RSS

Category Archives: பகுக்கப்படாதது

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை


கடந்த இருபது ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் விவசாய நெருக்கடியை உருவாக்கியுள் ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலமான2007-12இல் விவசாய வளர்ச்சி விகிதத்திற்கு 4 விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது சுமார் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. முந்தைய எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதைவிட, கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுறுக்கள் பீரோ  பதிவு செய்திருக்கிறது. 2003-10ஆம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 756 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995-2002இல் 1 லட்சத்து 21 ஆயிரத்து 157 பேர் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சிகள் இல்லாத நிலையில், அங்கேயும் விவசாய நெருக்கடியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் தற்கொலை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபின் கடந்த ஓராண்டில் சுமார் 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் இதுவரை 54 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை வாங்க மறுத்ததன் காரணமாகவும், புதிய கடன் வலைகளில் அவர்கள் சிக்கியுள்ளதன் காரணமாகவும் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்வதுடன், அதிகரித்தும் உள்ளது.
ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இந்த ஆண்டு பட்ஜெட், விவசாயிகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். எரிபொருள்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ரசாயன உரங்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இதனுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் காரணமாக, வெளிச்சந்தையில் எரி பொருள்கள் மற்றும் ரசாயன உரங்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ளன. இதனால் விவசாயிகள் மேலும் கடுமையான முறையில் வறிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதுடன், விவசாயத்திற்காக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் கடன்வலையிலும் அவர்களைத் தள்ளி விட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளித்து வந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டச் செலவினத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரையிலும் குறைத்திருப்பதன் காரணமாக, விவசாயத் தொழிலாளர் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலைகளும் குறைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அதே சமயத்தில் ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமோ, கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. 2004இலிருந்து இதுவரை அவர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகள் 26 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

 

குறிச்சொற்கள்:

மின் கட்டனமும் இனி சர்வதேச சந்தை விலையில்


ஐ.மு.கூட்டணி அரசு மின் கட்டணங்களைக் கூட சர்வ தேச அளவிற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சிந்தித்து வருகிறது. மின் சக்திக்கான எரிபொருட்களின் சர்வ தேசச் சந்தை விலை உயர்ந்து விட்டால் மின் கட்டணம் உயரும் என்பது அதன் பொருள். மின்சக்தி உற்பத்தியில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், யுரேனியம் என எதுவும் எரிபொருளாக இருக்க முடியும். இவற்றின் சர்வதேசச் சந்தை விலை உயரும் போதெல்லாம் மின் கட்டணம் உயரும் என்றால் என்ன ஆகும் என்பது குறித்து சிந்திப்பது அவசியம்.அடுத்து வரும் மாதங்களில் இதற்கான கொள்கை மத்திய அரசு வெளியிட தயாராக இருக்கிறது. 

 

குறிச்சொற்கள்: , , ,

கார்கில் ஊழல் – இதுவரை ஒரு குற்றவாளி கூட கைது இல்லை


கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் மேற்கொண்டபோது மத்திய அரசு பெருமளவு பாதுகாப்புக் கருவிகளை வாங்கியது. இந்த கருவிகளை கொள் முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இந்த கார்கில் ஆயுத கொள் முதல் ஊழல் தொடர்பாக கடந்த 12ஆண்டுகளாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகள் யார் என்பதும் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் தெரியவில்லை.
கார்கில் ஊழல் குறித்து மத்திய அரசு எந்தவித நட வடிக்கையும் எடுக்காதது குறித்து நீதிமன்றத்தில் சட்ட உதவி அளிக்கும் நிபுணர்களாக உள்ள மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி சுட்டிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் மத்திய அரசை கண்டித்து கூறுகையில், இந்த வழக்கில் நாங்கள் மிகக் கடுமையாக இருக்க விரும்பவில்லை. ஆனால் இது போன்ற அமைதியாக செல்ல முடியாது என எச்சரித்தது. மத்திய அரசின் நட வடிக்கை எங்களுக்கு திருப்தி தரவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கார்கில் ஊழல் தொடர்பாக அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் உறுதி இல்லாத நிலை விவரத்தை திவேதி சமர்ப்பித்தார்.
கார்கில் போரின்போது ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்கப் பட்டன. இந்தக் கொள்முதலின் போது ஏராளமான குறைபாடுகள் இருப்பதை தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டது இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் சிறிது நேரம் விசாரணை செய்த பின்னர், விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
பாஜக கூட்டணி அரசு ஆட்சியின் போது கார்கில் போரான ‘விஜய்’ நடவடிக்கைக்காக பாதுகாப்பு ஆயு தங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.  இந்தக் கொள் முதலில் நடந்த பெரும் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. 35 விவகாரங்களில் குறைபாடு இருப்பதை சிஏஜி கண்டு பிடித்தது. இருப்பினம் பாதுகாப்புத் துறை 28 விவகாரங்களில் உரிய ஆதாரம் இல்லை என ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது. பாதுகாப்புத் துறை நட வடிக்கைக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது

 

குறிச்சொற்கள்:

பிள்ளைக்கறி கேட்கும் இந்திய அரசாங்கம்


இந்தப்பக்கம் 10 பேர் அந்தப்பக்கம் 12 பேர்.  இவர்கள் இந்தியச்சீமான்கள். அவர்கள் அமெரிக்கச்சீமான்கள்.  இவர்கள் கூடினால் அதற்கு அமெரிக்க – இந்திய தலைமை நிர்வாகிகள் கூட்டம் என்று பெயர். இந்திய- அமெரிக்க பெரு முதலாளிகளால் பொறுக்கி(எடுக்கப்பட்டவர்)களின் கூட்டம்.  இந்தக்கூட்டம் இந்திய அரசுக்கு கொடுத்துள்ள ஆலோசனைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  ஜூன் 22-ம் தேதி இந்தக்கூட்டம் வாஷிங்டனில் நடக்கப்போகிறது. அப்போது இந்திய(?) நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கலந்துகொள்ளப்போகிறாராம்.

இந்த ஆலோசனைப்பட்டியலில் பல அம்சங்கள் உள்ளன. இதில் பிரதானமாக மூன்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம். அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம்யில் உடனடியாக கையெழுத்திடுவதன் மூலம் அணுசக்தி ஒப்பந்தம் அமலுக்கு வர இந்தியா முன் வர வேண்டுமாம்.  வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்கு வர வழிவகை செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமாம்.  அடுத்த அம்சம்,  இந்திய அமெரிக்க வர்த்தக உறவு சீர்படவும், டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக முதலீடு செய்யவும் வாய்ப்பளிக்க ஏதுவாக, மேற்கண்ட அமெரிக்க நிறுவனம் (2001-ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியவர்கள்) போபால் விஷவாயு கசிவாலும் அதன் தொடர்ச்சியாகவும், நீர், நிலம் மாசுபட்டதை சரிப்படுத்த இழப்பீடு அளிக்க வேண்டியதில்லை என்று இந்திய அரசு உறுதியளிக்க வேண்டுமாம்.

25,000 பேருக்கு மேல் செத்தொழிந்து போனார்கள். முதலாளித்துவத்தின் அகோர லாபப்பசிக்கும், அதன் கால் நக்கிப்பிழைக்கும் அதிகார வர்க்கத்தின் எதையும் காட்டிக்கொடுத்து எப்படியும் பிழைக்கும் தன்மைக்கும், முதலாளித்துவத்தின் நிர்வாகக்குழுவாய் அம்மணமாய் திரியும் அரசாங்கத்திற்கும் சாட்சியாய் லட்சக்கணக்கில் குருடாய், செவிடாய், கூனாய், குருதி வழியும் கோலத்தில் போபாலின் மக்கள் நிற்கிறார்கள். இந்தியத்தாயின் தேகமும், ரத்தமும் யூனியன் கார்பைடின் கழிவுகளால் விஷமேற்றப்பட்டு நிற்கிறது.

திருப்பூரின் சிறுமுதலாளிகளின் சாயப்பட்டறை கழிவுகளை கண்டு கொதித்தெழுந்து அவற்றை மூடச்சொல்லும் பெருமுதலாளிகளின் நீதிமன்றங்கள், அந்நிய முதலாளியின் விஷங்களால் கெட்டு நிற்கும் போபாலின் நிலத்தடி நீரையும் நிலத்தையும் பார்க்கும்போது கண்மூடிக்கொள்கின்றன.

இந்திய-அமெரிக்க வர்த்தகம் மேம்பட வேண்டுமானால் அந்த அமெரிக்க கம்பெனி செய்த அட்டூழியத்திற்கு நஷ்டஈடு கேட்கக்கூடாதாம்.   அது நஷ்டஈடு கூட அல்ல சரிசெய்யும் தொகை தான். அதைக் கூட அவர்கள் கொடுக்க மாட்டார்களாம்.  அதைச்சொல்லி அப்போதைய அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரொனன் சென் (இந்திய எம்.பிக்கள் தலையில்லாக் கோழிகள் என்று சொன்னவர்)னுக்கு கடிதம் எழுதுவார்களாம். அதை அந்தப்புனிதர் மகாபுனிதரான ரத்தன்டாட்டாவிற்கு அனுப்புவாராம்.  ரத்தன் டாட்டா அதை அதிபுனிதர் மாண்டேக்சிங் அலுவாலியாவிற்கு அனுப்புவாராம். அவர் பிரதமருக்கு அனுப்பிவைப் பாராம். கமல்நாத்தும் கூட அப்படி ஒரு கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம்.

லாபம் என்று வந்துவிட்டால், முதலாளித்துவ வர்க்கம் என்னவெல்லாம் செய்கிறது. 25,000-க்கு மேல் தன்நாட்டு மக்கள் ஈசல்கள் போல ஏனென்று கூட தெரியாமல் கொத்து கொத்தாய் செத்து விழுந்தபோது கூட அதன் கண்ணில் சுரந்த நீர் ஆண்டர்சனுக்காகச் சுரந்ததே தவிர, இந்தியப் புதல்வர்களுக்காகச் சுரக்கவில்லை.  நியாயம் வழங்கினால் மட்டும் போதாது, வழங்கப்பட்டதாக தெரியவும் வேண்டும் என்று வேதாந்தம் பேசுகிற முதலாளித்துவ நீதித்துறை, சட்டத்தின் இண்டு இடுக்குகளுக்குள் புகுந்து கொண்டு முதலாளித்துவத்தின் மேல் தூசு விழாமல் பார்த்துக்கொள்கிறது. “நவீன கால அரசின் ஆட்சியதிகாரமானது முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறல்ல” என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.  நாங்கள் நிர்வகிக்கும் குழு மட்டுமல்ல சேவகர்களும் கூட என்கிறது இந்திய அரசாங்கம். அது மேலும் குறிப்பிடுவது போல “சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ, துலக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாக, வெட்கங்கெட்ட, வாணிபச் சுதந்திரமெனும் ஒரே ஒரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி” வைப்பதற்காக சட்டங்களையும் நியாயங்களையும் நியதிகளையும் அப்பட்டமாய் காலில் போட்டு செருப்பால் மிதிக்கிறது.

“இதுகாறும் போற்றிப்பாராட்டப்பட்டு பணிவுக்கும் பக்திக்கும் உரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையையும் முதலாளித்துவம் மகிமை இழக்கச்செய்திருக்கிறது”. ஆம் நீதிமன்றங்கள் இன்னும் என்ன மரியாதையையும், பக்தியையும் பாதிக்கப்பட்டோரிடமும் மற்ற மக்களிடமும் எதிர்பார்க்க முடியும்? பைபிளிலும், பெரிய புராணத்திலும் பக்தனைச்சோதிக்க கடவுளர்கள் பிள்ளைக் கறி கேட்டதாய் சொல்லப்பட்டிருக்கிறது. அது சோதிக்க மட்டுமே. ஆனால், இந்தியாவில் அந்நிய மூலதனம் பிள்ளைக்கறி கேட்கிறது. இந்திய பெருமுதலாளித்துவமும், இந்திய அரசும் பிள்ளைக் கறியை தட்டில் வைத்துத்தர தயாராயிருக்கிறது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரம். முதலாளித்துவம் ஆட்சி செய்தால் பிள்ளைக்கறி விருந்து பச்சாரம் பன்னாட்டுக்கம்பெனிகளுக்கு.

 

குறிச்சொற்கள்:

ஒபாமாவை எதிர்நோக்கியுள்ள சவால்கள்


அமெரிக்க அதிபர் ஒபாமா தன் நாட்டிலுள்ள, எந்த வாய்ப்பும் வசதியுமில்லாத 46 மில்லியன் அமெரிக்க மக்களின் உடல் நலத்துக்கானதோர் காப்பீட்டுத்திட்டம் சம்பந்தமாக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார். அந்த மசோதாவின் மூலமாக அவர் ஜனநாயகக் கட்சியிலுள்ள கன்சர் வேடிவ்கள் மற்றும் குடியரசுக்கட்சியிலுள்ள மிதவாதிகள் ஆகியோரது ஆதரவைப் பெற்றிடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரான் நாட்டை ஒரு தீண்டத்தகாத நாடு என்று ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் அதிபர் ஒபாமா ஈரான் நாட்டுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்திட விரும்புகிறார். அந்த அடிப்படையில் அவர் ஈரான் நாட்டுத் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டு கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனால் டெஹ்ரான் அரசு அவற்றையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.

அதிபர் ஒபாமா ஈரான், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தோல்விமேல் தோல்வியடைந்து வருவதாகக் குடியரசுக் கட்சியினரும், ஏனைய வலதுசாரி விமர்சகர்களும் கண்டனக் கணைகளை எய்து கொண்டேயுள்ளனர்.

டெஹ்ரான் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு இணங்கவில்லை என்றால், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு அமெரிக்க ஆட்சியாளர்கள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்திட முன்வரலாம். அவ்வாறு செய்தால் ஈரான் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்படும்.

ஆனால் மேற்படி பிரச்சனையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் இரண்டும் தங்களுக்கிடையே அமைதிப் பேச்சுக்களைத் தொடங்கிட வேண்டும் என்று அதிபர் ஒபாமா விரும்புகிறார். அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் ஆகிய இருவரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதன் மூலமாக உலக அரங்கில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாமே தவிர ஜெருசலேம் பிரச்சனை, பாலஸ்தீன அகதிகளின் மறுவாழ்வு பற்றிய பிரச்சனை, எல்லைப்பிரச்சனை ஆகியவற்றில் சுமூகமான தீர்வுகளைக் கண்டிட இயலாது. இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு தன் நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகளுடன் கொஞ்சிக் குலவுகிறார். மேலும் பாலஸ்தீனத் தலைமையும் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிபர் ஒபாமாவால் கடந்த ஜூன் மாதம் சட்டமன்றத்தில் தன் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றப்படுவதைத் தடைசெய்வது சம்பந்தமானதோர் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடிந்தது. ஆனால் நிலக்கரி, எரிவாயு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெரிய பெரிய அமெரிக்க நிறுவனங்கள் மேற்படி மசோதாவுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.

ஜனநாயகக் கட்சியினரும் ஒருசில சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த வருடத்திற்குள்ளாவது மேற்படி மசோதாவைச் செயல் படுத்திட இயலுமா என்று சந்தேகப்படுகிறார்கள். அமெரிக்கா மேற்படி பிரச்சனையை தனது நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் தாங்களும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு எதிரான மசோதாவில் கையெழுத்திடுவோம் என்று சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

அதிபர் ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இராக் யுத்தத்திற்கு ஒரு முடிவு கட்டப்போவதாகவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முழுவீச்சுடன் ஈடுபடப்போவதாகவும் மேடைகள் தோறும் முழங்கினார். அதன்படி ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மேலும் 21,000 அமெரிக்கப் படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். இன்றைக்கு ஆப்கன் நாட்டில் 68,000 அமெரிக்கப் படைவீரர்கள் உள்ளனர். மேலும் மிகத்திறமையான ராணுவ நிபுணரான ஜெனரல் ஸ்டான்லி மெக்ரிஸ்டல் என்ற ராணுவ அதிகாரி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தலிபான்களை ஒடுக்கிட விரும்பும் அமெரிக்கத் திட்டங்களுக்குப் பாகிஸ்தானின் ஆதரவு கிடைக்கவில்லை. தான் தலி பான்களை ஆதரித்தால்தான் இந்தியாவின் செல்வாக்கைத் தடுத்திட இயலும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. தன் நாட்டில் நிலவிடும் பொருளாதாரப் பின்னடைவானது அதிபர் ஒபாமாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அமெரிக்க நாட்டில் 10 சதவீதம் பேர் வேலையின்றி வாடுகிறார்கள். இது அரசாங்கம் தரும் புள்ளி விவரம்தான். நாட்டில் இதைவிட அதிகமான நபர்கள் வேலையற்று தெருக்களில் அலைகிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு உயிரூட்டுவதற்காக 787 பில்லியன் டாலர்கள் உதவித்தொகையாக அளிக்கப்பட்டது. மேலும் அது மாதிரிப்பட்ட நிதியுதவிகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அதிபரின் பொருளாதார ஆலோசகரான கிறிஸ்டினா ரோமர் அந்தப் பிரச்சனை பற்றி எதுவும் பேசத் தயாராயில்லை.

இவ்வாறு ஒபாமா உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர் மேற்படி சவால்களைச் சமாளிப்பாரா என்பதை இனிவரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்.

ஆதாரம் : இந்து 10.9.2009

 

குறிச்சொற்கள்:

இந்திய விவசாயிகளை கொள்ளும் மன் மோகன் சிங்


உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர, நீடித்து வந்தமுட்டுக்கட்டைகள் தகர்ந்து விட்டதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்று பேச்சு வார்த்தைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின. இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய அம்சமாக, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வரும் நிலையில், அதற்கு வேட்டு வைக்கும் பொருட்டு விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை பெருமளவு வெட்டிக் குறைக்க வேண்டு மென்று வளர்ந்த நாடுகள் நிர்ப்பந்தம் செலுத்தின. மேலும், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத உற்பத்தி பொருட்களின் சந்தைக்குள் நுழைவதற்கு வளர்ந்த நாடுகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும் நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. அப்படி அனுமதித்தால், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களின் நலன் மிகக் கடுயாக பாதிக்கப்படும்.

எனவே இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை உலக வர்த்தக அமைப்பால் மேலும் தொடர முடியவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாதது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் கொள்ளை லாபத்திற்கு உதவவில்லை. எனவே, எப்படியேனும் இந்தியா போன்ற நாடுகளின் விவசாயத்தை அழிக்கவும், சந்தையை கைப்பற்றவும் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடர மன்மோகன் சிங் அரசுக்கு அமெரிக்காவும், உலக வர்த்தக அமைப்பின் தலைமையும் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன.

உலக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் நாசகர புதிய தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது என்று முடிவெடுத்து செயல்பட்டு வரும் மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு உதவி புரிவதாக உறுதி மொழி அளித்துள்ளது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு, செப்டம்பர் 3, 4 தேதிகளில் தலைநகர் டில்லியில், நாடாளுமன்றத்திற்கு தெரியாமல், நாட்டு மக்களுக்கு தெரியாமல் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளது வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 35 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். வெள்ளியன்று இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நின்று போயுள்ள உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை மேலும் தீவிரமாக தொடர்வது என்ற ஒப்பந்தத்தை இக்கூட்டத்தில் எட்டியிருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும், தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

செப்டம்பர் 14-ம்தேதி ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் தலைமை பேச்சுவார்த்தை குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து, தற்போது எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், பேச்சுவார்த்தையை மேலும் தொடர்வது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் ஆனந்த் சர்மா கூறினார்.

செப்டமப்ர் 14-ம்தேதி ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்திய விவசாயத்திற்கு அழிவுப் பாதையை உருவாக்கும் உலக வர்த்தக அமைப்பின் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மன்மோகன் சிங் அரசின் அமைச்சர் ஆனந்த் சர்மாவும் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இந்திய விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இத்தகைய நாசகர நடவ டிக்கையை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிக் கட்சிகளும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

குறிச்சொற்கள்: , ,

எளிமையான காங்கிரஸ் மந்திரி


காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி சண்டையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், என .பொ.சி கேலி செய்வார்.

அது உண்மை என்பதை இன்றைக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் பறைசாற்றும். ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழ் நாடு கமிட்டியிலும் கோஷ்டி சண்டையை மறந்து ஒன்றுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை .

1955-57 ஆண்டுகளில் பூ.கக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்ட இந்த குறுகிய காலமே கோஷ்டி சண்டை மட்டுப் பட்டிருந்த காலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மேலும் கக்கன் தலைவராக இருந்து சந்தித்த 1957 பொதுத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 155 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

கக்கனின் சாதனை மகுடத்தில் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை என பல மாணிக்கக் கற்கள் உண்டு. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அவற்றை அசை போடுவது உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாக அமையும்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர் பூசாரி கக்கன் .இவர் மேலூர் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரியாகவும் அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர். இவருக்கு பெரும்பி அம்மாள், குரும்பி என இரண்டு மனைவிகள் உண்டு. தான் தாழ்த்தப் பட்ட சாதியில் பிறந்து தோட்டியாக பணிபுரிய நேரிட்டாலும் தம் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தணியாத வைராக்கியத்தோடு பிள்ளைகளைப் படிக்கவைத்தார்.

இவரின் முதல் மனைவிக்கு 1909ஜூலை 18ஆம் நாள் பிறந்தார் நம் கதாநாயகன் கக்கன். ஐந்து வயதில் மேலூர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின் திருமங்கலம்அரசு மாணவர் விடுதியில் தங்கி உயர்நிலைக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று ஆசிரியர் ஆனார். தான் படித்துத் தேறியது தனக்காக அல்ல, தமது சமுதாயத்துக்காகவே என உணர்ந்த கக்கன், தான் வாழ்ந்த பகுதியில் தீண்டப் படாதவர் வாழும்படி நிர்பந்திக்கப்பட்ட சேரிப்பகுதிகளில் இரவுபாடசாலைகள் அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி போதித்து பள்ளிகளில் சேரவைத்தார். இந்த அருந்தொண்டு பற்றி கேள்விப்பட்ட மதுரை வைத்திய நாத ஐயர், இவரை வாழ்த்தி ஊக்கம் அளித்தார்.

விடுதலை இயக்கத்திலும் அரிஜன சேவையிலும் கக்கனின் பணிகள் முத்திரை பதித்தன. மதுரை மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அரிஜனப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலூரில் மாணவ, மாணவியருக்கு என இரண்டு தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன. இரண்டுக்கும் கக்கன் காப்பாளராக இருந்தார்.

1938ஆம் ஆண்டு சொர்ணம் பார்வதி என்பவரை மணந்தார். சிவகங்கை அரசரின் உறவினரான ஆர்.சசிவர்ணத்தேவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் சடங்கு சாங்கிய மின்றி எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.1932ஆம் ஆண்டுக்கு பிறகு அரிஜன சேவையில் மும்முரம் காட்டிய காங்கிரசார்,கோவில் நுழைவுப் போராட் டங்களில் தீவிரம் காட்டினர். கக்கன் அதில் முன்னிலையில் நின்றார்.

1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புனிதமடைந்தது. ஆம், அதுவரை தீண்டத்தகாதவர்கள் உள்ளே நுழைய இருந்த வேலியை உடைத்துக் கொண்டு வைத்தியநாத ஐயர் எல்.என்.கோபால்சாமி, தலைமையில் பூ.கக்கன், சாமிமுருகானந்தம், முத்து, விஎஸ் முருகானந்தம், வி.ஆர். வலிங்கம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட தோழர்களும் விருதுநகர் எஸ்.எஸ் சண்முக நாடார் (அன்றைய காலகட்டத்தில் நாடார்களும் தீண்டத்தகாதவர்கள் போல் கோவில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டிருந்தனர்)ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்தனர். இதனைகுருதி சிந்தாப் புரட்சி என ராஜாஜி வர்ணித்தார். அதைத் தொடர்ந்து கூடல் அழகர்,கள்ளழகர் என வரிசையாக பல கோயில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடைபெற்றது.அரசும் சட்டமியற்றி உரிமை வழங்கியது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942ஆகஸ்ட்8 அன்று துவங்கியது. கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கக்கன் கடுமையாக தாக்கப்பட்டார்.அப்போது ஏற்பட்ட காயம் இறுதிவரை தழும்பாக அவரது உடலில் பதிந்து விட்டது. ஒன்றரை வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார் .

காமராஜரின் நம்பிக்கைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய சீடர் ஆனார். 1952-57 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957-67 வரை சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் காமராஜர் முதலமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் அமைச்சராகச் செயல் பட்டார். உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார்.

மூன்றே முக்கால் நாள் ஒரு பதவி கிடைத்தாலே வாரிச் சுருட்டுகிற உலகில், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரராகவே இருந்தார். சொத்து சேர்க்கவில்லை. தலைக்கனம் பிடிக்கவில்லை. எளிமையும் நேர்மையும் அவரது மறுபெயராயின. 1975-ல் காமராஜர் மறைவுக்கு பின்னர் தீவிர அரசிலை விட்டு ஒதுங்கிவிட்டார்.

அமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனையில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.

1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது. 1981 டிசம்பர் 28 ஆம் நாள் இந்தத் அர்ப்பணிப்புச் சுடர் அணைந்தது. கக்கனோடு எளிமையும் தியாகமும் காங்கிரசிடம் இருந்து விடைபெற்றுவிட்டது. அவர்கள் கக்கனை மறந்துவிட்டார்கள். ஆனால் நாடு மறக்கக் கூடாது. நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றி உரக்கப் பேசுவோம்

 

குறிச்சொற்கள்:

200 தலித்`ஏர்ஹோஸ்டஸ்’ மாணவிகள் ஏமாற்றப்பட்ட அவலம்


தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு விமான பணிப்பெண் பயிற்சி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2006-ம் ஆண்டு அறிவித்தது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், சுமாராக ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும், 24 வயதுக்கு உட்பட்ட வராக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள். தகுதியுள்ள நூறு பெண்களை தேர்வு செய்து சென்னையில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சிக்கட்டணம், தங்குமிடம், உணவு எல்லாம் இலவசம் என்றும், தாட்கோ மூலமாக இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. 2006 ல் ஆட்சிக்கு வந்தவுடன், தலித் பெண்களுக்காக இப்படியொரு புதிய திட்டத்தை திமுக அரசு அறிவித்தது கண்டு பலரும் மகிழ்ச்சியடைந்தனர். பல்வேறு கல்லூரிகளிலும் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளை படித்துக் கொண்டிருந்த பல தலித் மாணவிகள் தங்கள் படிப்புகளை பாதியிலே தூக்கி வீசிவிட்டு, கலர்கலரான கனவுகளோடு சென்னைக்குப் படையெடுத்தனர். நர்சிங் போன்ற வேலைவாய்ப்பு படிப்புகளைக்கூட துறந்துவிட்டு பலர் வந்தனர். பி.. படிப்பை தூக்கி எறிந்துவிட்டு வந்தவர்களும் பலருண்டு. “விமான பணிப்பெண்’’ என்பது ஒரு கவர்ச்சிகரமான வேலை. வெளிநாடுகளுக்கு விமானத்தில் சென்று வரலாம். கை நிறைய சம்பாதிக்கலாம், சமூகத்தில் நல்ல மரியாதை என பல அம்சங்கள் உண்டு.

நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட மாணவிகளில் நுறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான துவக்கவிழா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விமரிசையாக நடை பெற்றது. ஆதிதிராவிட நலத் துறை அமைச்சரும் அரசு உயர திகாரிகளும் கலந்து கொண்டனர். மாணவிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு ஏர் ஹோஸ்டஸ் அகாடமி (.எச்..) என்ற தனியார் நிறு வனத்திடம் வழங்கப்பட்டது. முதலாண்டு மாணவிகளுக்கு ஓராண்டு கால பயிற்சி நிறைவடைந்தது. அதற்காக தமிழக அரசு செலவழித்தது ஒரு கோடி ரூபாய்.

இரண்டாம் ஆண்டு தொடங்கியது. இப்போது ஆண்களும் இப்பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பயனாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. அதாவது 100 பெண்கள், 100 ஆண்கள் என மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கும் அதே தனியார் நிறுவனம் பயிற்சி அளித்தது. இவர்களும் கடந்த ஆண்டு பயிற்சியை முடித்தனர். இவர்களுக்கு தமிழக அரசு செலவழித்த தொகை ரூ.2 கோடி.

மூன்றாம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இப்போது இரண்டாம் ஆண்டை விட பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டது. அதாவது 50 பெண்களும், 50 ஆண்களும் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, ஏற்கெனவே பயிற்சி அளித்துவந்த தனியார் நிறுவனத்துக்கு பதிலாக இந்திய சுற்றுலா கழகத்தின் சார்பில் தற்போது பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ஆரம்பத்தில் எதற்காக தனியார் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்தார்கள்? இப்போது ஏன் அந்த நிறுவனத்துக்கு வாய்ப்பு பறிக்கப்பட்டது? ஆரம்பத்திலே இந்திய சுற்றுலா கழகத்தின் மூலம் ஏன் பயிற்சி அளிக்கவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன.

முதல் இரண்டாண்டுகள் பயிற்சி முடித்த 300 தலித் மாணவ,மாணவியர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அவர்கள் விமானத்தில் பறந்து கொண்டிருக்கவில்லை.

அனைவரது நிலைமையும் தலைகீழ். பயிற்சிக் காலத்தில் வழங்கப்படுமென சொன்னதில் ஏழு மாத உதவித் தொகையை இன்னும் தரவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள். தங்குமிடம், சீருடை என எல்லாமே இலவசம் என்று சொன்னார்கள். ஆனால் ஒவ்வொரு மாணவியும் சொந்தப் பணத்தில் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்ததாகக் கூறுகிறார்கள். காரணம் ஆடைகள், ஷூக்கள், ஒப்பனை சாதனங்கள் என எல்லாம் தரமானதாக இருக்க வேண்டும். எனவே செலவும் அதிகம். இவர்களுக்கு இலவசமாக ஒரு சீருடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இத்திட்டத்தை நம்பிய தலித் மாணவிகள் மோசம் போய்விட்டார்கள். இதுதான் உண்மை. இவர்களில் ஒருவருக்குக்கூட விமான நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. பாதியில் விட்டு விட்டு வந்த படிப்பும் வீணாய்ப் போக, இப்போது அவர்கள் நடுத்தெருவில். `தலித் பெண்களுக்கு இலவசமாக விமானப் பயிற்சியை அளிக்கப்போகிறோம். இந்தியாவிலேயே இப்படியொரு புதுமையானத் திட்டத்தை கலைஞர் அரசு தான் முதன்முறையாகக் கொண்டுவருகிறதுஎன்றெல்லாம் `பில்டப்கொடுக்கத் தெரிந்த திமுக அரசுக்கு, வேலையை மட்டும் வாங்கித் தர முடியவில்லை.

ஆனால் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அமைச்சர் தமிழரசி. இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற சிலர், சென்னை விமானநிலையத்திலும், சில நட்சத்திர ஓட்டல்களிலும் வேலை பார்க்கிறார்கள். என்ன வேலை தெரியுமா? எல்லாம் எடுபிடி வேலைகள். அரசு விமான நிறுவனங்கள் அல்லது தனியார் விமானநிறுவனங்களில் அவர்களுக்கு வேலை கிடைத்திருக்குமானால் அது தகுதி வாய்ந்ததாக, கவுரவமானதாக, நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் தனியார் விமான நிறுவனங்களுக்கு சில `கீழ்மட்டபணிகளை செய்து தரும் சில துணை நிறுவனங்களில் (நீல் மெட்டல் பனால்கா மாதிரி) ஒப்பந்தப் பணியாளர்களாக இந்த தலித் பெண்கள் பணி யாற்றுகிறார்கள். விமானப் பணிப்பெண் வேலை அல்ல. கிரவுண்டு ஸ்டாஃப் என்ற பெயரில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றுகிறார்கள். அதுவும் கூட இரண்டாண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

அரசின் பயிற்சியையும், வேலைவாய்ப்புக்கான உத்தர வாதத்தையும் நம்பி வந்த தலித் மாணவ, மாணவிகளை இப்படி நவீன தீண்டாமைக்கு உள்ளாக்குவது முறைதானோ?

 

குறிச்சொற்கள்:

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என முரசொலி முந்துவது ஏன்?


மதிப்பெண் சான்றிதழ் மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி மருத்துவர் மற்றும் அவரது மகனுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை, மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் நிர்பந்தித்தது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 180 உறுப்பினர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டுகிற அளவுக்கு செல்வாக்குள்ள அந்த மகா மந்திரி யார்? என்று அந்த மனுவில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

ஆனாலும்எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக முரசொலி ஏடு முந்திக்கொண்டு பெட்டிச் செய்தி ஒன்றை எழுதி கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடும் கம்யூனிஸ்ட்டுகள் என்று தலைப்பிட்டு (2.8.2009) கேரளத்தில் பினராயி விஜயனுக்கு ஒரு நீதி, நீதிபதியை மிரட்டிய மந்திரிக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளத்தில் பினராயி விஜயன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரசாரால் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விரிவான பதிலை பலமுறை தெரிவித்தபோதும், அபாண்டமான குற்றச் சாட்டை அடைகாத்து பொய்க்குஞ்சுகளை அவ்வப்போது பொரித்து வருகிறது முரசொலி ஏடு.

பினராயி விஜயன் ஊழல் செய்தார் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தலைமை தணிக்கை அதிகாரிஉயர்நீதிமன்றம்சிபிஐ விசாரணைக்குழுஆளுநர் என அனைத்துத் தரப்பும் அடித்துச் சொல்லி விட்டதாக அடித்து விடுகிறது முரசொலி.

மின்திட்ட புனரமைப்பு தொடர்பாக லாவாலின் என்ற கனடா நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்பட்டது கேரளத்தில் காங்கிரசார் ஆட்சியில் இருந்தபோதுதான். பின்னர் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தத் துணை ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக காங்கிரஸ் அரசினாலேயே மாநில அரசின் கண்காணிப்பு (லஞ்ச ஒழிப்பு) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது பினராயி விஜயன் தரப்பில் எந்தத் தவறும் நேரிடவில்லை என அதன் இயக்குநர் அறிக்கை தந்தார். இந்த ஒரேகுற்றத்திற்காக அந்த இயக்குநரின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

மத்திய புலனாய்வுத்துறை கூட தன்னுடைய அறிக்கையில் எந்த இடத்திலும் பினராயி விஜயன் பணமோ சொந்த ஆதாயமோ பெற்றதாக குறிப்பிடவில்லை.

பினராயி விஜயன் மீது வழக்குத்தொடர்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியதன் அடிப்படையில், மாநில அரசும் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டியதில்லை என ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் காங்கிரசின் கைப்பாவையான ஆளுநர், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்து, மாநிலத் தலைமை வழக்கறிஞரின் கருத்தையும் புறக்கணித்து, வழக்கு தொடர அனுமதித்தார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைக்கூட ஆளுநர் கலந்தாலோசனை செய்யவில்லை. யாரோ ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஆலோசனை பெற்றதாக கேரள ஆளுநர் கூறினார். அவரின் பெயரை தெரிவிக்கக்கூட ஆளுநர் தயாராக இல்லை.

இந்நிலையில் இந்த பொய்வழக்கை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சந்திப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக அறிவித்திருக்கிறது.

இதுதான் முரசொலி நீட்டிமுழக்கும் ஊழல் வழக்கின் சுருக்கம்.

ஆளுநரே கூறிவிட்டார், அதன் பிறகு என்ன என்று முரசொலி முழங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறனின் கருத்தோவியத்தை முரசொலி ஏடு மறுபதிப்பு செய்து வருகிறது. இதில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட மாநில அரசின் அதிகாரங்கள் ஆட்டுக்குத்தாடி என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட ஆளுநரால் எவ்வாறு வெட்டிச்சுருக்கப்படுகிறது என்று விலாவாரியாக விவரிக்கப்படுகிறது.

சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில் காங்கிரசாரின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு கலைக்கப்பட்ட தருணத்தை தவிர, மற்ற முறையெல்லாம் ஆளுநரின் அறிக்கையைப் பெற்றே மாநில அரசு கலைக்கப்பட்டது. அப்போது அதை திமுக மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியும் கண்டித்தது. ஆளுநர் கூறி விட்டால் அதற்கு அப்பீலே இல்லை என்று திமுக தனது நிலையை இப்போது மாற்றிக் கொண்டதா? மாநில சுயாட்சி கோரிக்கையை புதைத்து மலர் வளையம் வைத்துவிட்டார்களா?

இப்போது கேரள ஆளுநரின் முறையற்ற செயலை நியாயப்படுத்தி காங்கிரசாரோடு சேர்ந்து திமுக, “கோவிந்தா! கோவிந்தா!!” என்று குத்தாட்டம் போடுவது ஏன்?

முன்ஜாமீன் வழங்குமாறு தம்மை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியே உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது பகிரங்கமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்துதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை நம்பாமல் பிரதமரிடம் நம்பிக்கை வைத்து அவரிடம் மனுக்கொடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறது முரசொலி.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மத்திய அமைச்சர் நேரடியாக பேசவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளபோதும், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் மத்திய அமைச்சர் பேசும் வகையில் செல்போனில் எண்களை அழுத்தி தொடர்பு கொண்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே, அதுகுறித்து விசாரிக்குமாறு கூறுவதில் என்ன தவறு?

உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை மட்டும் குரங்குபிடியாக பிடித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது ஏன் என்றும் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்துவதிலேயே குறியாக இருப்பது ஏன் என்றும் முரசொலி ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. 180 எம்.பி.க்கள் எந்த மத்திய மந்திரியையும் பெயர் குறிப்பிட்டு விசாரணை கோராத போது, முரசொலி இப்படி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த அப்பம் போல குதிப்பது ஏன்?

ஆப்பசைத்த குரங்காக இந்த விவகாரத்ல் மாட்டிக்கொண்டது யார்?

இதை பெரிதாகிவிடாமல் அமுக்கிவிட முயல்வது யார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும்.

மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் 180 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு என்பது வெறும் காகிதமல்ல. பிரதமர் தலையிட்டே ஆக வேண்டிய விவகாரம்.

நீதித்துறை விவகாரத்தில் அரசு எப்படி தலையிட முடியும் என்று மன்மோகன் சிங் ஆணித்தரமாக கூறிவிட்டாரே என்றும் முரசொலி ஏடு கூறியுள்ளது.

போபர்ஸ் வழக்கில் சோனியா காந்தி யின் உறவினர் குவாத்ரோச்சி, சிபிஐயினால் விடுவிக்கப்பட்டபோதுஒரு அப்பாவியை எவ்வளவு நாள்தான் சித்ரவதை செய்ய முடியும் என்று கேட்ட பெருந்தன்மை பெருந்தகையிடமிருந்து அப்போதைக்கு அந்த பதில்தான் வரும். ஆனால் 180 எம்.பிக்களின் கேள்விக்கு பிரதமர் என்ற முறையில் அவர் பதிலளித்துத்தான் ஆக வேண்டும்.

 

சரத்குமாருக்கு சில கேள்விகள்?


பாரதிய ஜனதா தலைமையிலான மக்கள் நலன் காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். சிந்தித்து செயல்படும் வலிமையான அரசு நமக்குத் தேவை, என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், கோவைத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கையில் கூறியுள்ளார். பாஜகவின் நிழலில் ஒண்டியிருக்கும் சரத்குமாருக்கு சில கேள்விகள் இதோ:-

பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்த போது தானே 2002இல் குஜராத்தில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான நர வேட்டை இனப்படுகொலை நடைபெற்றது. இன்னமும் நரேந்திர மோடி ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் இலட்சணமா?

இன்று பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதே, அதான் நமக்குத் தேவை என்று சொல்கிறீர்களா, அது அடுக்குமா?

மாலேகாவ் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகளைப் பாதுகாக்க முனைந்த கட்சி பாஜக, பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையேஇந்து மதத் தலைவருக்கு எதிரான சதி என்று சொல்லி சீர்குலைக்க முற்பட்ட, வடிகட்டிய மதவெறி கட்சிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது ஏன்?

பாஜக ஆட்சிக் காலத்தில்தானே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையா ஆனது! அது இன்றளவும் நீடிப்பதற்கு, பாஜக கூட்டணி ஆட்சி பின்பற்றிய விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள்தானே காரணம்! அப்படியிருக்க பாஜக கூட்டணி ஆட்சிமக்கள் நலன் காக்கும் என்று நீங்கள் எதை நம்பிச் சொல்கிறீர்கள்?

இன்று சுவிஸ் வங்கியில் இந்தியப் பெருந்தலைவர்களும், அரசியல்வாதிகளும் பதுக்கி வைத்துள்ள பணம் பற்றிப் பேசுகிற பாஜகவின் கூட்டணி ஆட்சியில் மொரீஷியஸ் நாட்டோடு ஒப்பந்தம் போட்டு, இந் தியாவில் வரியை ஏய்த்துக் கொள்ளை லாபத்தைக் கொண்டு போக வழி வகுத்தது உங்களுக்கு தெரியாதா?

இந்தியாவில் உணவு தானிய விற்பனையில் ஆன்லைனில் ஊக வர்த்தகத்தை நடத்தி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத் ததே பாஜக கூட்டணி ஆட்சிதானே?

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்து உணவுகளைப் பதுக்கல் செய்து, கொள்ளை லாபம் கொழிக்கும் வர்த்தக முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும் பாஜக கூட்டணி ஆட்சிதானே? இது தான் மக்கள் நலன் காக்கும் செயலா?

கார்கில் யுத்தத்தின்போது சவப்பெட்டி வாங்கியதில் கூட ஊழல் செய்து நமது படை வீரர்களின் உயிர்த்தியாகத்தையே அவமதித்தஉத்தம கட்சியல்லவா பாஜக கூட்டணி அரசு? இதுதான் நமக்கு மீண்டும் தேவையா?

 

குறிச்சொற்கள்: