RSS

பெட்ரோல் மத்திய அரசின் பெட்ரோல் பொய் கணக்கு

26 மே

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 12 முறைக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்தடுத்து விலை உயர்வு இருக்கும் என்றே தெரிகிறது. அதனால் வரிகள், அரசு நிறுவனங்களின் லாப ஈட்டுத்தொகை என அரசு கஜானாவில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது.

இதில் மக்களின் நிலைமை வேடிக்கையானது. விலை உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். எல்லாம் சில நாள்கள்தான். அதற்குள் இன்னொரு விலை அறிவிப்பு பற்றி அரசு பேசத் தொடங்கும். உடனே பெட்ரோல் விலையை உயர்த்தக்கூடாது என்று மக்கள் மத்தியில் ஆவேசம் கிளம்பும். ஆட்சியாளர்கள் எதையும் பொருள்படுத்தமாட்டார்கள். தங்கள் இஷ்டப்படி விலையை உயர்த்துவார்கள். பிறகு இன்னொரு போராட்டம், இன்னொரு விலை ஏற்றம். இதுதான் நம் நாட்டு அப்பாவிகளின் நிலை.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்துவிட்டது. அடுத்தடுத்து என்னென்ன பொருள்களையெல்லாம் இப்படி ஒப்படைக்கலாம் என நேரம் பார்த்து வருகிறது.

ஒரு கட்டத்தில் எல்லா பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்து விடுவதுதான் அரசின் திட்டம். இதன் பிறகு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும்.

பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதை அரசு பல்வேறு வகையிலும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம், அரசின் மானியச் சுமை, நிதிப் பற்றாக்குறை என என்னவெல்லாமோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இப்போது அரசுக்குப் புதிய காரணம் கிடைத்திருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதாக அரசு கூறுகிறது. ரூபாயின் மதிப்புக் குறையைக் குறைய, உள்நாட்டு டீசல், பெட்ரோல் விலையில் பாதிப்பு ஏற்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.

ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது கணக்குப்படி நாளொன்றுக்கு ரூ.271 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

ஒரு வகையில் பார்த்தால் இது நியாயமானதாகத் தோன்றும். ரூபாயின் மதிப்பு குறைகிறதென்றால், டாலரின் மதிப்பில் கச்சா எண்ணெய்க்கு நாம் கூடுதல் விலை கொடுத்தாக வேண்டும். அதனால் நஷ்டம் ஏற்படுவது உறுதி. இதைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு ஓராண்டின் இறக்குமதிக் கணக்கை எடுத்துக் கொள்வோம்.

2010-11 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதாரம் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப் புத்தகத்தில், 1,06,068 டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் இது 30 சதவீதம். அப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.45.5. இதைக் கொண்டு கணக்கிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு ரூ.4,82,714 கோடிக்குச் சமம்.

இப்போது ஒரு டாலருக்கு ரூ. 50 என்கிற அளவுக்கு ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. இந்த மதிப்பைக் கொண்டு 2010-11 நிதியாண்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணக்கிட்டால் ரூ.5,30,340 கோடி என வரும். அதாவது ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் கூடுதலாக ரூ.47,626 கோடி செலவாகிறது என்று அர்த்தமாகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் சந்தை விலை மாறாமல் இருந்ததால்தான் இந்தக் கணக்கு சரி. ஆனால், அப்படியிருப்பதில்லை. கச்சா எண்ணெய் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.

2009-10-ம் நிதியாண்டில் 66.76 டாலராக இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இப்போது 111 டாலருக்கு உயர்ந்திருக்கிறது என்பது பெட்ரோலிய அமைச்சரின் கருத்து. ரூபாய் மதிப்பு சரிந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் இந்த விலை உயர்வால் ஏற்படும் நஷ்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அரசு கூறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த விளக்கம் முழுமையானதல்ல. சில உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன. பெட்ரோலியப் பொருள்களை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுவதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

ரூபாய் மதிப்பு சரிந்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை மட்டும்தான் அரசு கூறுகிறது. ஆனால் இதில் லாபமும் இருக்கிறது. இறக்குமதியில் நஷ்டம் ஏற்படுகிறதென்றால், ஏற்றுமதியில் லாபம் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் 70 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பலவகைப் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் உண்மை. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, 2010-11-ம் நிதியாண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இது 16.53 சதவீதம். ரூ.45.5 என்கிற பரிமாற்று மதிப்பில் இது ரூ.1,90,781 கோடிக்குச் சமம். ரூ.50 என்கிற பரிமாற்றுப் மதிப்பில் கணக்கிட்டால் ரூ.2,09,590 கோடி. ஆக, ரூ.18,809 கோடி அதிக லாபம் கிடைக்கும்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் ஏற்படும் இழப்பாக அரசு குறிப்பிடும் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிடும்.

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் லாபம் அல்லது நஷ்டத்தை நிர்ணயிப்பதில் வேறு சில காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், நஷ்டக் கணக்கு காட்ட வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் பணியாற்றிக் கொண்டிருப்போர் இதை வசதியாக மறந்துவிடுகின்றனர். உதாரணத்துக்கு நாட்டின் கச்சா எண்ணெய்த் தேவையில் 30 சதவீதம் உள்நாட்டிலேயே கிடைக்கிறது. இதை யாரும் கணக்கில் கொள்வதில்லை.

இவை எல்லாவற்றையும் மதிப்பிட்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் கொள்ளை லாபம் அடைவதைக் கண்டறிய முடியும்.

இதற்கு முந்தைய பல கட்டுரைகளில் கூறியதைப் போல, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற உண்மையை எந்தப் போர்வைக்குள்ளும் மூடிவிட முடியாது.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கு அறிக்கைகள் அமைந்திருக்கின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.

இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.

இவையனைத்தையும் வைத்துப் பார்த்தால், பெட்ரோலிய விற்பனையால் நஷ்டம் ஏற்படுவதாக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறி வருவது மக்களைத் திசை திருப்பும் முயற்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதன் பிறகும் விலையை ஏற்றுவதற்கே அரசு தருணம் பார்த்துவருகிறதே தவிர, விலையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்கவே இல்லை.

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் பெட்ரோலிய விலை உயர்வுதான். அத்தியாவசியப் பொருள் ஒவ்வொன்றின் விலையிலும் அதன் சரக்குக் கட்டணத்துக்கு குறிப்பிட்ட பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் பெட்ரோலிய விலையை உயர்த்தினால், பொருள்களின் விலை உயரும். அதுவே பணவீக்கம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமையும்.

இந்த ஒரேயொரு காரணத்துக்காகவாவது பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் அரசின் செவிகளை அது எட்டவில்லை.

நாட்டு மக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என முழங்கிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, உண்மையிலேயே அந்த அக்கறை இருக்குமானால், பெட்ரோலியக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். எல்லாவற்றிலும் லாபம் பார்த்துவிட வேண்டும் என்கிற வியாபார மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் முடியாதென்றால், லாபத்தை பையில் போட்டுக் கொண்டு, நஷ்டம் ஏற்படுகிறது என்று போலியாகப் புலம்புவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். பாவம் மக்கள்!

நன்றி: தினமணி பி.எஸ்.எம். ராவ்

 

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: