மத்திய அரசின் பித்தலாட்டாம்

December 15, 2009

மத்திய அரசின் பித்தலாட்டாம்

மத்திய அரசு வாரி வழங்கிய பொருளாதாரச் சலுகைகளால் தொழில்துறை வளர்ச்சி 10.3 சதவீதத்தை எட்டிவிட்டது என்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. நுகர்பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டில் 1.6சதவீதமாக இருந்தது. அது தற்போது 21 சதமாக தாண்டிக் குதித்து வளர்ந்துவிட்டது என்கிறார் அவர்.

நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.5சதவீதமாக இருக்கும் என திட்டக் குழு கணித்திருந்தது. ஆனால் இரண்டாம் காலாண்டில் 7.9சதமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்ததையடுத்து, முந்தைய கணிப்பை திட்டக்குழு மறுமதிப்பீடு செய்யவுள்ளது என்றும் அலுவாலியா கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், வெளிநாடுகளிலிருந்து மூலதனம் வந்து குவிவதால் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், இவ்வாறு வரும் மூலதனம் வெறும் நீர்க்குமிழியாகவே இருக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். நாட்டிற்கு தேவையான முதலீடு தான் வந்துகொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் மூவரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதத்தினர் ஏழைகளாக உள்ளனர். இது கணிக்கப்பட்டதை விட 10 சதவீதம் அதிகமாகும் என்று டெண்டுல்கர் குழு அறிக்கை கூறியுள்ளது.

மாண்டேக் சிங் அலுவாலியாவோ நுகர் பொருட்களின் தயாரிப்பு 1.6சதவீதத்திலிருந்து 21சதவீதமாக துள்ளிக் குதித்து ஓடுகிறது என்றார். மறுபுறத்தில் டெண்டுல்கர் அறிக்கையில் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம்பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் உயர்ந்து 37 சதவீதம் பேர் பரம ஏழைகளாக உள்ளனர் என்கிறார்.

நுகர்வுப்பொருள் உற்பத்தி அதிகரித்திருந்தால் அது நாட்டு மக்களின் நுகர்வில் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில்தான் மூன்றில் ஒரு இந்தியர் உள்ளனர். அப்படியென்றால் நுகர்பொருள் சந்தை என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 41.8சத வீதம் பேரின் சராசரி மாதாந்திர மொத்தச் செலவாக ரூ.447 மட்டுமே உள்ளது. நகர்ப்புற மக்களில் 25.7சதவீதம் பேர், அத்தியாவசியப் பொருட்களுக்காக சராசரியாக மாதம் ரூ.578.8 மட்டுமே செலவு செய்யும் நிலையில் உள்ளனர் என்றும் டெண்டுல்கர் அறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநரோ அந்நிய மூலதனம் வந்து குவிகிறது, பொருளாதாரம் ஒளிர்கிறது என்கிறார். திட்டக்குழு துணைத் தலைவரோ தொழிற்துறை வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட கடும் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று கணக்கு காட்டுகிறார்.

ஆனால் அரசினால் நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழு அறிக்கை உண்மையை போட்டு உடைத் திருக்கிறது. பிரதமர் துவங்கி திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் வரை கூறுகிற பொருளாதார வளர்ச்சிக்கும் ஏழை இந்தியாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏற்கெனவே மூலதனத்தை குவித்து வைத்திருக்கும் முதலாளிகளின் மூலதனம்தான் வளர்ந்துகொண்டே போகிறது. ஏழை மக்கள் மேலும் மேலும் இளைத்துக்கொண்டே போகிறார்கள். இந்த இடைவெளியை தாராளமய துதிபாடிகள் அள்ளிவீசும் புள்ளி விவரங்களால் நிரப்பிவிட முடியாது.

நவம்பர் 22, 2009

சுரங்க அரசியல்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 6:07 மு.பகல்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபுலாபுரம் இரும்புத்தாது சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடு மாறு மத்திய அரசை ஆந்திர அரசு கோரியுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய ரெட்டி சகோதரர்கள் தற்போது ஆந்திர அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஓபுலாபுரத்தில் உள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி குத்தகைக்கு எடுத்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களும், ஜெகன்மோகன் ரெட்டியும் தொழில்முறை கூட்டாளிகள் என்றும், ஜெகன் மோகன் ரெட்டியின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ரெட்டி சகோதரர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றும் தெலுங்குதேசக் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஓபுலாபுரம் இரும்புத்தாது தொழிற்சாலை குத்தகை குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரியுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார். ஓபுலாபுரம் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதை தாம் வரவேற்பதாகவும், சுரங்க முதலாளிகளுக்கு இடையிலான மோதலில் தமது பெயரை தேவையின்றி இழுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். ராஜசேகர ரெட்டி மறைவைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இல்லையென்றால் ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உடனடியாக இதற்கு இசையவில்லை. கர்நாடக மாநிலத்தில் கோஷ்டிப்பூசல் காரணமாக தங்களது சுரங்கக்கொள்ளைக்கு சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று ரெட்டி சகோதரர்கள் கலகம் செய்தனர். எம்எல்ஏக்களை கடத்தி வைத்து, மேலிடத்துடன் பேரம் பேசினர். பாஜக மேலிடம் தலையிட்டு, ரெட்டி சகோதரர்களின் கொள்ளைக்கு தடைவிதிக்க வேண்டாம் என்று பஞ்சாயத்து செய்ததைத் தொடர்ந்து எடியூரப்பாவின் பதவி தப்பியது. ஆனால் அவரது தீவிர ஆதரவாளரான பெண் அமைச்சர் ஷோபாவின் பதவி பறிக்கப்பட்டது. எடியூரப்பாவினால் மாறுதல் செய்யப்பட்ட, ரெட்டி சகோதரர்களுக்கு ஆதவான அதிகாரிகள் மீண்டும் அதே பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த தொழில் அதிபர்களின் செல்வாக்கு மண்டலம் ஆந்திரா வரை பரவியுள்ளதை ஓபுலாபுரம் சுரங்க விவகாரம் உணர்த்துகிறது. அரசியல் என்பது ஜனநாயக முறையில் மக்களுக்கு சேவை செய்யும் பணி என்ற நிலை மாற்றப்பட்டு, முதலாளிகளின் சதுரங்க விளையாட்டு என்ற நிலை உருவாக்கப்படுவது மக்களாட்சியின் மாண்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாகும். தேசிய அரசியலிலும் இதன் நிழல் படிகிறது. முந்தைய ஆட்சியின்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசைக் காப்பாற்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கரன்சி விளையாட்டு நாடாளுமன்ற கட்டிடம் வரை நீண்டதை நாடு பார்த்தது. தேசத்தை நேசிப்போர் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று இது.

அக்டோபர் 22, 2009

ராஜாவின் புதிய ஊழல்

Capture

தகவல் தொலைத் தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயனடைந்த யூனிடெக் குழுமத்தைச் சேர்ந்த கம்பெனிகள் தங்கள் பங்குகளில் 74 சதவீதத்தை பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இயங்கிவரும் நார்வே டெலிகாம் நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனத்திற்குத் தந்திட பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ‘தி பயனீர்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

நார்வே நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனம் பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இயங்கி வருவதால், யூனிடெக் குழும கம்பெனிகள் தங்களின் பங்குகளை அதற்கு மாற்றிட, மத்திய உள்துறை அமைச்சகமும் புலனாய்வுக் குழுவும் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வும் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆயினும், பின்னர் உள் துறை அமைச்சகம், எதிர்ப்புகளுக்கான காரணங்களை நீர்த்துப்போகச் செய்து விட்டது. உள்துறை அமைச்சகத்தின் புதிய நிபந்தனைகளின்படி டெலினார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் பணியாற்றியிருப்பின் அவர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். ஆனால் இந்தியாவில் பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் பாகிஸ்தானிலோ வங்க தேசத்திலோ பணியாற்றவில்லை என்பதை எவ்விதம் சோதனை செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

டெலினார் நிறுவனம் மத்திய அரசின் அனுமதியை சிங்கப்பூரில் செயல்படும் தங்கள் கிளையின் வாயிலாக வாங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கடந்த ஞாயிறு அன்று சந்தித்துக் கொண்டதற்கு மறுதினம், திங்களன்று மத்திய அரசு இந்த முடிவினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டெலினார்’ பிரச்சனை, கருணாநிதிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சென்ற ஆண்டு டிசம்பர் 4 அன்று கருணாநிதி புது தில்லி வந்திருந்தபோதே, சோனியா காந்தியிடம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ‘டெலினார்’ நிறுவனம் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அன்றைய தினம் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் ‘‘அவலம்’’ தொடர்பாக அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் தில்லி வந்திருந்தார். காலையில் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தபின், கருணாநிதி மட்டும் சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத் சாலைக்குப் பயணித்திருக்கிறார். சோனியா கா தியுடன் புகைப்படம் எடுக்கும் வைபவம் முடிந்த பின்னர், தன்னுடன் வந்திருந்த டி.ஆர். பாலுவையும் அவர் வெளியேறச் சொல்லி விட்டார். அவரது மகள் கனிமொழி மட்டும் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது உடன் இருந்திருக்கிறார்.

சென்ற ஆண்டு, ரியல் எஸ்டேட் கம்பெனியாக இருந்த யூனிடெக் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை 1651 கோடி ரூபாய்களுக்குப் பெற்று, அடுத்து ஒருசில வாரங்களுக்குள் அதில் 60 சதவீத பங்குகளை டெலினார் நிறுவனத்திற்கு 6120 கோடி ரூபாய்க்கு விற்றதைத் தொடர்ந்து பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன. யூனிடெக் நிறுவனம் பல்வேறு பெயர்களில் டெலிகாம் உரிமங்களுக்காக விண்ணப்பித்திருந்தன. மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றொரு அறிவிக்கையை வெளியிட்டநிலையில், யூனி டெக் நிறுவனங்கள் தாம் பெற்ற அனைத்து உரிமங்களையும் ஒன்றிணைத்து விட்டன. இது தொடர்பாக தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையம், குற்றப்புலனாய்வுக் குழு ஆகியவை விசாரித்து வருகின்றன.

பின்னர், யூனிடெக் நிறுவனம் மீண்டும் தன்னை யூனிடெக் ஒயர்லஸ் (தமிழ் நாடு), யூனிடெக் ஒயர்லஸ் (வடக்கு), யூனிடெக் ஒயர் லெஸ் (தெற்கு), யூனிடெக் ஒயர்லஸ் (கொல்கத்தா), யூனிடெக் ஒயர்லஸ் (தில்லி), யூனிடெக் ஒயர்லஸ் (கிழக்கு), யூனிடெக் ஒயர்லஸ் (மும்பை), யூனிடெக் ஒயர்லஸ் (மேற்கு) என எட்டு கம்பெனிகளாக பிரித்துக் கொண்டது.

Update: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு சில தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று மாலை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந் நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள சஞ்சார் பவன் கட்டத்தி்ல் உள்ள அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட் நடத்தி வருகிறது.

மேலும் சில தொலைத் தொடர்பு அலுவலகங்களிலும் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

அக்டோபர் 7, 2009

அவர்களுக்கு இல்லை எந்த நெருக்கடியும்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — lightink @ 7:13 மு.பகல்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து பல மாதங்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த அமைச்சர்கள் வெளியேறி,அரசு மாளிகைகளில் தங்கத்துவங்கினர். சோனியாகாந்தி உள்ளிட்டோர் விமானத்தில் சாதாரண வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்து நாட்டிற்காக “மகத்தான” தியாகம் செய்து வருகின்றனர்.

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது,மக்களும் இதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்வதுதான் காங்கிரசாரின் வழக்கம். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவரே நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். அவர் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கோ, ஆலைத் தொழிலாளர்களுக்கோ, முறைசாரா தொழிலாளர்களுக்கோ அல்ல; மாறாக நாட்டிலுள்ள மிகப்பெரிய முதலாளித்துவ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் குரல் கொடுத்திருக்கிறார்.

பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். உழைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முடிந்த வரை குறைக்க நினைக்கும் முதலாளிகள் சங்கம் கூட இந்த ஊதிய உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிக்கி எனப்படும் முதலாளிகள் அமைப்பின் தலைவர் சிங்கானியா, தலைமை நிர்வாகிகளின் ஊதியம் குறைக்கப்படக் கூடாது. மாறாக இப்போதிருப்பதைவிட இன்னமும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாததால்தான் அரிய பெரிய மூளைகளெல்லாம் வெளி நாட்டுக்கு உழைப்பதற்கு சென்றுவிட்டது. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் முன்பு அப்படியே வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்கள். இப்போது அவர்களுக்கு ஓரளவு நியாயமான ஊதியம் கிடைப்பதால்தான் இந்தியாவில் பணியாற்ற “பெருந்தன்மையோடு” முன்வந்துள்ளனர் என்றும் சிங்கானியா கூறியுள்ளார்.

ஐஐஎம், ஐஐடி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில், முழுக்க முழுக்க அரசு செலவில் படிப்பவர்கள் வெளிநாட்டுக்கு பறந்து செல்வதை தடுக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று முதலாளிகள் சங்கம் கூறவில்லை. மாறாக அவர்களை இங்கேயே தக்கவைக்க உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது.

உலக வங்கியின் தலைவரே, பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாகும் என்று அவ்வப்போது அபாயச் சங்கு ஊதுகிறார். ஆனால் அவர் தனது ஊதியத்தை குறைத்துக்கொள்ள முன் வரவில்லை. மாறாக, தனது ஊதியத்தை மேலும் உயர்த்திக்கொண்டுள்ளார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. பொருளாதார நெருக்கடியின் மொத்த சுமையும் கிராமப்புற எளிய மக்கள், நகர்ப்புற உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஊருக்குத்தான் உபதேசம், நமக்கு இல்லை என்பதுதான் முதலாளிகளின் சித்தாந்தம்.

செப்டம்பர் 5, 2009

இந்திய விவசாயிகளை கொள்ளும் மன் மோகன் சிங்

உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர, நீடித்து வந்தமுட்டுக்கட்டைகள் தகர்ந்து விட்டதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்று பேச்சு வார்த்தைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின. இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய அம்சமாக, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வரும் நிலையில், அதற்கு வேட்டு வைக்கும் பொருட்டு விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை பெருமளவு வெட்டிக் குறைக்க வேண்டு மென்று வளர்ந்த நாடுகள் நிர்ப்பந்தம் செலுத்தின. மேலும், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத உற்பத்தி பொருட்களின் சந்தைக்குள் நுழைவதற்கு வளர்ந்த நாடுகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும் நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. அப்படி அனுமதித்தால், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களின் நலன் மிகக் கடுயாக பாதிக்கப்படும்.

எனவே இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை உலக வர்த்தக அமைப்பால் மேலும் தொடர முடியவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாதது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் கொள்ளை லாபத்திற்கு உதவவில்லை. எனவே, எப்படியேனும் இந்தியா போன்ற நாடுகளின் விவசாயத்தை அழிக்கவும், சந்தையை கைப்பற்றவும் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடர மன்மோகன் சிங் அரசுக்கு அமெரிக்காவும், உலக வர்த்தக அமைப்பின் தலைமையும் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன.

உலக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் நாசகர புதிய தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது என்று முடிவெடுத்து செயல்பட்டு வரும் மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு உதவி புரிவதாக உறுதி மொழி அளித்துள்ளது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு, செப்டம்பர் 3, 4 தேதிகளில் தலைநகர் டில்லியில், நாடாளுமன்றத்திற்கு தெரியாமல், நாட்டு மக்களுக்கு தெரியாமல் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளது வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 35 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். வெள்ளியன்று இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நின்று போயுள்ள உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை மேலும் தீவிரமாக தொடர்வது என்ற ஒப்பந்தத்தை இக்கூட்டத்தில் எட்டியிருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும், தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

செப்டம்பர் 14-ம்தேதி ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் தலைமை பேச்சுவார்த்தை குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து, தற்போது எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், பேச்சுவார்த்தையை மேலும் தொடர்வது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் ஆனந்த் சர்மா கூறினார்.

செப்டமப்ர் 14-ம்தேதி ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்திய விவசாயத்திற்கு அழிவுப் பாதையை உருவாக்கும் உலக வர்த்தக அமைப்பின் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மன்மோகன் சிங் அரசின் அமைச்சர் ஆனந்த் சர்மாவும் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இந்திய விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இத்தகைய நாசகர நடவ டிக்கையை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிக் கட்சிகளும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆகஸ்ட் 20, 2009

கடற்கரை விற்பனைக்கு

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 7:20 மு.பகல்

கடலோரத்தை கபளீகரம் செய்யவும், கடலோரத்தில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தவும், கடல் சார் வாழ்வாதார உரிமையை பறிக்கவும் என தொடர்ந்து பல முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பாணை 2008 என்ற ஒன்றினை வெளியிட்டு, கடலோரங்களை கேளிக்கைக் கூடாரமாக்கவும், பன்னாட்டுச் சுரண்டல்காரர்களின் வேட்டைக்காடாக்கவும் மத்திய அரசு கடும் முயற்சி மேற்கொண்டது.

நடப்பில் உள்ள சில குறைந்தபட்ச பாதுகாப்புகளை கூட ரத்து செய்து விட முயற்சி நடக்கிறது. மீனவர்கள் ஒன்றுபட்டு உறுதியாக போரா டியதன் விளைவாக அந்த ஆணையை கை விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆயினும், உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் அந்த ஆணையை அமலாக்க தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்து வருகின்றன.

நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் படி 1991ம் ஆண்டு அறிவிப்பாணையை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த ஆணையிலும் 25 முறை பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்து அதனை நீர்த்துப் போகச் செய்துள்ளது.

கடலோர மாநிலங்களில் மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் மட்டுமே 2008ம் ஆண்டின் ஆணையை ஏற்க மறுத்தன. தமிழகம் உறுதியாக இதில் இல்லை. மற்ற மாநிலங்களும் கருத்துச் சொல்லாமல் தட்டிக்கழித்தன. சுனாமிக்கு பிறகு கடலோரங்களில் அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், இன உற்பத்தி தளங்கள் போன்றவற்றை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டிடம் கட்டுதல், சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல் என பலவகைகளில் உரிமை மீறல்கள் தொடர்கின்றன.

இச்சூழலில் கடலோரத்தைப் பாதுகாப்பது என்கிற பெயரில் – 1991ம் ஆண்டின் ஆணையில் உள்ள குறைகளை களைந்து வலுப்படுத்துவது என்கிற போர்வையில், மறைமுகமாக 2008ம் ஆண்டு திட்டத்தை புறவாசல் வழியாக நுழைக்க அரசு முயல்கிறது. அதற்காக கடலோரச் சூழலில் பன்முகத்தன்மை குறித்த புரிதலும், தேர்ச்சியும் இல்லாத ஒரு என்ஜிஓ மூலம் கருத்துக் கேட்பு என்கிற நாடகத்தை அரங்கேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதன் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நாடகம் 5 இடங்களில் நடக்கவுள்ளது. மீனவ சமூகம் முழுமையாக இந்த கருத்துக் கேட்பு நாடகத்தை ஏற்க மறுத்து புறக்கணித்துள்ளது. உண்மையிலேயே அரசுக்கு அக்கறை இருக்கு மானால், அரசே மீனவ அமைப்புகளோடு நேரடியாக பேசவேண்டியதுதானே?.

ஜூலை 20, 2009

பொங்கி எழுந்த சோலை

இரண்டு

வாரங்களுக்கு முன்னர் மும்பை நகர மக்கள் சாலைகளுக்கு வந்து போராடினார்கள். வழியே சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்தப் போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் தலைமை தாங்கவில்லை. வாழ்க்கைச் சுமைஇதய அழுத்தம் இயல்பான போராட்டத்திற்கு வழிவகுத்து விட்டது.

என்ன காரணம்?

மின்சார விநியோகத்தை மராட்டிய அரசு ரிலையன்ஸ் போன்ற பிரதான தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த நிறுவனம் மின்கட்டணத்தை மளமளவென்று உயர்த்தியது. அதனை எதிர்த்துத்தான் மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

வேறு நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட ரிலையன்ஸ் மின் கட்டணத்தை உயர்த்துகிறது என்று மும்பை நகர மக்கள் முழக்கமிடுகிறார்கள். போராட்டம் தொடரும்.

டெல்லி தலைநகரின் மின்விநியோகமும் தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அங்கேயும் குத்தகை பெற்ற நிறுவனங்களிடம் மாநில அரசு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் விநியோகத்திற்கான குத்தகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் பலமுறை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், டெல்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இறைவனைக் கூட பார்த்து விடலாம். ஆனால், மின்சாரத்தைத் தரிசிக்க முடியாது என்ற நிலைதான்.

எனவேதான் டெல்லி நகர மக்களும் சாலைகளுக்கு வந்து போராடுகிறார்கள். மக்களின் உள்ளக்கொதிப்பு வெடிக்கும் கொதிநிலைக்கு வந்திருக்கிறது.

நான்கு நாட்களுக்குள் மின்விநியோகம் சரி செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஷீலாதீட்சித் எச்சரித்திருக்கிறார். ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் டெல்லி தவிக்கிறது. மின் தடை காரணமாக தண்ணீர் விநியோகமும் முழுமையாகத் தடைபடுகிறது. எனவே, பாயத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மாதிரி தலைநகர மக்கள் தயாராகிறார்கள்.

இந்த நிகழ்வுகளெல்லாம் நடைமுறையில் நாம் காணும் வேதனைச் சித்திரங்கள். தனியார் துறையின் மகத்துவங்கள்.
ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ன சொல்கின்றன? அனைத்தும் தனியார்மயம் என்பதுதான் நாட்டின் பிரச்னைகளுக்கு சர்வரோக நிவாரணம் என்று சொல்கின்றன. அவை சீர்திருத்தங்களாக இருக்காது. நாட்டின் சீரழிவிற்கு முன்னோடியாக இருக்கும். ஆனால், அவற்றைத்தான் வேகவேகமாக மன்மோகன் சிங் அரசு செயல்படுத்தப்போகிறது.

ரயில்வே, நிலக்கரிச் சுரங்கங்கள், அணுமின் உற்பத்தி ஆகிய அனைத்தையுமே தனியார் துறைக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

பாதுகாப்புத் துறையிலும் தனியார் மயம்!

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், சாதனங்கள் ஆகியவை பெரும்பாலும் பொதுத்துறையில் தயாரிக்கப்படுகின்றன. இனி அந்தத் துறைகளில் அன்னிய மூலதனங்களை 49 சதவிகித அளவிற்கு அனுமதிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தம் சொல்கிறது.

தொழில்துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கலாம். பன்னாட்டு நிதி நிறுவனங்களை அனுமதிக்கலாம். பிற அன்னிய முதலீட்டு நிறுவனங்களையும் அனுமதிக்கலாம். அவர்கள் முதலீடு செய்யும் அளவிற்கு அவற்றுக்கு நிர்வாகத்திலும் பங்கு தரலாம் என்றும் அந்தச் சீர்திருத்தம் சொல்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கலாம். உணவுப் பொருள் துறையையும் அன்னிய முதலீடுகளுக்கு அர்ப்பணிக்கலாம் என்று நிதித்துறை சீர்திருத்தங்கள் நீட்டோலை வாசித்துக் கொண்டே போகிறது.

கடந்த பத்தாண்டுகளில் உலகை உலுக்கிய பல சரித்திர நிகழ்வுகளை தென் அமெரிக்கா சந்தித்திருக்கிறது. அந்தக் கண்டத்தின் பலப் பல நாடுகளும் இன்றைக்கு மன்மோகன் அரசு சமர்ப்பிக்கும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவைதான். அதன் விளைவு என்ன?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நோய்கள் வாட்டி வதைத்தன. அந்த நாடுகளின் செல்வங்களை அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் நாடுகளுக்கு அள்ளிச் சென்றனர். உள்நாட்டு வணிகம் மரணப் படுக்கையில் வீழ்ந்தது.

இதனைக் கண்டு ஏழைகளோடு பழகும் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் போர்க்கோலம் பூண்டனர். அவர்களின் முன்னணிப் படையாக இடதுசாரி சக்திகள் எழுந்தன.

அன்னிய முதலீடு என்றால், அந்த நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள்தான். இதனை எதிர்த்து வெனிசுலா நாட்டில் புரட்சி வெடித்தது. கத்தோலிக்க திருச்சபையும் இடது சாரி சக்திகளும் இணைந்து போராடின. வெனிசுலாவிற்கு கியூபா கலங்கரை விளக்கமாகக் காட்சி அளித்தது.

ஆட்சி அதிகாரத்தை மக்கள் இடதுசாரி சக்திகளுக்கு அளித்தனர். அனைத்து அன்னிய கம்பெனிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது.

இன்றைக்கு வெனிசுலா மட்டுமல்ல, அதன் அடிச்சுவட்டில் பிரேசில், சிலி, பொலிவியா போன்ற மேலும் ஆறு நாடுகளில் இடதுசாரி சக்திகளின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. எவற்றையெல்லாம் சீர்திருத்தங்கள் என்று மன்மோகன் சிங் அரசு உடுக்கை அடிக்கிறதோ, அவையெல்லாம் நாட்டிற்குக் கேடுகள் என்று அந்த நாடுகள் கப்பலேற்றி அனுப்புகின்றன. அதன் பின்னர்தான் அந்த நாடுகளின் சாமானிய மக்கள் வாழத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே ஆட்சிக்கு வந்தவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல. இடதுசாரி எண்ணம் கொண்ட தேச பக்தர்கள். அவர்களுக்குக் கரம் கொடுப்பது கத்தோலிக்கத் திருச்சபைகள்தான்.

மன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

அங்கே வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும், தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.

நமது பாட்டன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அரசு நிறுவனங்களெல்லாம், ஆலைகளெல்லாம் புதிய ஆலயங்களாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இனி அவற்றின் பங்குகளை ஆண்டிற்கு 25000 கோடி அளவிற்கு விற்பார்களாம்.

அந்தப் பொதுத்துறை நிறுவனங்களெல்லாம் உழைக்கும் மக்கள் அறுபதாண்டுகளாக உருவாக்கிய நமது சொத்துக்கள். அவற்றை விற்க மன்மோகன்சிங் அரசிற்கு அதிகாரம் அளித்தது யார்?

நெய்வேலியையோ, சேலத்தையோ, திருச்சி பெல் நிறுவனத்தையோ தவணை முறையில் விற்க முன்வந்தால், அதை தி.மு.கழகம் ஆதரிக்குமா?

மேற்கு வங்கத்துப் பொதுத்துறை நிறுவனங்களை அமெரிக்கத் துரைமார்களுக்கு விற்பதை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வாரா?

தென் அமெரிக்க நாடுகள் விரட்டியடிக்கின்ற பிசாசுகளை இங்கே தேவதைகள் என்று அழைத்து வருகிறார்கள். கொடுமை.

அனைத்தும் தனியார் துறைக்கே என்பதனை மோட்சத்தின் திறவுகோலாக அமெரிக்கா சித்திரித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நமது காயகல்பப் பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் கண்களை இழந்தவர்கள் இங்கே நமது கண்களை விலைபேச வரப்போகிறார்கள். அவர்களுக்கு விரிக்கப்பட்ட பட்டுக் கம்பளம்தான் இந்திய அரசின் நிதித்துறை சீர்திருத்தங்களாகும்.

தேவையில்லாத விருந்தாளியை அழைத்தால்,நமக்குத் தேவையானவற்றையெல்லாம் இழக்க நேரிடும்!,

மே 11, 2009

அணுசக்தி ஒப்பந்தம் குறுக்கு வழியில் 12 கோடி செலவு

கடந்த 2008ம் ஆண்டு இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் செய்தது.

ஒருபுறம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது, நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்திய மண்ணில் செயல்பட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசாங்கம், அமெரிக்க மண்ணில் என்ன செய்து கொண்டிருந்தது?

அமெரிக்க அரசியலின் முக்கிய பிரிவினரான நாடாளுமன்ற உறுப்பினர்கள், செய்தியாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் தங்கள் கருத்தையே ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்து என்று சித்தரிக்கும் கருத்துத்திணிப்பாளர்கள் ஆகிய பல்வேறு தரப்பு நபர்கள் மூலம் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு திரட்டும் கைங்கரியங்களுக்காக இந்திய அரசாங்கம், அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் மூலம் கடந்த 2005ம் ஆண்டு முதற்கொண்டு 12 கோடி ரூபாய் செலவழித்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிலைக்கு ஆதரவு திரட்டும் பணியை ஒரு தொழிலாகவே செய்து கொண்டிருக்கும் பிஜிஆர் ஹோல்டிங் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு 2005 முதல் 2008ம் ஆண்டுவரை, இந்திய அரசாங்கம் சுமார் 11 கோடி ரூபாய் (22 லட்சம் அமெரிக்க டாலர்) தொகையையும், 2009ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் சுமார் 90 லட்சம் ரூபாயையும் வழங்கியுள்ளது.
(
ஆதாரம்: ‘தி இந்து 1.5.2009)

பார்பர் கிரிபித் அண்ட் ரோஜர்ஸ் (பிஜிஆர்) என்ற அந்த நிறுவனம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்திருக்கும் அறிக்கையில் மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம், ஒத்த கருத்துக்களை உருவாக்குவது, செல்வாக்கு பெற்ற முக்கியப் பிரமுகர்களின் ஆதரவைப் பெறுவது போன்ற பணிகளை செய்வதற்கான செலவுகளுக்காகவும், சேவைக்காகவும் தன்னுடைய நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் 12 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடத்தில், கொல்கத்தாவிலிருந்து வெளிவரும்தி டெலிகிராப் என்ற ஆங்கில நாளிதழில் அமெரிக்க விவகாரங்கள் பற்றி தொடர்ந்து, கட்டுரைகள் எழுதிவரும் கே.பி.நய்யார் எனும் மூத்த அரசியல் ஆய்வாளர் 2007ம் ஆண்டு எழுதிய கட்டுரையின் ஓரிரு பகுதிகளை குறிப்பிடுவது சாலப்பொருத்தமாகும்.

“மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும், டில்லியில் செயல்படும் மேற்கத்திய நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையே வரம்பு கடந்த உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக, அமைச்சர்களுக்கு தெரியாமலேயே ஒருசில அதிகாரிகள் கோப்புகளில் குறிப்புகளை மாற்றி, அதன் மூலம் அமைச்சரவைக் குழுக்களின் முடிவுகளே அமெரிக்காவுக்கு ஆதரவாக மாற்றப்பட்டிருக்கின்றன என்றும், “சென்ற
வருடம் அமெரிக்க தூதர் முல்போர்டின் உதவியாளர் என்னைச் சந்தித்து, ஒரு கட்டுரை எழுதுமாறு கூறினார். உண்மையில், அவருடைய நோக்கம் அணுசக்தி ஒப்பந்தம் சம்பந்தமாக அரசாங்கத்தின் கொள்கையை மாற்றக் கட்டாயப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே ஆகும் அது. நான் அதற்கு மறுத்துவிட்டேன். ஆனால், புது டில்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் வேறு ஒரு பத்திரிகையில் அப்படிப்பட்ட கட்டுரை ஒன்றை எழுதவைத்து, அரசாங்கத்தின் கொள்கையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதில் வெற்றியடைந்தது என்றும் அவர் எழுதியுள்ளார். (தி டெலிகிராப் 22.8.2007)

அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருப்பதும் இந்திய அரசாங்கம் அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்க மண்ணில் தனக்கு சாதகமான கருத்தைஉருவாக்க 12 கோடி ரூபாய் செலவழித்திருப்பதும் இந்திய அரசாங்கமும், அமெரிக்க தூதரகமும் இணைந்து நேரடியாகவும், திரைமறைவிலும் செய்த குறுக்குவழி சதிச்செயல்களை தெள்ளத் தெளிவாக நமக்கு வெளிப்படுத்துகிறது.

April 28, 2009

2700 கோடி டாலர் இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 8:04 மு.பகல்

சட்டவிரோத வழிகள் மூலம் இந்தியாவிலிருந்து ஆண்டொன்றுக்கு 2700 கோடி டாலர் (சுமார் 13,500 கோடி ரூபாய்) வெளியேறுகிறது என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி (ஜிஎப்ஐ) நிறுவனம் வெளியிட்டவளரும் நாடுகளில் இருந்து வெளியேறும் சட்ட விரோத நிதி வெளியேற்றம் 2002 – 2006″ என்ற அறிக்கை கூறியுள்ளது.

சர்வதேச அளவில் அந்நிய நாடுகளுக்கு வெளியேறும் நிதியால் துயருறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதுபற்றி ஜிஎப்ஐ நிறுவன இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இது இந்தியாவின் பிரச்சனை மட்டுமல்ல. நாடுகளின் மேம்பாட்டு நிதியாகக் கிடைக்கும் அந்நிய வியை விட பத்து மடங்கு அதிகமாக சட்டவிரோதமாக வெளியே செல்கிறது என்று கூறியுள்ளார்.

வளரும் நாடுகளில் இருந்து 2002 – 06 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் வெளியேறுகிறது. இவை வரி ஏய்ப்புக்கு உதவும் அந்நிய வங்கிகளில் குவிக்கப்பட்டு வருகின்றன என்று ஜிஎப்ஐ அறிக்கை கூறுகிறது. ஊழல் மற்றும் நேர்மையற்ற வர்த்தகம் ஆகிய நட வடிக்கைகள் மூலம் குவியும் நிதி அந்நிய வங்கிகளுக்கு கடத்தப்படுகிறது.

தடுப்பது எப்படி?

நிதி மூலதனம் இந்தியாவுக்குள் வருவதற்கும் வெளியே செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அந்நிய நிதிநிறுவன முதலீட்டாளர்கள் பயன்படுத்தும் பங்கேற்பு பத்திரங்களைத் தடை செய்ய வேண்டும். ஊக மூலதனத்தைத் தடை செய்ய வேண்டும்.
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி பராமரித்து வரும் 2002 – 06ம் ஆண்டுகளுக்கான வர்த்தகம் மற்றும்அந்நியக் கடன் புள்ளி விபரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஜிஎப்ஐ அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

April 11, 2009

அது ரொம்ப முக்கியம்

பிப்ரவரி

2009க்கான தொழில் வளர்ச்சிப் புள்ளிவிபரம் நாடு பின்னோக்கிச் சென்றுள்ளதையே காட்டுகிறது. அதிர்ச்சியளிக்க வைக்கும் இந்தப் புள்ளிவிபரம் நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமையை அப்பட்டமாகப் போட்டு உடைக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொழில் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது. தற்போது அது -1.2 சதவீதம் என்ற எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. விலைவாசிகள் கடுமையாகச் சரிந்து பணவீக்கம் கிட்டத்தட்ட இல்லை என்பதாக ஒளிரும் புள்ளிவிபரங்களை மத்திய அரசு தந்து கொண்டிருக்கிறது. கிராக்கியே இல்லாததுதான் உற்பத்தியை சரியச் செய்துவிட்டது என்று தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதே நிலைதான் பல்வேறு பொருட்களின் விலையைக் குறையச் செய்து பணவீக்கப்புள்ளிவிபரத்தை அரசுக்கு சாதகமாகத் திருப்பியுள்ளது. ஆனால் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் ஏறியுள்ளதால் வெறும் புள்ளி விபரம் மக்களுக்கு சாதகமாக இல்லை. எதிர்மறை வளர்ச்சி என்ற புள்ளிவிபரக் கொள்ளியில் கோல்டுமேன் சாக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் மேலும் எண்ணெய்யை ஊற்றுகிறது. இந்தப்புள்ளிகள் உற்சாகமிழக்கச் செய்யவில்லை என்கிறது அந்த நிறுவனம். இதைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஜனவரியில் இருந்த நிலையைப் பார்க்கும்போது இது பரவாயில்லை என்று கூறுகிறார்கள். அக்டோபர் 2008ல் இருந்து தற்போதுள்ள வளர்ச்சி தான் நல்ல(!) வளர்ச்சி என்று கோல்டுமேன் சாக்ஸ் கூறுகிறது. முதலாளிகளுக்கு சாதகமாக மத்திய அரசு வாரி வழங்கிய சலுகைகள் தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. பொருளாதாரத்தை முடுக்கி விடும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டம் முதலாளிகளின் கல்லாக்களை நிரப்பியதேயொழிய நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படவில்லை. மாறாக, எதிர்த் திசையில் டிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் தொழில் துறை குறித்த புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. முதலாளிகள் தரப்பில்
மேலும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வட்டி விகிதத்தை வங்கிகள் மேலும் குறைக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்கத் துவங்கி விட்டார்கள். ஏற்கெனவே அளித்த ஊக்கத்திட்டம் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் மேலும் சலுகைகளை வழங்குவது வளர்ச்சியை உருவாக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்கிறார்கள் விபரமறிந்த பொருளாதார வல்லுநர்கள். சீனாவில் செய்துள்ளது போன்று, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அது
தான் சந்தையை விரிவடையச் செய்யும். தொழில் மந்தம் ஏற்பட்டதற்கு கிராக்கி இல்லாததுதான் காரணம் என்று முதலாளிகளே கூறுவதால், கிராக்கியை ஏற்படுத்த மக்கள் மத்தியில் பணம் புழங்கச் செய்வதுதான் சரியானதாக இருக்கும் என்று அந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சர்வதேச நெருக்கடிதான் தற்போது ஏற்பட்டுள்ள சரிவுக்குக் காரணம் என்று அரசு வட்டாரங்கள் கூறி வருகின்றன. பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் அசோக் சாவ்லா கூறுகையில், பணக்கார நாடுகள் நெருக்கடியால் சிக்கியுள்ள நிலையில் பருத்தி, தோல், கனிமங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித்துறை மீண்டு விட்டது என்று நாங்கள் ஒருபோதும் கூறிக் கொள்ளவில்லை. கிராமப்
புறங்களில் தேவையை ஏற்படுத்தக்கூடிய சிமெண்ட், இரும்பு எஃகு, போக்குவரத்து வாகனங்கள் ஆகிய துறைகள் மீண்டு விட்டன என்றுதான் நாங்கள் கூறி வந்தோம் என்கிறார். ஏற்றுமதி தொடர்பான துறைகள் தொடர்ந்து சரிவைத்தான் சந்திக்கும். இந்த நிலை மேலும் சில மாதங்களுக்கு தொடரும் என்கிறார் கிரிசில் என்ற ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி.

ஒருபுறம், சில மாதங்களில் நெருக்கடி தீர்ந்து விடும் என்று நிறுவனங்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடப்பட்டாலும், நிலைமை தொடர்ந்து கீழ்நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதை தகவல் தொடர்புத் துறையும் நிரூபிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் சாப்ட்வேர் நிறுவனங்களில் சுமார் 75 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் என்று அந்நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். ஏப்.2008-மார்ச் 2009ல் பெங்களூரில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு தகவல் தொடர்புத் துறையில் வேலை பறிபோயுள்ளது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் பாய். 2009-2010ல் மேலும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பெங்களூரில் மட்டும் வேலையை இழப்பார்கள் என்றும் அவர் கணிக்கிறார்.

முழுக்க, முழுக்க விவசாயம் புறக்கணிக்கப்பட்டதே இதற்குக் காரணம். தொழில் மற்றும் விவசாயம் ஆகிய இரண்டும் சமச்சீரான அளவில் வளர்வதே பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இது தேர்தல் காலம். அது ரொம்ப முக்கியம்

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.