந்த யாருமே முழுமையான நோபலை பெறவில்லை. இலக்கியம் தான் என்றில்லை. முதல் மருத்துவ நோபல் பாப்லோவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாலாண்டு தொடர்ந்து இருட்டடிப்பு, பிறகு உலக நெருக்கடி தாங்காமல் பகிர்ந்த ஒரு பரிசு பேருக்கு அறிவிப்புபிறகு மருத்துவ நோபலுக்கு எய் லிச், இயற்பியலில் ஒன்று. நாம் ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளை குறிப்பாக பழைய சோவியத் பிளாக் சார்ந்து பேசினால் அந்த நாடு மரபியலிலும், மனித வாழ்க்கை நீட்டிப்பு மருத்துவதுறையிலும் செய்த அசுரசாதனைகள் நினைவுறத்தக்கவை. ஸ்புட்னிக் மூலம் உலக செயற்கைக் கோள் அறிவியலை தொடங்கிய நாடு. யூரிககாரினை விண்வெளிக்கு அனுப்பி தமது விண்வெளி யுகத்தை தொடங்கிய நாடு…. மார்கோனிக்கு முன்னதாகவே பொப்பொவ் ரேடியோ அலைவரிசை தொடங்கிய நாடு. 1911-லேயே ட்போல்கோவ்ஸ்கி ராக்கெட்டுகளை சாத்திய மாக்கிய நாடுஇந்த நோபல் கமிட்டியை பொறுத்த வரை ரஷ்யா விஞ்ஞானிகளே இல்லாத நாடு!

இலக்கிய நோபல் ரஷ்யாவை பகிஷ்கரித்தது மட்டுமல்லரஷ்யாவின் நட்பு நாடுகளையும் கூட பகிஷ்கரித்துள்ளதே உண்மை. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்திய நேருவுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்படாததற்கு அவர் ரஷ்யாவின் சிநேகிதர் என்பது மட்டும் தான் காரணம்….

அமைதிக்கான நோபல் பரிசு ஒன்றைக் கூட ரஷ்யர்கள் பெறவில்லை. இந்த நூற்றி சொச்ச ஆண்டுகளில் ஜெர்மனிக்கு நான்கு. பிரான்சுக்கு எட்டு. மீதியில் பதினேழு அமெரிக்காரஷ்யாவுக்கு ஒன்று கூட கிடையாதுஅமைதி இப்படி அமைதியாக இருந்துவிட்டது என்றால்நோபல் இலக்கியம்.

ரஷ்யர்கள் யாருக்காவது நோபல் வழங்கப்பட் டது என்றால் அது ரஷ்யாவுக்கு எதிராக வழங்கப் பட்டது. முதல் அறுபது ஆண்டுகளில் இரண்டே இலக்கியநோபல்அந்த ஆண்டுகளில் அங்கிருந்து எழுதிய இலக்கிய அறிஞர்களான ஆண்டன் செக் காவ், அண்ரெயெவ், மாயா காவ்ஸ்கி, சர்டிஸ் பாஷெவ், சிங்கிஸ் ஐத் மாதவ் யாருமே நோபல் இலக்கிய கமிட்டி கண்ணில் பட வில்லை. மக்சீம் கார்க்கி 1936 வரை உயிருடன்தான் இருந்தார். அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டதும் இல்லை. ஆனால், அந்த தகுதி ஒரு புனினுக்கு திடீரென்று ஏற்பட்டது. இவான்புனின் பாரீசில் வாழ்ந்த, கடும் இடதுசாரி எதிர்ப்பு தன்மை கொண்டிருந்த ரஷ்யாவுக்கு எதிரான வெள்ளை ரஷ்ய அகதி. லான்பெலோவின் ஹைய வார்த்தாவை மொழி பெயர்த்த விசுவாசிவெளியில் சொல்ல முடிந்த வரலாற்றில் நிற்கும் நோபல் பரிசு, ரஷ்யாவுக்கு ரஷ்ய எழுத்தாளருக்கு என்ற அர்த்தம் எதுவுமில்லாத ரஷ்ய அரசுக்கு எதிரான பரிசாகவே இருந்தது.

நோபல் ஒரு அங்கீகாரமாகவோ பெருமை மற் றும் உலக அளவிலான அந்தஸ்தாகவோ இருக்கிறது என்பது உண்மையானால். அது ஐரோப்பா சம்பந்தபட்டதாகவே இன்னமும் இருக்கிறது என்பதும் உண்மை. நூற்றி ஒன்றில் ஆசியா, ஆப்பிரிக்கா இணைந்து பெற்றதை விட ஐரோப்பா, ஸ்வீடன் இணைந்து பெற்றது மூன்று மடங்கு அதிகம். உண்மையில், அது ஐரோப்பியா சம்பந்தப்பட்டதாகவே இன்னமும் இருக்கிறது. இதை ஆமோதிப்பதுபோல ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தர செயலரான ஹொரஸ் எண்டாஃக் சென்ற ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார். `உலக இலக்கிய மையம் ஐரோப்பாதான்…’ இப்போது புரிந்திருக்கும். நோபல் உங்கள் வீடுதேடி வருவதற்கு நீங்கள் இலக்கியவாதியாக மட்டுமே இருந்தால் போதாது.

 

குறிச்சொற்கள்: ,

மதம் பற்றி காரால் மார்க்ஸ்


டாக்டர்கள்

கழகத்தில் மார்க்ஸின் நெருக்கமான நண்பர் புருனே பொவர். இவர் பைபிளின் நான்கு சுவிஷேஷங்களிலும் வரலாற்று ரீதியான உண்மை துளியும் கூட இல்லை என்று கூறினார்.

மார்க்ஸின்

மூத்த நண்பர் பிரடேரிக் கோப்பென் 18 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு, ஜெர்மன் அறிவியக்க மரபுகளை உயர்த்திப் பிடிக்கப் போராடினார். 1840-ல் அவர் வெளியிட்ட ஒரு வெளியீட்டில், ‘எனது நண்பர் டிரியரை சேர்ந்த காரால் மார்ச்சுக்கு சமர்ப்பணம்என்று குறிப்பிட்டார்.

ஆனால்

, மார்க்ஸ் மதத்தை கடுமையாக எதிர்த்தார். அவர் பெரும்பாலும் தனது வாதத்தின் மூலம் வென்றார். குறிப்பாக அன்று பரவியிருந்த கிருஸ்துவ மதத்தைக் கடுமையாக எதிர்த்தார். ‘கிறிஸ்துவ மதம் அறநெறி அற்றதுஎன்றார். ‘மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆளுகின்ற, மனிதத் தன்மையற்ற உலகத்தில் உண்டக்கப் பட்டதே மதம்என்றார் மார்க்ஸ் அப்போது அவருக்கு வயது 24.

 

காரல் மார்க்ஸும் இந்தியாவும்


இந்தியாகுறித்த மார்க்ஸின் ஆய்வுகளும், படைப்புகளும் பொதுவுடமைப் போராளிகளுக்கு பிரமிப்பூட்டுவது மட்டுமல்ல; ஒரு வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமிருக்க இயலாது. இந்தியா மீதான அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனி, மேலும் இருபது ஆண்டுகளுக்கு நீடித்திட ஒரு சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1853ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதுகுறித்து மார்க்ஸ் எழுதினார்

;

“15 கோடி மக்களின் தலைவிதியை இங்கிருந்து கொண்டு இவர்கள் நிர்ணயிக்கிறார்கள். இது குறித்த கமிட்டிகளின் கருத்துக்கு கூட அவர்கள் காத்திருக்கத் தயாராக இல்லை.” ஏன்? மார்க்ஸ் கூறுகிறார்இந்த அவ சரச்சட்டத்தின் மூலம் இந்தியாவை இன்னும் இருபது ஆண்டுகளுக்கு கொள்ளையடித்து ஒட்டச்சுரண்டும் உரிமையை இவர்கள் தக்கவைத்துக் கொள்வர்நியூயார்க் டெய்லி டிரிபியூன்

9.6.1853

ஆங்கிலேய ஆட்சி இந்திய சமூக அமைப்பை அழித்தது. தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டியது. அதே சமயம் தனது அழிவிற்கான விதைகளையும் விதைத்தது. ஆம்! இரயில்வே, தந்தி, தபால் துறைகள் ஆகியவற்றை தனது ஆட்சியின் தேவைக்காக உண்டாக்கினாலும் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கும் விதையை ஊன்றியது. அதுவே ஆங்கிலேய ஆட்சியை விரட்டும் மரமாக மாறும் என மார்க்ஸ் சரியாக கணித்தார்

.

1857 எழுச்சி

இந்தியாவின் தேசம் தழுவிய முதல் சுதந்திரப் போராட்டம் என வர்ணிக்கப்படும் 1857 போராட்டம் நடந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போராட்டத்தின் உண்மை தன்மையை மட்டுமல்ல; அதனை ஆதரித்து அழுத்தமாக பதிவு செய்தவர்களில் காரல் மார்க்ஸ் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது

.

இது ஒரு சில சிப்பாய்களின் கலகம் அல்ல; ஒரு தேசிய எதிர்ப்பு எழுச்சி என முதலில் வரலாற்று பதிவு செய்தவர் மார்க்ஸ்தான். “இந்த எழுச்சி சிப்பாய்களினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் இணைந்த பின்னர் இது ஒரு தேசிய எழுச்சிதான் என இந்த மகத்தான போராட்டத்தின் வர்க்கப் பின்னணியை அழுத்தமாக வெளிக்கொணர்ந்தார். அது மட்டுமல்லாது முதன்முதலாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் தோளோடு தோள் சேர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்

.

இப்போரில் இந்தியர்கள் தரப்பில் உள்ள பலவீனங்களை மார்க்ஸ் நன்றாக அறிந்து வைத்திருந்தார். இராணுவப்போருக்குத் தேவையான ஒரு மையப்படுத்தப்பட்ட தலைமை இல்லாதது; போரிடுவோரிடையே இருந்த பிளவுகள்; ஆயுதங்களின் நவீனம் குறைந்திருப்பது; ஆங்கிலேயரின் ஆயுதங்களில் உள்ள அழிவுத்தன்மை ஆகிய பல வீனங்களை அவர் அறிந்திருந்தார். இப் போரில் இறுதி வெற்றி இந்தியர்களுக்கு கிடைக்குமா எனும் ஐயமும் அவரிடம் இருந்தது. எனினும் அவர் இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்டத்தை ஆதரித்தார்

.

மார்க்ஸின் கணிப்புப்படியே ஆங்கிலேயர்கள் வென்றனர். அதற்குப்பிறகு ஆங்கிலேயப் படை ஆடிய கோரத்தாண்டவம் உலகம் அறியாத வன்கொடுமை ஆகும். இரத்த வெறி பிடித்த காட்டேரி போல ஆங்கிலேய அரசின் அனைத்து அங்கங்களும் நடந்து கொண்டன. அதன் கொடுமைகள் குறித்து மார்க்ஸ் எழுதுகிறார்

.

ஆக்ராவின் ஒரு மாஜிஸ்ரேட் தனது கைகளாலேயே பலரை தூக்கில் போட்டு விட்டு பின்னர் அவர்களை சுட்டதாக கூறுகிறார். இன்னொரு மாஜிஸ்ரேட்டோ 95 பேரை தூக்கில் போட்டு கொன்றுவிட்டேன். அடுத்த நாள் இன்னும் 5 பேரை கொன்று சதமடித்து விடுவேன் என கொக்கரிக்கிறார். ஒரு ஆங்கிலேய வீரன் ஒரு இஸ்லாமியரை கண்டம் துண்டமாக வெட்டிக்கொன்றதை நீதிமன்றம் நியாயப்படுத்துகிறது

.

எந்த ஊரில் தந்திக்கம்பம் தகர்க்கப்பட்டுள்ளேதோ அந்த ஊரின் தலைவர் அதே தந்திக்கம்பத்தில் தூக்கிலிடப்படுகிறார்.” இக்கொடுமைகள் குறித்து மார்க்ஸ் குறிப்பிடுகிறார். “இந்த இரத்தவெறிபிடித்தத் தன்மை ஒரு எதேச்சதிகாரிக்கு இருந்தாலே வெறுக்கப் படக்கூடிய ஒன்று; ஆனால் ஒரு தேசம் முழுமைக்குமே இது இருக்குமானால் இதை விட ஒரு பெரிய கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாதுநியூயார்க் டெய்லி டிரிபியூன்

5.8.1858

 

 

என்றும் காரால்மார்க்ஸ்


அரசாங்கங்கள், அவை சர்வாதிகார அரசாங்கமாக அல்லது ஜனநாயக குடியரசுகளாக இருந்தாலும், தமது தேசங்களிலிருந்து மார்க்ஸை நாடு கடத்தின. முதலாளித்துவவாதிகள், அவர்கள் பழமைவாதிகளாக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதிகளாக இருந்தாலும் போட்டிபோட்டுக் கொண்டு மார்க்ஸ் மீது அவதூறு பொழிந்தனர். இவற்றை எல்லாம் மார்க்ஸ் வேண்டாத ஒட்டடைப் போல புறந்தள்ளினார்; உதாசீனப்படுத்தினார். மிகவும் தேவை என நிர்பந்தம் இருந்த பொழுது மட்டும்தான் பதில் அளித்தார்.

கோடிக்கணக்கான புரட்சிகரமான தொழிலாளர்கள்சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களால் அன்பு செலுத்தப்பட்டு, அவரது வழிகாட்டலுக்குட்பட்டு, அவர்களின் மரியாதைக்குரியவராக இன்று காரல் மார்க்ஸ் மரணத்தைத் தழுவியுள்ளார்.

காலம் முழுவதும் அவரது பெயர் சாகாவரம் பெற்றிருக்கும்; அவரது பணியும்கூட சாகாவரம் பெற்று நிலைத்து நிற்கும்.”

மார்ச் 14, 1883 அன்று காரல் மார்க்ஸை மரணம் தழுவிக்கொண்டது. மார்ச் 17ம் நாள் மார்க்ஸின் அடக்கத்தின் பொழுது ஏங்கெல்ஸ் ஆற்றிய இந்த உரை எவ்வளவு தீர்க்க தரிசனமானது என இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி முதலாளித்துவ உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மார்க்ஸ் அன்றே இதுபற்றி ஆய்வு செய்து எழுதினார் என்பதால் அவரது படைப்புகளை தேடிப்பிடித்து மீண்டும் கற்க பலரும் முன்வந்துள்ளனர் என்பதே இதற்குச் சான்று.

வலுப்பெறும் கோட்பாடு

முதலாளித்துவ சமூக முறையில் உற்பத்தி சமூக மயமாக உள்ளது. ஆனால் அதன் பலன்களோ தனியார்மயமாக உள்ளது. இந்த முரண்பாட்டை தீர்க்க சமூக உற்பத்தியின் பலன்களையும் சமூகமயமாக்க வேண்டும் என மார்க்ஸ் கூறினார். தேசியமயம் என்பது அந்த திசைவழியில் ஒரு சிறு முன்னேற்றம். ஆனால் தேசியமயம் என்றாலே தேசத்துரோகம் என முதலாளித்துவவாதிகள் கூறினர்.

இந்தியா உட்பட பல வளரும் நாடுகளில் தேசியமயத்தை பின்னோக்கி தள்ளிவைத்தனர். முதுகெலும்பில்லாத ஆட்சியாளர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். இன்று நெரு கடி வெடித்த பொழுது தேசியமயம் செய்தாலொழிய தேசத்தைக் காப்பாற்ற முடியாது; தம்மையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது எனும் முடிவிற்கு வளர்ந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்கள் வந்துள்ளனர். எனவேதான் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் வங்கிகள் தேசியமயமாக்கப்படுகின்றன. இந்தியாவில் அரசு வங்கியான SBIயில் மத்திய அரசின் பங்கு 51 சதவீதம்தான். ஆனால் இன்று BANK OF SCOTLAND எனும் இங்கிலாந்து வங்கியில் அந்த அரசின் பங்கு 83 சதவீதம். தேசியமயம் எவ்வளவு தவிர்க்க இயலாததாக உருவாகியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று.

உற்பத்தி மற்றும் அதன் பலன்கள் இவை இரண்டுமே சமூகமயமாக்கப்படவேண்டும் எனும் மார்க்சின் கோட்பாடு மேலும் வலுப் பெற்றுள்ளது. தொழிலாளி வர்க்கம் இக்கோட்பாட்டை அமல்படுத்திட தொடர்ந்து போராடும் என்பதில் ஐயமில்லை.

 

குறிச்சொற்கள்:

நீதி கடை சரக்கா?


rje0027l

இந்திய நீதித்துறை தனது தரத்திலிருந்து தாழ்ந்துபோய்விடாமல் இருக்க வேண்டுமென்றால், ஜனநாயகம் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நீதிபதிகளைப் போல போலிமுடி, உடைகள் ஆகியவற்றுடனான தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, திறந்த புத்தகமாக நீதிபதிகள் இருக்க வேண்டும்.

நீதிபதி ஜெரோம் பிராங்க் இவ்வாறு எழுதினார். “ஜனநாயகத்தில், அரசின் எந்த ஒரு கிளையின் செயல்பாடுகளை மக்களுக்கு பரிச்சயமாக்குவது அறிவுபூர்வமற்றதாக எப்போதுமே இருக்காது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் தவிர்க்க முடியாமல் ஏற்படக் கூடிய தவறுகளை, ஒப்புக்கொள்ளாத மக்களை குழந்தைகள் போன்று நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்க, இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்கு சொல்லுவதே சரியானதாக அமையும் என்று குறிப்பிட்டார்.

நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது என்று எந்தவித நம்பத்தகாத கொள்கைகளையும் கண்டுபிடிக்க அனுமதிக்கக்கூடாது. நீதிமன்றங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தவறுகளுக்கு பொறுப்பேற்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் தண்டிக்கும் அதிகாரமுள்ள ஆணையத்தின் வழிகாட்டுதலில் இவை இயங்க வேண்டும். நீதித்துறையின் புகழைக் குலைக்கும் வகையில் ஒரு நீதிபதி ஊழலில் ஈடுபட்டால் கூட அவரை வெளியேற்ற வேண்டும்.

தற்போது நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை என்னைப் பொறுத்தவரை அரசியல் சட்டரீதியாகத் தேவையற்றது. உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சுயேட்சையான தன்மை வேண்டுமென்று 1998ல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியது. இதனடிப்படையில் இருப்பதில் மூத்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே தேர்வை செய்ய வேண்டும் என்று முடிவானது. நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமைச்சரவையிடமிருந்து பறிக்கப்பட்டு நீதிபதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கு நிபுணத்துவம் தேவை. இதில் மூத்த நீதிபதிகளாக இருக்கட்டும் அல்லது இளைய நீதிபதிகளாக இருக்கட்டும், அவர்களுக்கு போதிய பயிற்சி கிடையாது. சோசலிசமதச்சார்பற்றஜனநாயகக் கருத்துகளில் நம்பிக்கையற்றவர்களையும், வர்க்க ரீதியாக பாரபட்சம் காட்டக்கூடியவர்களையும் ஒருபோதும் நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது. நிர்வாகமும், சட்டமன்றங்களும் தங்கள் எல்லையைத் தாண்டும்போது நீதிபதிகள் அவர்களைத் திருத்துகின்றனர். ஆனால் நீதிபதிகள் தவறு செய்யும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் சட்ட ரீதியான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காக தெளிவான சட்ட வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும்.

சலுகைகளை மட்டுமே எதிர்நோக்கும் பூஷ்வா தொழிற்சங்கத்தைப் போல நீதித்துறை இயங்குகிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 180 நாட்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 210 நாட்களும் மட்டுமே வேலை செய்கின்றனர். வழக்குகள் தேங்கிப்போய் மலைபோல் குவிந்து கிடக்கிறது. ஆனால் நீண்ட விடுமுறைகளை ஒழிக்க நீதிமன்றங்கள் அக்கறை கொள்வதில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாலை நேரங்களிலும் வழக்குகளை விசாரிக்க சில நீதிபதிகள் தயாராக உள்ளனர் என்பதும் உண்மையே.

வழக்கை விசாரிக்க பல நாட்களை சில நீதிபதிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டால் வழக்கே முடிந்துவிடும் என்ற நிலையில், சில நீதிபதிகள் ஒத்திவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். காலந்தாழ்த்துதல் மற்றும் யோசிக்காமலேயே அதிவிரைவில் செயல்படுதல் ஆகிய நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாத செயல்பாடுகள் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளோ அல்லது மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகளோ இல்லை.

உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும் என்பதில் நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக்கணக்கில் தள்ளிப் போடும் வழக்கம் உள்ளது. சில சமயங்களில் தீர்ப்பே வராத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவற்றை தணிக்கை செய்வதற்கோ அல்லது பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதற்கோ எந்தவழிமுறையும் இல்லை. குறித்த நேரத்திற்குள் நீதிமன்றங்களே தங்கள் வேலைகளை செய்யாவிட்டால், நிர்வாகத்தின் பணிகளை குறித்த நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தால் எவ்வாறு கூற முடியும்?

தீர்ப்புகளை வழங்காமலேயே இருக்கும் நீதிபதிகள், அதற்கு பொறுப்பேற்காமல் இருப்பது மட்டுமல்ல, பதவி உயர்வும் பெற்று சென்று விடுகிறார்கள். இது குறித்தெல்லாம் தேர்வுக்குழு விசாரிக்காது. தேர்வு செய்யும் முறை வழக்கறிஞர்கள், மக்கள் மன்றங்கள் மற்றும் மக்களுக்கு தெரிந்து விடாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடிமகன்களிலிருந்து ஒருபடி மேலே தங்களை வைத்துக் கொள்ள, தங்களைப் பற்றிய விபரங்களை வெளியிடாமல் இருக்கும் உரிமையை நீதிபதிகள் கோருகிறார்கள். இரும்புத் திரை ஒன்றை விரித்துக் கொண்டு அமரவே அவர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றிருந்தாலும், நீதித்துறை கடமை தவறுவது மீதான கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியிலும் நீதிபதிகள் இறங்கிவிடுகிறார்கள்.

பேராசை பிடித்த காலத்தில், கலாச்சாரமும் வர்த்தகமயமாகியுள்ளது. சம்பள உயர்வு குறித்த தொழிலாளர்களின் கோரிக்கைகளெல்லாம் தேங்கிக்கிடக்கின்றன. பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. ஏராளமானோர் வேலையின்மையை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகைகளை பெருமளவில் அதிகப்படுத்த வேண்டும் என்று சில நீதிபதிகள் கோருகிறார்கள். இல்லாதவர்களின் எண்ணிக்கையும், மனித உரிமைகளை பல வகைகளில் இழந்தவர்களும் இந்தியாவில் அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஊழல்வாத செயல்களால், ஜனநாயகக் குடியரசில் சோசலிச ரீதியிலான நீதியை வழங்குவதிலிருந்து இவர்கள் தகுதியிழந்துவிடுகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளாத சுதந்திரம் என்பதால் பல நீதிபதிகள் தங்கள் மனச்சாட்சியையே இழந்துவிட்டார்கள் என்ற உண்மை அப்படியே தொக்கி நிற்கிறது. சலுகைகளை மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய பூஷ்வா தொழிற்சங்கங்களைப் போல நடந்து கொள்வது இப்பிரச்சனைகளைத் தீர்த்து விடாது. நீதி வழங்கும் தரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, முறையீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து சமூக ரீதியிலான தீர்ப்பை வழங்க வேண்டும்.

நீதித்துறை என்பது மக்கள் கையில் இருக்கும் பெரும் கருவியாகும். ஒரு சில தலைமை நீதிபதிகள், அதை மக்கள் கண்களிலிருந்து மறைக்க முயல்வதால் வெறும் கூடுகளாக மாறிவிடாது. இந்திரா காந்தியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு நான் தடைவிதித்தபோதும் சரி, அல்லது முழுமையான தடையை விதிக்க மறுத்தபோதும் சரி, அச்சத்தாலோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ நான் சரணாகதி அடைந்துவிடவில்லை. எனது கடமையை நான் நிறைவேற்றினேன். ஆனால் அதற்குப்பிறகு அவசர நிலை என்ற பெரும் பேரழிவு ஏற்பட்டு, அனைத்து மனித உரிமைகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை பறிக்கப்பட்டன. நான் அளித்த தீர்ப்பு மூன்று பேர் கொண்ட பெஞ்சால் மாற்றிய மைக்கப்பட்டது.

நிறைவாக, நீதிமன்றம் என்பது மறைந்து கொண்டு இயங்கும் கோழை அல்ல. வெளிப்படையான மற்றும் அச்சமின்றித் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகும். ரகசியம் என்பது நீதித்துறையைப் பொறுத்தமட்டில் பொருத்தமில்லாத ஒன்றாகும். இல்லையென்றால் ஜனநாயகமே கேலிக்குள்ளாகும். ஏழைகள் ஒரு சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் சக்தியால் உருவாகியுள்ள நமது குடியரசில், இப்படி ஒரு நிலையை அனுமதிக்கக் கூடாது. இந்திய நீதித்துறைக்கு இன்னும் மக்களிடத்தில் உள்ள மதிப்பை குலைக்கக்கூடிய வகையில், உச்சநீதிமன்றத் தில் ஏழு ஆண்டுகள் எனது வாழ்க்கையைக் கழித்த நான் சொல்லிவிடக் கூடாது. நமது சமூகத்தில் இந்திய நீதித் துறைக்கு என்று உயர்ந்த இடம் உள்ளது.

நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் என்று அனைத்து வகையான அம்சங்களையும் நிலைநிறுத்தும் வகையில் தீர்ப்புகளை வழங்கிட வேண்டும். நீதி வழங்குவது ஒன்றும் பல அடுக்குகளைக் கொண்ட பெரு வர்த்தகமோ அல்லது வணிகமயமாக்கலோ அல்ல. நாட்டின் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் பெரும் நம்பிக்கையே நீதி வழங்குதலாகும்.

-வி.ஆர்.கிருஷ்ணய்யர்
நன்றி : ‘தி இந்து (பிப்.19)