ரஷ்ய நாட்டின் ரீனிஸ் மாநிலத்திலுள்ள பார்மென் நகரில் 1820ஆம் ஆண்டு நவம்பர் 28ம் நாள் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்தார்.
பார்மெனில் நகராட்சிப் பள்ளியில் படித்தபின் எல்பர் பீல்ட் இலக்கணப் பள்ளியில் பயின்றார். தனது அசாதாரணத் திறமை காரணமாக வெகு சீக்கிரத்தில் சகமாணவர்களில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். வரலாறு மற்றும் கிரேக்க, லத்தீன், ஜெர்மானிய இலக்கியங்களில் அவர் பேரார்வம் காட்டினார். அந்தக் காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவரது கடற்கொள்ளைக்காரர்கள் காதை கிரேக்க நாட்டின் சுதந்திர லட்சியத்தின்பால் ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தும் காவியமாகும்.
ஜெர்மன் நாட்டின் தலைசிறந்த இலக்கியங்களை மட்டுமல்லாது சமகாலத்து ஜெர்மானிய எழுத்தாளர்களான, கதே, ஷில்லர், வைலாண்ட், டீய்க், குட்ஸ்கோவ், கார்ல் பெக் ஆகியோரின் படைப்புக்களையும் அவர் கற்றார். அவரது சொற்றொடரில் கூறுவதென்றால் “உலகத்தின் அனைத்து இலக்கியங்களும்” அவரால் படிக்கப்பட்டன. புதினங்களோடு தத்துவஞானம் மற்றும் வரலாற்று நூல்களையும் படித்து அந்நிய மொழிகளில் தனக்குள்ள ஞானத்தை விருத்தி செய்துகொண்டார். ஓவியங்கள் வரைதல் மற்றும் இசைக்காகவும் அவர் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவு செய்தார்.
இசைக்கச்சேரிகளுக்கும், இசை நாடகங்களுக்கும் செல்லுவதோடு அவர் இசைப்பயிற்சிக் கூடத்துக்கும் சென்று பயின்றார். பதினெட்டு வயதிலேயே அவர் இன்னிசைப் பாடல்களையும் இயற்ற முயன்றார். அவற்றைத் தனது பிரியத்திற்குரிய சகோதரிக்கும் நண்பர்களுக்கும் அனுப்பத் தவறமாட்டார். அப்படி அனுப்பப்பட்ட கவிதைகளில் சிலவே இங்கு வெளியிடப்பட்டிருப்பவை.
இந்தக் கவிதைகள் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஏட்டுப்படிப்பு
ஏட்டுப் படிப்புக் கவைக் குதவாதே;
எத்தனைப் புத்தகத் தேர்ச்சி பெறினும்
விவேகம் பெற்றதாய் விளம்புதற்கில்லை:
வாழ்க்கையைப் படிப்பதே மகோன்னதமானது;
தத்துவக் கூறுகள் புரிந்ததன் பின்னே
புத்தகம் என்பது காகிதக் குவியலே!
பாடப் புத்தக தடத்தின் வழியே
தாவர இயலைத் தேர்ந்தவனாலே
புல்லின் மூச்சொலி கேட்பது கூடுமோ?
அவன்
பொய்மை கலவா உண்மை விளக்கம்
புரிந்து பாடம் புகட்டுவதில்லை;
எல்லாம் அறிந்து (அ)தை எவர்தான் சொல்வார்?
இல்லை…இல்லை…ஒருவரும் இல்லை…
மனிதனின் சொந்த இதயத் துள்ளே
மணிகள் யாவையும் மறைந்தே கிடக்கும்;
வாழ்வியல் கலையைத் தேடுவோன் யாரோ
அவனே அதனுள் அனைத்தும் அறிவான்;
உணர்ச்சியின் ஒழுங்கு ரகசியம் யாவும்
நடுநிசி எரியும் எண்ணெய் விளக்கில்
படிப்பதால் வந்தே பதியுமோ நெஞ்சில்…
இதயம் தனக்குச் சொல்வதைக் கேட்டும்
அதனைப் புறத்தே ஒதுக்கித் தள்ளுவோன்
நிச்சயமாக நெறிபிறழ்ந் தோனே!
வார்த்தைகள் யாவினும் பண்பும் விவேகமும்
வாய்ந்தது மனிதனை முழுதும் விளங்கலே
மனிதத் துவமே மகோன்னத மானது;
மேதா விலாசம் என்பதும் அதுவே!
ஜூலை நாட்கள்
புயலின் உறுமல் பொங்கி மலையென
எழுகிற அலைகடல்! என்னே வலிமை!
இரக்கமே இல்லா அரக்கன் கிளம்பி
புயலாய் வருகிற ஊழிக் கூத்தோ?
நிமிர்ந்தே நிற்கும் நெட்டை மனிதராய்
நுரைக்கும் கடலிடை அலைப்புற் றெங்கும்
இறங்கியும் ஏறியும் செல்லும் படகு!
ரைன்நதிக் காற்றின் சுழற்சிப் போக்கே
வான்முகில் திரட்சியைக் கூட்டி வருமோ?
ஓக்ஸ் மரங்கள் ஒடிந்து விழவும்
குப்பை கூளம் பறந்தே ஓடவும்
ஆங்காரத்துடன் அலைக்கரம் வீசி
அடித்து நொறுக்குமே! அசைந்தே ஆடும்
படகில் இருந்த படியே உங்களை
ஒரு கணம் நினைக்கிறேன் . . .ஓ. . . என் ஜெர்மனி
தேச ராசாக்களே . . .! இளவரசர்களே. . .!
நீங்கள்
உட்கார்ந்திருக்கிற தங்கசிம் மாசனத்தை
அந்த
ஊமை ஜனங்கள் சுமப்பதும் எப்படி?
பூமியாவும் வென்ற மிதப்பில்
அந்த
வெற்றி வீரனையும் தூக்கியே மகிழ்ந்தனர்!
ஆனால் இப்போது அனைவர்க்கும் மேலாய்
இறுமாப் போடு அரியணை ஏறி
திமிர்பிடித்து ஆடத் துவங்கி இருக்கும்
எதேச் சதிகாரியே! ஏர்னெஸ்ட் அகஸ்டே . . .
வாக்குறுதிகள் கொடுத்தாய் அனைத்தையும்
தூக்கி எறிந்தாய் . . . துரோகம் இழைத்தாய் . . .
இப்போது இங்கே பிரான்சு முழுக்க
ஒரு புயல் காற்று வீசி அடிக்கிறது . . .
மக்கள் அனைவரும் திரண்டெழுகின்றனர்;
சூறைக் காற்றில் சிக்கிய படகாய் உன்
சிம்மா சனமும் சரியப் போகிறது . . .
சினம் கொப்பளிக்கச் சூளுரை ஒன்று
கனலாய் விடுக்கிறேன்; கடுகி ஓடு நீ . . .
சட்டம் வளைத்துச் சுக்கு நூறாக்கினாய் . . .
மக்கள் இப்போ தீக்கனல் விழியுடன்
உறைக்குள் போடா உருவிய வாளுடன்
உனக்கெதிராகத் திரும்பி விட்டனர்
நீரிடைப் படகில் நானிருப்பதுபோல்
சொல்; உன் தங்கச் சிம்மாசனத்தில்
நிம்மதியாகவா இருக்கிறாய் அடா நீ . . . ?*
மீசை
தேசந் தோறும் சீர்குண வான்களின்
மீசைகள் என்றும் பெருமைக் குரியன!
தேசம் காக்கும் போர்ப்படை வீரர்கள்
செறுப்பகை வெல்ல செந்நிறம் அல்லது
கருநிற மீசையை முறுக்கியே காட்டுவர்!
ஆகவே
போர்ப் புகழ் பெற்றிட மீசைகள் அவசியம்!
மீசை படர்வதைச் சுமையெனக் கருதி
உதறித் தள்ளும் பிலிஸ்தீன் மாந்தர்
கண்ணாடிச் சுத்தமாய் முகம் வழிக்கின்றனர்
நாங்கள் எல்லாம் பிலிஸ்தீன்கள் அல்ல-
எங்கள் மீசையைப் படரவே வளர்ப்போம்!
கிருதா வளர்க்கும் கிறிஸ்துவ னெல்லாம்
ஆண்மகனாக நீண்டநாள் வாழ்க!
மீசையை மழுங்கச் சிரைத்துக் கொண்ட-
மீசை வளர்க்கத் தடையை விதித்த
பிலிஸ்தீன்களை நாம் பேடிகள் என்போம்;
கண்டனம் செய்தே நரகம் தள்ளுவோம்!
