RSS

Monthly Archives: ஜூன் 2012

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை


கடந்த இருபது ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் விவசாய நெருக்கடியை உருவாக்கியுள் ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலமான2007-12இல் விவசாய வளர்ச்சி விகிதத்திற்கு 4 விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது சுமார் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. முந்தைய எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதைவிட, கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுறுக்கள் பீரோ  பதிவு செய்திருக்கிறது. 2003-10ஆம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 756 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995-2002இல் 1 லட்சத்து 21 ஆயிரத்து 157 பேர் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சிகள் இல்லாத நிலையில், அங்கேயும் விவசாய நெருக்கடியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் தற்கொலை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபின் கடந்த ஓராண்டில் சுமார் 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் இதுவரை 54 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை வாங்க மறுத்ததன் காரணமாகவும், புதிய கடன் வலைகளில் அவர்கள் சிக்கியுள்ளதன் காரணமாகவும் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்வதுடன், அதிகரித்தும் உள்ளது.
ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இந்த ஆண்டு பட்ஜெட், விவசாயிகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். எரிபொருள்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ரசாயன உரங்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இதனுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் காரணமாக, வெளிச்சந்தையில் எரி பொருள்கள் மற்றும் ரசாயன உரங்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ளன. இதனால் விவசாயிகள் மேலும் கடுமையான முறையில் வறிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதுடன், விவசாயத்திற்காக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் கடன்வலையிலும் அவர்களைத் தள்ளி விட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளித்து வந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டச் செலவினத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரையிலும் குறைத்திருப்பதன் காரணமாக, விவசாயத் தொழிலாளர் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலைகளும் குறைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அதே சமயத்தில் ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமோ, கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. 2004இலிருந்து இதுவரை அவர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகள் 26 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

 

குறிச்சொற்கள்: