RSS

இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த ஆப்பு-சீத்தாராம் யெச்சூரி

12 ஆக

இந்தியாபாகிஸ்தான் கூட்டறிக்கை குறித்து பிரதமர் மாற்றி மாற்றிப்பேசுவது, அமெரிக்க நிர்பந்தத்திற்கு .மு.கூ. அடிபணிகிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.

எகிப்து மாநாட்டினை அடுத்து வெளியிடப்பட்ட இந்தியாபாகிஸ்தான் கூட்டறிக்கை இன்னமும் நாட்டையும் நாடாளுமன்றத்தினையும் உலுக்கிகொண்டிருக்கிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்காதவரை, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு நடைபெற்றது. இதற்கு முன்பாக பிரதமர் இதில் தலையிட்டு பேசியது, அதே போன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கும், அமைச்சரின் பேச்சுக்கும் பெரிய முரண்பாடு இருந்தது. இதுதான் வெளிநடப்பிற்கு காரணம். இந்த இரட்டை நிலைப்பாடு ஏதோ எதிர்க்கட்சிகள் உருவாக்கிய தோற்றம் என்பது போல் .மு.கூ. அரசு கூறிக்கொண்டாலும், கூட்டறிக்கை குறித்த பிரதமரின் முரண்பட்ட விளக்கங்கள், அவர்களின் இரட்டை நிலையினை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளன.

ஜூலை 17 பிரதமரின் அறிக்கையில் மூன்று முரண்பட்ட நிலைகளைக் காணமுடியும். ஒரு இடத்தில் அவர், “பாகிஸ்தானுடன் இந்தியா கூட்டுறவை நாடுகிறதுதொடர்ந்த விவாதங்கள் மூலம்தான் இதை முன்னெடுத்துச் செல்ல முடியும்இந்த விஷயத்தில் சர்ச்சைக்கு இடமில்லை என்கிறார். ஆனால், அதற்கு முன்பாக, “இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் எதையும் தங்கள் சொந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியினை, எழுத்தில் மட்டுமல்லாது, உணர்வுப் பூர்வமாகவும் நிறைவு செய்வதுதான் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகளின் தொடக்கப் புள்ளியாக அமையும் எனவும் கூறுகிறார். இதுவரை குழப்பம் எதுவுமில்லை. மாறாக, அடுத்தாற்போல் விளங்கிக் கொள்ள முடியாத மற்றொரு விளக்கத்தைக் கொடுக்கிறார். அதாவது, “பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளை, பேச்சுவார்த்தைகள் என்ற ஒட்டு மொத்த தொடர்பு நிரலுக்குள் இணைத்து விடக்கூடாது. அடுத்த கட்டத்தொடர்புகள் அதுவரை காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜூலை 29ம் தேதி அவர் பேசியதுதான் குழப்பத்தின் உச்சகட்டம். ஏற்கெனவே கூறியஅர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளின் தொடக்கப்புள்ளியாக என்பதை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக, “உறவுகள் முழுமையாக சகஜ நிலையை அடைய வேண்டுமென்றால் எனக்கூறி பாகிஸ்தான் தனது வாக்குறுதியினை நிறைவு செய்ய வேண்டும் என்ற முந்தைய விளக்கத்தின் பிற வாசகங்களைப் பயன்படுத்துகிறார்.

முழுமையான சகஜ உறவுகள் பேச்சு வார்த்தைகள் மூலமாகத்தான் சாத்தியம். ஆனால், ஜூலை 17, 29 ஆகிய இரண்டு தேதிகளுக்கிடையில், பிரதமரின் நிலைபாட்டில் ஒரு மாற்றம் தெரிகிறது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிகிறது என்பதைத் தவிர, அவருடைய முரண்பட்ட நிலைகளுக்கு வேறு விளக்கம் இருக்கமுடியாது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில், பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தானுடைய கவனம் அதனுடைய கிழக்குப் (இந்திய எல்லை) பகுதிக்கு திரும்பிவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா அக்கறை காட்டுகிறது. எனவேதான், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் இணைக்கக்கூடாது என நிர்பந்தம் செலுத்துகிறது.

உண்மையைச் சொல்வதென்றால், அணு சக்தி ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட கேந்திர உறவுகள் என்ற விரிவான திட்டத்தின் ஒரு பகுதியே இது. அண்மையில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் வருகை அதை மேலும் முன்னெடுத்துச் சென்றுள்ளது. இந்திய அணு சக்தி உற்பத்தியில் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறுதியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் உரிமையினை அமெரிக்காவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. “இது அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் பெரும் சாதனை” என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். “லாக்ஹீட் மார்ட்டீன், போயிங் போன்ற கம்பெனிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனவும் அவர் மகிழ்ச்சியினைத் தெரிவித்திருக்கிறார். அணுவர்த்தகம் 10 பில்லியன் டாலர் வரை செல்லும் என்ற அமெரிக்காவின் அபிலாஷைகளின் பின்னணியில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.

திருமதி கிளிண்டனின் இந்திய விஜயத்திற்கு முந்தைய தினமான ஜூலை 18ம் தேதி, ‘நியூயார்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்கா விற்கு ஆதரவாக ஐந்து அம்ச ஆலோசனையை முன்வைத்தது.

முதலாவதாக, “சர்வதேச ரீதியாக இந்தியா இன்னும் கூடுதல் பொறுப்புக்களை ஏற்க வேண்டிய காலம் வந்துவிட்டது. சென்ற ஆண்டு உலக வர்த்தக பேச்சுவார்த்தைகளை இந்தியா புரட்டிப்போட்டுவிட்டது. இப்போது அந்தப் பேச்சுவார்த்தைகளை மீட்டுயிர்ப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்கிறது. ‘நியூயார்க் டைம்ஸ் வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், விவசாயம் சாராத சந்தையில் அனுமதி மற்றும் விவசாயம் குறித்த பாதுகாப்பு போன்ற அம்சங்களில் டோஹா மாநாட்டில் இந்தியா எடுத்த அழுத்தமான நிலைபாட்டினை கைவிடவேண்டும் என்பதே அதன் பொருள்.

இரண்டாவதாக, “புவி வெப்பமடைவதில் பெரும் பங்கினை வகிக்கும் இந்தியா, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் சேர்ந்து பசுங்கூட வாயு வெளியேற்றத்தினைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான பொதுவான குறியிலக்குகள், புவி வெப் பத்திற்கு அதிககேடு விளைவிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஆதரவாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. புவிவெப்ப அதிகரிப்பில், அமெரிக்காவின் தனிநபர் சராசரியில் பதினேழில் ஒன்றுதான் இந்தியாவின் சராசரி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, பயங்கரவாத நடவடிக்கை குறித்து பாகிஸ்தானை நிர்பந்தப்படுத்துவதற்கு அமெரிக்கா வாக்குறுதி அளித்திருக்கிறது. இதற்கு கைமாறாக, “பாகிஸ்தானின் அச்சங்களைப் போக்குவது இந்தியாவின் கடமை” என அந்த நாளேடு குறிப்பிடுகிறது. கூட்டறிக்கையில், தேவையில்லாமல் பலுசிஸ்தான் பிரச்சனை நுழைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான் என்பதை நாம் இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

நான்காவதாக, “உலக அளவில் அணுப்பர வலை” தடுப்பதற்கு இந்தியா மேலும் பலவற்றைச் செய்யவேண்டும். அதாவது, அணுப்பரவலுக்கெதிரான ஒப்பந்தம்(NPT) , அணு சோதனை ஒட்டுமொத்தத் தடை ஒப்பந்தம் (CTBT), அணு எரிபொருள் குவிப்பு குறித்த ஒப்பந்தம் (FMCT) என அனைத்து ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்பதே இதன் சாராம்சம். அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத நாடுகளுக்கு ஆதரவினையும், பிற நாடுகளுக்கு சமத்துவ மற்ற கடமைகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட சட்டங்கள் இவை. ஆகையினால் தான், இந்தியா இவற்றைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இறுதியாக, இந்தியா தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. “உலகின் மாபெரும் சக்தியாக உருவாக வேண்டுமென்றால், “அணிச்சேராமை என்ற பாசாங்குகளை கைவிடவேண்டும் என்பதெல்லாம் அந்நாளேடு கூறியிருக்கும் அறிவுரை. “அணுசக்தி ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது ஈரானுக்கெதிரான தடை நடவடிக்கைகளில், இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. இந்தியா மனமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டாலும், ஈரானின் அணுசக்தித்திட்டங்களுக்கெதிராக, .நா. பாதுகாப்பு சபைத் தீர்மானங்களை ஆதரித்தது. இந்தியா இதுபோல மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என அது மேலும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

முத்தாய்ப்பாக, அது கூறுகிறது: “மன்மோகன் சிங்கிற்கும் அவரது கட்சிக்கும் வலுவான மக்கள் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. மேற்கொண்டு எதுவும் செய்யாமலிருப்பதற்கு, இனிமேல் சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது (அரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு இனி தேவையில்லை என பொருள் கொள்ளவும்)

இந்தியாபாகிஸ்தான் கூட்டறிக்கை குறித்த சர்ச்சைகள் எல்லாம், வெட்டப்பட்ட துண்டுகளை ஒட்டவைக்கும் விளையாட்டின் (Jigsaw Puzzle) ஒரு பகுதியேயாகும். அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறிச் செல்லும் பாதையில் நாம் காணும் காட்சிகளே இவையெல்லாம். ஆனால், உலக நாடுகளின் மத்தியில் இந்தியா வகிக்கும் பெருமை மிக்க இடத்தை காவுகொடுப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.

நன்றி : ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் (ஜூலை 6, 2009)

 

குறிச்சொற்கள்:

பின்னூட்டமொன்றை இடுக