RSS

Category Archives: சிதம்பர ரகசியங்கள்

மநுவின் வாரிசுகள்


“நாங்கள் வித்தியாசமான கட்சி” என்று ஓயாது பீற்றிக்கொள்ளும் பாஜகவின் லட்சணம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சட்டமன்றத்தில் மிக முக்கியமான பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருக்கிறபோது மூன்று பாஜக அமைச்சர்கள் அலை பேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சில தொலைக்காட்சிகள் அந்தக் காட்சியை அப்படியே ஒளிபரப்பி விட்டன.நாடே கொந்தளிக்கிறது. வேறு வழியில்லாமல் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதியும், மகளிர்- குழந்தைகள் நல அமைச்சர் சி.சி. பாட்டீலும், விளையாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண பலேமரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பண்பாட்டைப் பற்றி வாய்கிழியப் பேசும் பாஜகவின் முகமூடி மட்டுமல்ல உடை முழுமையுமே கழன்று விழ நாட்டு மக்கள் முன்னால் நிர்வாணமாய் நிற்கிறது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தன் மனைவி என்று சொல்லி இன்னொருவர் மனைவியை கூட்டிக்கொண்டு போன அசிங்கம் ஏற்கெனவே அரங்கேறி நாடே காறித் துப்பியது. பொதுவாக பாஜகவை காவிக்கட்சி என கூறுவது வழக்கம். ஆசிரமங்களில் சில போலிச்சாமியார்கள் நடத்துகிற காமக்களியாட்டங்கள் வீடியோ காட்சிகளாய் நாட்டையே உறை யவைத்ததுபோல் காவிக்கட்சியும் தன் பங்கை நிறைவேற்றி இருக்கிறதோ?

காதலர் தினத்தன்று இளைஞர்கள் கொண்டாடுவதை பண்பாட்டு விரோதம் என்று கூப் பாடு போட்டு காதல் ஜோடிகளை தாக்குகிற அயோக்கியத்தனம் கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறும். ஒருமுறை காதல் ஜோடிகளை கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறோம் என இந்தக் காலிக்கூட்டம் களத்தில் இறங்கியது. பூங்காவில் பேசிக்கொண்டிருந்த அண்ணன்- தங்கையை கட்டாயத் தாலி கட்ட வைத்த அராஜகத்தை மறந்துவிட முடியுமா? இந்த ஆண்டும் அந்த ‘ராமர்சேனை’ தன் கரசேவையைத் தொடங்கிவிட்டது.

கல்லூரி மாணவிகள் உடை உடுத்துவதில் கூட நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என இந்தக் காலி(வி)க்கூட்டம் செய்கிற அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. இப்போது இவர்களுடைய முழு யோக்கியதையும் கண்டு நாடே சிரிக்கிறது.

அதுமட்டுமல்ல, ஊழலைப் பற்றி இவர்கள் உரக்கப் பேசுவார்கள். ஆனால் பங்காரு லட்சுணன் முதல் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் வரை பாஜகவுடைய இரட்டை வேடத்தை ஊரறிய படம்பிடித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். மதவெறியும், பதவிவெறியும், பணவெறியும், ஒழுக்கக் கேடுகளும் மிகுந்தவர்களுடைய கூடாரம்தான் பாஜக என்பதை ஒவ்வொரு சம்பவமும் நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக்கொள்கையிலும் எந்த விதத்திலும் மாற்றுக்கொள்கை இல்லை. சமூகத் தளத்திலும் மிகவும் பிற்போக்கானவர்களே இவர்கள். பெண்களை வெறும் போகப் பொருளாகவும் ஆணின் அடிமைகளாகவும் பார்க்கிற சனாதன மநுவின் பார்வைதான் இவர்களின் அடிப்படைக் கோட்பாடு என்பதால், இவர்கள் ஆசிரமத்தில் இருந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் ஆபாசப்படம் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், இந்த பஞ்சாங்கத்தனம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியவை. மக்கள் இந்த ‘யோக்கிய சிகாமணிகளை’ அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். வெறுத்து ஒதுக்க வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை ஒழிக்க வேண்டாமா?


தில்லைக் கோவிலில் தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்திவரும் பின்னணியில் 1987ம் ஆண்டு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. அதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் அந்த நியமனம் தொடர்பாக மறுஆய்வு நடத்த ஆணையிட்டது. அதன்படி மறு ஆய்வு மேற்கொண்ட அரசின் இந்து அறநிலையத் துறை ஆணையர், அந்த நியமனம் சரியானதே என்று அறிவித்தார். தீட்சிதர்கள் அதை எதிர்த்தும் முறையீடு செய்தனர்.

நீதிமன்ற ஆணையின் படி மறுஆய்வு செய்த அரசுச் செயலரும், நிர்வாக அதிகாரி நியமனம் சரியான நடவடிக்கையே என்று உறுதிப் படுத்தினார். இப்படியே 2006ம் ஆண்டு வரையில் அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே பிரச்சனை அலைபாய்ந்து வந்தது. 2006ல் தீட்சிதர்கள் மறு முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு, சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடுவதற்கான போராட்டம் நடத்தி வரும் ஆறுமுகசாமி கோரிக்கை விடுத்தார். அவர் சார்பில் மனித உரிமைக்கழகம் வழக்கை நடத்தியது. இக்கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜூ அரசு நியமனத்திற்கு ஆதரவாக வாதாடினார்.

திங்களன்று வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டது செல்லும் என்று கூறி, ஒருவார காலத்திற்குள் அதிகாரியிடம் ஆலய நிர்வாகத்தை தீட்சிதர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த நீதிபதி, அதில் தீர்ப்பு வரைமுறையில் அதிகாரி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தீட்சிதர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.

இதன்படி ஒரு வார காலத்திற்குள் சிதம்பரம் கோவிலின் நிர்வாகம் அரசு அதிகாரியின் பொறுப்பில் வருகிறது.

உண்மை

தில்லை நடராசன் கோயில் சொத்துக்கள் அனைத்தும் தீட்சதப் பார்ப்பனர்களின் பெயர்களிலே உள்ளன. நடராசன் கோயில் பெயரில் எந்த சொத்தும் கிடையாது என்பது அதிர்ச்சியான தகவல். தில்லை நடராசனுக்கு சொந்தமான நகைகள், நடராசனுக்கு கட்டப்படும் ஆடை கூட நடராசன் கோயில் பெயரில் கிடையாது.பார்ப்பன தீட்சதர்களின் குடும்பங்கள் பெயரில் சுமார் 1700 ஏக்கர் நிலம் எழுதப்பட்டு, பரம்பரை பரம்பரையாக அவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. கோயில்களை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டபோதுதில்லை நடராஜன் கோயில் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்பதால், அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை. ஆனால், தில்லை நடராசன் கோயிலுக்குள்ளேயே இருக்கும் இந்த சிறிய பெருமாள் கோயில், அறநிலையத்துறையின் கீழ் இருக்கிறது.

இப்போது அரசு கையில் கோவில் நிர்வாகம் சொல்லும் போது மேலும் பல உண்மைகள் வெளிவரும்.அப்போது இந்த பார்ப்பணின் பித்தலாட்டங்கள் வெளிவரும்.

 

குறிச்சொற்கள்:

அமெரிக்க அ(ஆ)ணுரையில் இந்தியா


அடுத்தடுத்து வெற்றி என்பதுபோல் வீரமுகம் காட்ட மன்மோகன் சிங் அரசு முயல்கிறது. ஆனால், சர்வரோக நிவாரணி என்பதுபோல் இவர்கள் உருவேற்ற முயலும் இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு உண்மையில் உத்தரவாதமற்ற `புதைமணல்’ நிலையிலேயே இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையாகிய செனட் சபையின் வெளியுறவுக் குழு, அவையில் 123 உடன்பாடு குறித்து விவாதிக்க ஒப்புதல் அளித்திருக்கிறது. செனட் சபையின் வெளிவர்த்தகக் குழு இதற்கு முட்டுக்கட்டை போடும் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, அப்படியே செனட் சபை ஒப்புக் கொண்டாலும், மக்களவை போன்ற காங்கிரஸ் சபை, இந்த ஒப்பந்தத்தை எந்த அளவுக்கு அனுமதிக்கும் என்பது அமெரிக்க அதிபருக்கே கூட புரியாத புதிர்.

எந்தப் பின்னணியில் செனட் வெளியுறவுக் குழு விவாதத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று பார்த்தால், ஒப்பந்தத்தின் இந்திய வக்காலத்தவர்கள் முகம் வெளுத்துப்போகிறது.

அமெரிக்காவின் ஹைடு சட்டத்திற்கு உட்பட்டதுதான் இந்த உடன்பாடு என்று வெளியுறவுக்குழு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதன் அர்த்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிராக இந்தியா எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அமெரிக்கா இந்த உடன்பாட்டிலிருந்து உருவிக்கொள்ளும் என்பதுதான். அது அணு குண்டு சோதனை நடத்துவது மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுக்குள் அமெரிக்கா அத்துமீறி நுழையும்போது அதை இந்தியா கைகட்டி ஆதரிக்க வேண்டும் அல்லது வாய்மூடி சும்மா இருக்கவேண்டும். நாட்டின் இறையாண்மை இவ்வாறு இழிவுபடுத்தப்படுகிறது.

அமெரிக்கா தனது வர்த்தக தொடர்புகளை அறுத்துக்கொள்ளும் என்பதோடு நிற்காமல், அணு எரிபொருள் விநியோக அமைப்புக்குள் உள்ள மற்ற நாடுகளையும் அறுத்துக் கொள்ள வற்புறுத்தும் என்றும் செனட் குழு நிபந்தனை விதித்திருக்கிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், அணுசக்தி உற்பத்திக்காக என முதலீடு செய்யப்படுகிற பல்லாயிரம் கோடி ரூபாய் இந்திய மக்களின் பணம் சாம்பலாகிவிடும்.

அவ்வாறு கொட்டப்படுகிற நிதி யாருக்குப் போய்ச் சேர்கிறது என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மின் உற்பத்திக்கான சாதாரண கருவிகள் முதல் அணு உலைகள் வரை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தான் இந்தியா வாங்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்க முதலாளிகளின் வேட்டைக்காகவே ஒட்டு மொத்தத்தில் இந்த உடன்பாடு கொண்டு வரப்படுகிறது.

இப்படியெல்லாம் அமெரிக்க நாடாளுமன்றம் இதைப்பற்றி விவாதிக்கலாம் என்கிறபோது, இந்திய மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகள் இதுபற்றி விவாதிக்கவே முடியாது! “பன்னாட்டு அணுசக்தி ஆய்வு முகமையின் ஒப்புதலை பெறுவதற்கு மட்டும் அனுமதியுங்கள், அதன்பின் உடன்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்த ஏற்பாடு செய்கிறேன்” என்று வாக்களித்த பிரதமர், அதை காற்றில் பறக்கவிட்டு நாடாளுமன்றக் கூட்டத்தையே கோழைத்தனமாக அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். கடைசி நிமிட மாயா மாலங்கள் நடந்து அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஒப்புதல் கிடைத்துவிடும். இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போடலாம் என வாஷிங்டன்னில் தவம் கிடக்கிறார்.

 

குறிச்சொற்கள்:

பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை, ஒழிக்க வேண்டாமா?


தில்லை நடராசன் கோயில் சொத்துக்கள் அனைத்தும் தீட்சதப் பார்ப்பனர்களின் பெயர்களிலே உள்ளன. நடராசன் கோயில் பெயரில் எந்த சொத்தும் கிடையாது என்பது அதிர்ச்சியான தகவல். தில்லை நடராசனுக்கு சொந்தமான நகைகள், நடராசனுக்கு கட்டப்படும் ஆடை கூட நடராசன் கோயில் பெயரில் கிடையாது.கோயில்களை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டபோதுதில்லை நடராஜன் கோயில் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்பதால், அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை.

பார்ப்பன தீட்சதர்களின் குடும்பங்கள் பெயரில் சுமார் 1700 ஏக்கர் நிலம் எழுதப்பட்டு, பரம்பரை பரம்பரையாக அவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, இதே தில்லை நடராசன் கோயிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் என்ற விஷ்ணு கோயிலும் சிறிய அளவில் உள்ளது. சிவன் கோயிலுக்குள்ளே விஷ்ணு கோயிலும் இருப்பது சிதம்பரத்தில் தான். இந்த பெருமாள் கோயிலுக்கு, வைணவப் பார்ப்பனர்களே அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால், தில்லை நடராசன் கோயிலுக்குள்ளேயே இருக்கும் இந்த சிறிய பெருமாள் கோயில், அறநிலையத்துறையின் கீழ் இருக்கிறது. அப்படியானால் நடராசன் கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர முடியாதா?

கோயிலுக்குள்திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்று அறநிலையத்துறை முதலில் அறிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து, தீட்சதப் பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றம் சென்ற பிறகு, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தேவாரம் பாடும் உரிமை, அரசின் ஆணையாகவே வெளிவந்தது. அரசின் ஆணைக்கே கீழ்ப்படிய மறுக்கும் தீட்சதப் பார்ப்பனர்களை, அரசு சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
சைவர்களின் பக்தி நூலாகிய – சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை இரண்டாம்குலோத்துங்கன் யானை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்து, இதே தில்லை நடராசன் கோயிலிலே தான் அரங்கேற்றம் செய்தான். குலோத்துங்கன் ஆட்சியில் சேக்கிழார் அமைச்சர். அந்தத் தில்லையிலே தேவாரம் ஓதுவதற்கு தடை போடுகிறார்கள், தீட்சதப் பார்ப்பனர்கள். தேவாரம் ஓதியதால் தீட்டாகிவிட்டது என்று தீட்சதப் பார்ப்பனர்கள், தீட்டுக் கழிக்கிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை, ஒழிக்க வேண்டாமா?

 

சிதம்பர ரகசியங்கள்


மார்ச் 2ஆம் தேதி அன்று சிதம்பரம் நடராஜர் கோயில் சன்னதியில் முதல் முறையாக தேவாரம் பாடப்பட்டது. இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியவர் சிவனடியார் திரு.ஆறுமுகம் சாமியார் அவர்கள். இது சாதாரண சாதனை அல்ல. சிவனடியார் அவர்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இதற்கு தடையாக இருந்தவர்கள் யார் தெரியுமா? தமிழர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பார்ப்பனியர்கள். கறையான் புற்று கட்ட அதில் கருநாகம் குடிக்கொள்ளும். அதுபோல, அன்று உழைக்கும் மக்களால் கட்டப்பட்ட இந்த நடராஜர் கோயிலில், ஒரு கல்லை கூட எடுத்து வைக்காத பார்ப்பனிய கும்பல், கோயில் தனக்கு சொந்தம் இதில் யாருக்கும் உரிமை இல்லை என்று கூறிவருகிறது.

தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் முதலிய பக்திப் பாடல்கள் எல்லாம் ஒலித்த தில்லைகோயில் திருசிற்றம்பல மேடையில் பலகாலம் பாடப்பட்டு வந்தது. இது கருவறையில் நுழைவேன், அங்கு பூஜை செய்வேன் என்று யாரும் போராடவில்லை தீட்சிதர்கள் தங்கள் பூஜையை முடித்ததும் திருசிற்றம்பல மேடையில் பாடுவேன்
என்று தான் ஆறுமுகசாமியார் போராட வந்தார். ஆனால் தீட்சிதர்கள் திருசிற்றம்பல மேடையில் பாடாதே வேண்டுமானால் பிரகாரத்தின் கீழே இருந்து பாடிக்கொள் என்றனர். இங்குதான் வில்லங்கம் ஆரம்பமானது. இப்படி சொல்ல தீட்சிதர்களுக்கு உரிமை உண்டா, என்று பார்த்தால் இல்லை. அதற்கான காரணம்,

ஏனென்றால், சிதம்பரம் கோயில் ஒரு பொதுக்கோயில் இதில் தீட்சிதற்கு மட்டும் உரிமை இல்லை என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு இந்த பிரச்சனையில் தலையிட உரிமை உண்டு. திருசிற்றம்பல மேடையில் தீட்சிதர் தான் தொன்று தொட்டு திருமறைகளை ஓதி வருகிறார்கள் என்பது தவறு. ராஜராஜ சோழன் காலத்தில் தான் திருமறைகள் தொகுக்கப்பட்டன. எனவே தொன்றுத்தொட்டு என்ற வாதம் ஏற்க முடியாது. அந்நிய படையெடுப்பு, சைவ, வைணவ பிரச்சனைகளின் போது நடராஜர் திருக்கோயில் பூஜைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. கால பூஜை நேரம் தவிர அனைவரும் மேடையில் நின்று வழிபடலாம். தீட்சிதர் வாயால் தமிழ் வந்தால் புனிதம் கெடாது, மற்றவர்கள் வாயால் தமிழ் வந்தால் புனிதம் கெடும் என்பது சுத்த பொய். திருவண்ணாமலை, திருவானைக் காவல் கோயிலில் ஓதுவர்கள் கருவறை முன்பாகவே நின்று தான் பாடுகிறார்கள் ஒதுங்கி நின்று பாடுவதில்லை.அங்கு மட்டும் புனிதம் கெடவில்லையா? தட்டில் பல்வேறு மக்கள் காசு போடுகிறார்கள். அதை தொட்டு எடுக்கும் போது தீட்டு வராத?

தீட்சிதர்கள் கருவறையில் எப்படி ஆராதனை செய்யவேண்டும். என்ன கிரியைகள் செய்யவேண்டும் என்று ஆலோசனை கூற அனுமதி கேட்பதில்லையோ, அதேபோல் பக்தர்களுக்கு வழிபட இவர்கள் ஆலோசனை கூறத்தேவையில்லை. ஓதுவார்கள் நியமிக்கப்பட்டதே திருமறைகளை உரக்கப்பாடுவதற்குத்தான். அது பூஜையின் ஒரு அங்கம். கால பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் திருசிற்றம்பல மேடைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் போது, அப்போது யாரும்பாடாதே என்று சொல்ல முடியுமா? சொற்றமிழால் எமைப்பாடுக என்று பக்தர்களுக்கு தானே சிவன் சொன்னான்? நாயன்மார்கள் சிற்றம் பல மேடையில் பாடியதாக வரலாறு சொல்கிறதே?

சிதம்பரம் கோயிலை தரிசிக்க செல்லும் மக்களிடம் கோயிலில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என கேட்டால் பலருக்கும் விடை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ஒன்றா, இரண்டா எவ்வளவோ ரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. ஏதோ எனக்கு தெரிந்த ரகசியங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜாரை தரிசிப்பதற்காக சென்றவர்களை கொன்ற சம்பவமே சிதம்பர ரகசியம் ஆகும். இதில் முதலில் கொலை செயப்படடவர் அப்பர் என்கின்ற திருநாவுக்கரசு ஆவார். முதலில் இவர் எப்படி கொலை செய்யப்பபட்டார் என்பதை பார்ப்போம்

63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் ஆவார். அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார். பிறகு சைவ சமயத்திற்கு மாறிச் சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர். வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர் இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர். இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.

“என்றும் நாம் யாவருக்கு மிடையோ மல்லோம்
இருநிலத்தில்எமக் கெதிராய்எவருமில்லை
சென்று நாம் சிறு தெய்வம் சேரப்பெற்றோம்
சிவபெருமான் திருவடியே சேர்வோ மல்லோம்
ஒன்றினிலும் குறைவுடையோ மல்லோம் அன்றே
உறுபிணியார் செறலொழிந் திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னி
புண்ணியனை நண்ணிய புண்ணியத் துளமே”
(அப்பர் தேவாரம்)

என்ற பாட்டை பாடிவிட்டு சம்பந்தரோடு பதில் ஏதும் கூறாமல் கிளம்பிவிட்டார்.

இதனால் கோபமுற்ற சம்பந்தர் எப்படியாவது அப்பரை ஒழித்துகட்ட பிராமணர்களோடு சேர்த்து திட்டம் திட்டினார். இதற்கிடையில் அப்பர் சிறு தெய்வங்கள், யாகங்கள், பலியிடுதுதல் , நம்முடைய அறமல்ல. என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக ஒருநாள் திருநறுங்கொண்டை என்னும் ஒரு ஜைனக் கிராமத்தை அடைந்தார். அங்கு ஜைன ஆலயம் இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றார்.அங்குள்ள ஜைனர்கள் அப்பரை முகமலர்ந்து வரவேற்று, நீர் எந்த மதத்தைப் பரவச் செய்யினும், கொல்லாமையை போதிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு அளவிடாது என்று கூறினார்கள். இம்மொழியை கேட்ட அப்பர், தான் சம்பந்தரோடு சேர்ந்து சமணர்களுக்கு இழைத்த தீங்கெல்லாம் கண்முன் தோன்றப் பெற்று, மிகவும் வருந்திஅந்தோ! தருமக் கொள்கை உடையவராகிய நமது உடன் பிறந்த சமணர்களை அழித்து, வஞ்சனை நிரந்த பார்ப்பனர் அறத்தை வளர்க்கச் சம்பந்தப் பார்ப்பனர் வலையில் வீழ்ந்தொமே!” என்று கண் கலங்கினார். சமணர்கள் அப்பரின் மனமாற்றத்தை கண்டு மகிழ்வுற்று, “எங்கள் அருகதேவன் உம்மை இன்று ஆட்கொண்டான் என்று நினைக்கிறோம்என்று முகமன் கூறினார்கள்.

அச்சமயத்தில், சிதம்பரம் நடராசர் மகோற்சவம் நெருங்கிவிட்டதென்றும், அவ்விழாவை இடையூறின்றி நடத்தி முடிக்க, அவ்வூர்ப் பத்திரக்காளி அம்மனுக்கு காப்புக்கட்டி உற்சவமும், உயிர்ப்பலியும் நடைபெறப் போகிறது என்று கேள்விப்பட்ட அப்பர் மிகுந்த ஆத்திரத்தொடு சிதம்பரம் நோக்கிப்புறப்பட்டார். திருநறுங்கொண்டையில் நடந்த சேதியை அறிந்த அந்தணர்கள் அவரை தந்திரமாக கொல்ல முடிவு செய்தனர். அப்பர் நடராசர் பேரில் பாடல்களை பாடிக்கொண்டே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தார். உடனே, ஏற்கனவே திட்டமிட்ட படி அப்பர் உள்ளே நுழைந்ததும் கதவை முடிவிட்டனர். வெளியே இருந்த மக்கள் ஏன் கதவை முடுகிறீகள் என்று கேட்டதற்கு அப்பருக்கு கடவுள் காட்சி அளிக்க உள்ளார் என்று கூறிவிட்டனர். உள்ளே நுழைந்த அப்பரை அங்கு மறைந்து இருந்த அந்தணர்கள் கொன்று புதைத்துவிட்டு, அப்பர் இறைவன் அடி சேர்ந்துவிட்டார் என்று உலகுக்கு அறிவித்து விட்டனர். அப்பரின் இறுதி (முடிவு) பற்றி பெரியபுராணத்தில் சரியான விளக்கம் சொல்லாமல் மழுப்புகிறது.

நந்தனார் படுகொலை
நந்தனாரைப் பற்றி கேள்விப்படாதவர் தமிழகத்தில் எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர்.
மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம் நடராசரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டு ஒவ்வொரு
நாளும் முயன்று இருக்கிறார் முடியவில்லை. அதனாலே, இவர்திருநாளைப் போவார்எனப் பெயரும் பெற்றார். பிறப்பால்பறையன்என்ற ஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தனர். நந்தனின் தொல்லை பொருக்ாத பார்ப்பன நரிகள் சதி திட்டம் தீட்டின. கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்து தருகின்ற தீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும் என்றனர்.

நடராஜப் பெருமாள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான். பார்ப்பனர்கள் மர கட்டைகளை கொண்டு தீவைத்தனர். நந்தா! இத்தீயில் மூழ்கி உன் இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தண வடிவொடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்தி வணங்கு என்றனர். அனுமதி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் நந்தன் தீயில் சிக்குண்டு வெந்து சம்பலானார். தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடு இரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டி பாமர மக்களை ஏமாற்றிவிட்டனர். சதி செய்து கொன்ற ரகசியம் பார்ப்பனர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. அப்படி என்றால் ஆண்டவனை அடைய பார்ப்பான் கோலம் தான் யூனிஃபாமா? நந்தன் கோயிலுக்கு நுழைந்த தெற்குப் புறவழி கூட இன்று வரை அடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட நீங்கள் நேரில் பார்க்கலாம். நந்தன் நுழைந்த வழி தீட்டு பட்டுவிட்டது என்று கூறி பார்ப்பனர்கள் அந்த வழியை முடிவிட்டனர். நந்திக்கும், நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில் கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டு விட்டது.

ஆக, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும் பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமே சிதம்பர ரகசியம் ஆகும்.

இது அத்தனையும் படித்த பாரதி சூத்திரனுக்கு ஒரு நீதி தண்ட சோறு உண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி என்று சாத்திரம் சொல்லுமாயின் சாத்திரம் அல்ல சதி என கண்டோம் என எழுதினான்.