RSS

மின்வாரியத்தைக் காப்பாற்றும் வழி

02 டிசம்பர்

தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான நட்டத்தில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்றும், அதிலிருந்து மின்வாரியத்தை மீட்க வேண்டுமென்றால் மின்சாரக் கட்டணத்தை கட்டாயம் உயர்த்தியே ஆக வேண்டும் என்றும் அதைத்தவிர அரசுக்கு எந்த மாற்று வழியும் இல்லாததால் மக்கள் இந்தக் கட்டண உயர்வை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நம் முதல்வர்!
முதல்வரின் இந்த வாதத்தில் உண்மை உள்ளதா? “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளை மனப்பாடமாக ஒப்பித்து, அதன்படி அரசாங்கத்தை நடத்துவதாக பெருமை கொள்ளும் தமிழக அரசாட்சியாளர்கள் அதன்படி மின்சாரப் பகிர்மானத்தின் மூலம் ஈட்டிய பொருளை சரிவர சேமித்து செயல்பட்டார் களா? அப்படிச் செயல்பட்ட பின்னரும் நட்டம் ஏற்பட்டு மின்வாரியம் இந்நிலைக்கு தள்ளப்பட்டதா? இவைகளுக்கெல்லாம் பதில் இல்லை என்ற ஒற்றைச் சொல்தான்! பிழை பட்ட நிர்வாக முறைகளால் ஏற்பட்ட நடை முறை நட்டங்களை ஈடுகட்டிட மிகுதியாகக் கடன் வாங்கப்பட்டது என்பதே உண்மையாகும். அது இன்று வீங்கிப் பெருத்து மின் வாரியத்தையே விழுங்க நிற்கிறது.
கடந்த 2001 ம் ஆண்டில் இதே முதல்வர் தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தவுடன் அப்போதைய தமிழகப் பொருளாதார நிலை குறித்த ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் 3589 கோடி ரூபாய் நட்டத்தில் உள் ளது என்றும், இதை சமாளித்திட மின்கட்டண உயர்வு அவசியம் என்றும், 7 தனியார் மின்உற்பத்தி நிலையங்களிடம் மின்சாரம் வாங்குவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டது. ஆனால் அந்த ஆலோசனைகள் எதுவும் அவர்களின் ஆட்சிக்காலம் முடியும் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தின் மின்தொகுப்பின் மொத்த மின்விநியோகத்தில் 25 சதவீதம் விவசாயத்திற்கும், 18 சதவீதம் தொழில்நுட்ப ரீதியிலான கம்பியிழப்பிற்கும் சென்று விடுகிறது. மீத முள்ள 57 சதவீதம் மின்சக்திதான் விலைக்கு விற்கும் மின்சாரம் ஆகும்.  வீடுகளுக்கு அளிக்கப்படும் மானிய விலையிலான மின்சாரத்தால் ஏற்படுகிற இழப்பு, தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டாளர்களுக்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கு சற்று கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பதின் வாயிலாக ஈடுகட்டப்பட்டு வந்தது.  இதுதான் குறுக்கு மானியம் என்றழைக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படக்கூடாது என்ற வாதங்கள் பலமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைப் பெறாத அப்பிரிவினருக்கு விவசாய உற்பத்திக்கான மின்சாரத்தை இலவசமாக கொடுப்பது அவசியமானதாகும்.  இந்த இலவச மின்சாரத்தால் தான் அரசின் நியாய விலைக்கடைகளில் தரமான அரிசியை மலிவு விலையில் அடித்தட்டு மக்கள் பெறமுடிகிறது.  தரிசாகப் போடப்படக்கூடிய அபாயத்தில் உள்ள பல ஹெக்டேர்களர் நிலங்கள் விளைநிலங்களாக மாறியிருக்கின்றன.  மேலும் இது நாட்டின் உயிர் நாடியான வேளாண்மை குறித்து அரசு கொண்டிருக்கும் அக்கறையில் வந்தடைந்துள்ள கொள்கை முடிவு.  ஆயினும் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடையும் வண்ணம் அதை முறையாக செயல்படுத்துவதும், ஒழுங்குப் படுத்துவதும் அவசியம் ஆகும்.
வரிகளின் மூலமாக அரசு ஈட்டும் வருவாயில் நிதி ஒதுக்கி, அதிலிருந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்று வழங்கு வதை விட்டுவிட்டு அந்த இலவச மின்சாரத்திற்கான தொகையினை மின்வாரியத்தின் நிதிச்சுமையாக மாற்றுவது என்ன நியாயம்? தமிழக மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் தனது அறிக்கையில், விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் ஆண்டு தோறும் மின்வாரியத்திற்கு 5600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று கணக்கிட் டுள்ளது.  ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கும் தொகையோ ஆண்டுக்கு வெறும் ரூ.250 கோடி மட்டுமே!
மின்சார வாரியம் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள 7 தனியார் மின்நிலையங்களை நாடியது.  2000 ம் ஆண்டு முதல் இந்த தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தின் மொத்த மின் உற் பத்தியில் 9 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்வாரியத்தின் மொத்த வருமானத் தில் 35 சதவீத தொகையை எடுத்துச் சென்றன.  கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பிள்ளைபெருமாநல்லூர் மின்நிலையம் தனது மின்நிலையத்திற்கான எரிபொருளை மாற்றிக்கொண்டது.  இதனால் இந்த மின்நிலையத்தில் இருந்து ரூ.18.54 க்கு வாங்கப்பட்ட ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை இன்று ரூ.2.30 ஆக குறைந்துள்ளது.  தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் ஆண்டிற்கு 80 கோடி யூனிட் மின்சாரம் வாங்குவதற்கு வாரியம் செலவிடும் தொகை ரூ.8000 கோடி ஆகும். இதே போல கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட மின்பற்றாக்குறையினால் வெளி மாநிலங்களிலிருந்தும் தனியாரிடமிருந்தும் வாங்கிய மின்சாரத்திற்கு செலுத்திய தொகையும் அதிகம்.
1998 ம் ஆண்டுகளில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட மின்நிலையங்களை தனியார் கட்டுமானம் செய்யாமல் கைவிட்ட காரணத்தினால் 2006 ம் ஆண்டில் தமிழக அரசே மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.  தற்கான நிதி ஆதாரங்கள் மின்வாரியத்திடம் இல்லாத காரணத்தினால் மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றது. அதன்மூலம் வட சென்னை, மேட்டூர் அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கிய கடன்களுக்கு தொடர்ந்து வட்டி செலுத்த வேண்டியுள்ளது.  இன்று மின்சார வாரியம் தான் வாங்கிய கடன்களுக்காக மட்டும் ஆண்டிற்கு ரூ.5000 கோடியை வட்டியாகச் செலுத்தி வருகிறது. மின்வாரியத்திடம் வட்டியை பெறுகின்ற நிறுவனங்கள் அனைத்துமே மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் ஆகும்.
ஆனால் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை தமிழக மின்சார வாரியத்திற்கு மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா தான் வழங்கி வருகிறது. ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில்வேத்துறை மூலமாக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.

மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கான மின்சார கட்டணத்தை மத்திய அரசின் மின்உற்பத்தி நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. இதிலும் மத்திய அரசு ஒரு வியாபாரியைப் போலத்தான் நடந்து கொள்கிறது. காயம்குளத்தில் இருந்து வழங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.9.40 ஐ விலையாக பெற்றுக் கொள்கிறது. இதன் வழியாக மாநில மின்வாரியங்களின் ஒரு பகுதி வருமானம் மத்திய அரசின் கைகளுக்குச் செல்கிறது. தான் அளித்த நிதியை வட்டியோடு திரும்பப் பெற பல்வேறு மக்கள் விரோத ஆலோசனைகளை வழங்கும் உலக வங்கியைப் போலவே மத்திய அரசும் மாநிலங்களிடம் பல்வேறு நிபந்தனைகளைப் போடுகிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மாநில அரசுகள் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே வளர்ச்சிக் குரிய நிதியை அளிக்க முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.  தமிழக மின்வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்க பிரதமர் மன்மோகன்சிங் கிடம் தமிழக முதல்வர் ரூ.45000 கோடி தேவை என்று கோரிக்கை வைத்தார். அதற்கு மவுனம் தான் பதிலாக அளிக்கப்பட்டது. ஆனால் சீமைச் சாராய வணிகன் விஜய்மல்லையாவின் கிங்பிஷர் விமானநிறுவனம் தனக்கு ரூ.8000 கோடி நஷ்டம் ஆகிவிட்டது என்று கணக்குக் காட்டியுள்ள செய்தி வெளிநாட்டில் உள்ள பிரதமர் காதில் விழுந்தவுடன் உடனடியாக அதற்கு உதவ வேண்டும் என்று பாசத்தோடு பேசுகின்றார். யாருக்கான பிரதமர் அவர்? யாருக்கானது அவரது அரசு?
இன்றைக்கு மத்தியில் ஆளக்கூடிய காங்கிரஸ் அரசு, தமிழக அரசு கேட்கின்ற நிதியை அளிக்கவில்லை என்று தமிழகத்தில் பாஜக மாநிலக்குழு போராட்டம் நடத்துகின்றது. ஆனால், இதே பாஜக மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பொழுது மின்சார சட்டம்-2003ஐ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இச்சட்டம் கொண்டு வந்ததின் காரணமாக மாநில மின்வாரியங்கள் பிரிக்கப்பட்டன. இச் சட்டத்தை ஏற்று மாநில மின்வாரியங்கள் செயல்பட்ட காரணத்தினால் இன்றைய அளவில் அவை 3 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளதாக மத்திய ஒழுங்குமுறை ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் தான் மாநில மின்வாரியங்கள் நஷ்டத்தில் செயல்படுவதற்கான காரணமாகும். ஆனால் இதே காலத்தில் மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்யும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் லாபத்தில் கொழிக்கின்றன. இவைகளையெல்லாம் பட்டியலிட்டு அதற்காக மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்த வேண்டியது அவசியம் என்று தமிழக அரசு நியாயப்படுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசை நெருக்கி தமிழக அரசு பெற வேண்டிய உரி மைகளைப் பெற்றாலே நட்டத்தை ஈடுகட்டி மின்கட்டண உயர்வைத் தவிர்க்க முடியும். ஏழு தனியார் மின்உற்பத்தி நிலையங் களிடம் மின்சாரம் வாங்குவதற்காக போடப் பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, அந் நிறுவனங்களை அரசே ஏற்க வேண்டும்.
மத்திய அரசின் நிதிநிறுவனங்கள் மாநில மின்வாரியங்களுக்கு அளித்துள்ள கடன்களுக்கான வட்டியை மத்திய அரசே ஏற்கவேண்டும்.  தமிழக மின்வாரியம் விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கின்ற மின்சாரத்திற்கான கட்டணத்தை தமிழக அரசானது முழுமையாக தமிழக மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் நிலுவைகளின்றி அளித்திட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளின் நிலுவைத் தொகைகளையும் சேர்த்து அளித்திட வேண்டும்.
இவைகளைச் செய்தாலே தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவ சியமில்லை. மின்கட்டண உயர்வினால் முதலாளிகளின் பையில் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டியதில்லை. இவைகளைச் சீர்படுத்தாமல் மின்பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் மின்கட்டண உயர்வின் மூலம் பல கோடிகளை மக்களிடமிருந்து பறித்து தனியார்களிடம் மின்சாரம் வாங்கச் செலவிட்டு, மின்வெட்டில்லாத தமிழகம் என்று தம்பட்டம் அடிக்கும் அரசியல் சித்துவிளையாட்டுகளில் அரசு ஈடுபடுமானால் தமிழக மின்சார வாரியம் மட்டுமல்ல, மக்களும் திவாலாகிப் போவார்கள். அல்லல்படுவோரின் துயர்மிகு கண்ணீர் பெரும் படைகளையே தேய்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும். அதைவிடுத்து வெறும் மின் கட்டண உயர்வினால் மட்டும் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என நம்பிச் செயல்படுவது அறிவார்ந்த செயல் அல்ல!

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் திசெம்பர் 2, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: