மத்திய அரசின் பித்தலாட்டாம்

December 15, 2009

மத்திய அரசின் பித்தலாட்டாம்

மத்திய அரசு வாரி வழங்கிய பொருளாதாரச் சலுகைகளால் தொழில்துறை வளர்ச்சி 10.3 சதவீதத்தை எட்டிவிட்டது என்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. நுகர்பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டில் 1.6சதவீதமாக இருந்தது. அது தற்போது 21 சதமாக தாண்டிக் குதித்து வளர்ந்துவிட்டது என்கிறார் அவர்.

நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.5சதவீதமாக இருக்கும் என திட்டக் குழு கணித்திருந்தது. ஆனால் இரண்டாம் காலாண்டில் 7.9சதமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்ததையடுத்து, முந்தைய கணிப்பை திட்டக்குழு மறுமதிப்பீடு செய்யவுள்ளது என்றும் அலுவாலியா கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், வெளிநாடுகளிலிருந்து மூலதனம் வந்து குவிவதால் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், இவ்வாறு வரும் மூலதனம் வெறும் நீர்க்குமிழியாகவே இருக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். நாட்டிற்கு தேவையான முதலீடு தான் வந்துகொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் மூவரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதத்தினர் ஏழைகளாக உள்ளனர். இது கணிக்கப்பட்டதை விட 10 சதவீதம் அதிகமாகும் என்று டெண்டுல்கர் குழு அறிக்கை கூறியுள்ளது.

மாண்டேக் சிங் அலுவாலியாவோ நுகர் பொருட்களின் தயாரிப்பு 1.6சதவீதத்திலிருந்து 21சதவீதமாக துள்ளிக் குதித்து ஓடுகிறது என்றார். மறுபுறத்தில் டெண்டுல்கர் அறிக்கையில் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம்பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் உயர்ந்து 37 சதவீதம் பேர் பரம ஏழைகளாக உள்ளனர் என்கிறார்.

நுகர்வுப்பொருள் உற்பத்தி அதிகரித்திருந்தால் அது நாட்டு மக்களின் நுகர்வில் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில்தான் மூன்றில் ஒரு இந்தியர் உள்ளனர். அப்படியென்றால் நுகர்பொருள் சந்தை என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 41.8சத வீதம் பேரின் சராசரி மாதாந்திர மொத்தச் செலவாக ரூ.447 மட்டுமே உள்ளது. நகர்ப்புற மக்களில் 25.7சதவீதம் பேர், அத்தியாவசியப் பொருட்களுக்காக சராசரியாக மாதம் ரூ.578.8 மட்டுமே செலவு செய்யும் நிலையில் உள்ளனர் என்றும் டெண்டுல்கர் அறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநரோ அந்நிய மூலதனம் வந்து குவிகிறது, பொருளாதாரம் ஒளிர்கிறது என்கிறார். திட்டக்குழு துணைத் தலைவரோ தொழிற்துறை வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட கடும் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று கணக்கு காட்டுகிறார்.

ஆனால் அரசினால் நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழு அறிக்கை உண்மையை போட்டு உடைத் திருக்கிறது. பிரதமர் துவங்கி திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் வரை கூறுகிற பொருளாதார வளர்ச்சிக்கும் ஏழை இந்தியாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏற்கெனவே மூலதனத்தை குவித்து வைத்திருக்கும் முதலாளிகளின் மூலதனம்தான் வளர்ந்துகொண்டே போகிறது. ஏழை மக்கள் மேலும் மேலும் இளைத்துக்கொண்டே போகிறார்கள். இந்த இடைவெளியை தாராளமய துதிபாடிகள் அள்ளிவீசும் புள்ளி விவரங்களால் நிரப்பிவிட முடியாது.

நவம்பர் 22, 2009

சுரங்க அரசியல்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 6:07 மு.பகல்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபுலாபுரம் இரும்புத்தாது சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடு மாறு மத்திய அரசை ஆந்திர அரசு கோரியுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய ரெட்டி சகோதரர்கள் தற்போது ஆந்திர அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஓபுலாபுரத்தில் உள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி குத்தகைக்கு எடுத்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களும், ஜெகன்மோகன் ரெட்டியும் தொழில்முறை கூட்டாளிகள் என்றும், ஜெகன் மோகன் ரெட்டியின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ரெட்டி சகோதரர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றும் தெலுங்குதேசக் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஓபுலாபுரம் இரும்புத்தாது தொழிற்சாலை குத்தகை குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரியுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார். ஓபுலாபுரம் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதை தாம் வரவேற்பதாகவும், சுரங்க முதலாளிகளுக்கு இடையிலான மோதலில் தமது பெயரை தேவையின்றி இழுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். ராஜசேகர ரெட்டி மறைவைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இல்லையென்றால் ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உடனடியாக இதற்கு இசையவில்லை. கர்நாடக மாநிலத்தில் கோஷ்டிப்பூசல் காரணமாக தங்களது சுரங்கக்கொள்ளைக்கு சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று ரெட்டி சகோதரர்கள் கலகம் செய்தனர். எம்எல்ஏக்களை கடத்தி வைத்து, மேலிடத்துடன் பேரம் பேசினர். பாஜக மேலிடம் தலையிட்டு, ரெட்டி சகோதரர்களின் கொள்ளைக்கு தடைவிதிக்க வேண்டாம் என்று பஞ்சாயத்து செய்ததைத் தொடர்ந்து எடியூரப்பாவின் பதவி தப்பியது. ஆனால் அவரது தீவிர ஆதரவாளரான பெண் அமைச்சர் ஷோபாவின் பதவி பறிக்கப்பட்டது. எடியூரப்பாவினால் மாறுதல் செய்யப்பட்ட, ரெட்டி சகோதரர்களுக்கு ஆதவான அதிகாரிகள் மீண்டும் அதே பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த தொழில் அதிபர்களின் செல்வாக்கு மண்டலம் ஆந்திரா வரை பரவியுள்ளதை ஓபுலாபுரம் சுரங்க விவகாரம் உணர்த்துகிறது. அரசியல் என்பது ஜனநாயக முறையில் மக்களுக்கு சேவை செய்யும் பணி என்ற நிலை மாற்றப்பட்டு, முதலாளிகளின் சதுரங்க விளையாட்டு என்ற நிலை உருவாக்கப்படுவது மக்களாட்சியின் மாண்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாகும். தேசிய அரசியலிலும் இதன் நிழல் படிகிறது. முந்தைய ஆட்சியின்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசைக் காப்பாற்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கரன்சி விளையாட்டு நாடாளுமன்ற கட்டிடம் வரை நீண்டதை நாடு பார்த்தது. தேசத்தை நேசிப்போர் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று இது.

அக்டோபர் 22, 2009

ராஜாவின் புதிய ஊழல்

Capture

தகவல் தொலைத் தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயனடைந்த யூனிடெக் குழுமத்தைச் சேர்ந்த கம்பெனிகள் தங்கள் பங்குகளில் 74 சதவீதத்தை பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இயங்கிவரும் நார்வே டெலிகாம் நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனத்திற்குத் தந்திட பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ‘தி பயனீர்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

நார்வே நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனம் பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இயங்கி வருவதால், யூனிடெக் குழும கம்பெனிகள் தங்களின் பங்குகளை அதற்கு மாற்றிட, மத்திய உள்துறை அமைச்சகமும் புலனாய்வுக் குழுவும் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வும் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆயினும், பின்னர் உள் துறை அமைச்சகம், எதிர்ப்புகளுக்கான காரணங்களை நீர்த்துப்போகச் செய்து விட்டது. உள்துறை அமைச்சகத்தின் புதிய நிபந்தனைகளின்படி டெலினார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் பணியாற்றியிருப்பின் அவர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். ஆனால் இந்தியாவில் பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் பாகிஸ்தானிலோ வங்க தேசத்திலோ பணியாற்றவில்லை என்பதை எவ்விதம் சோதனை செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

டெலினார் நிறுவனம் மத்திய அரசின் அனுமதியை சிங்கப்பூரில் செயல்படும் தங்கள் கிளையின் வாயிலாக வாங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கடந்த ஞாயிறு அன்று சந்தித்துக் கொண்டதற்கு மறுதினம், திங்களன்று மத்திய அரசு இந்த முடிவினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டெலினார்’ பிரச்சனை, கருணாநிதிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சென்ற ஆண்டு டிசம்பர் 4 அன்று கருணாநிதி புது தில்லி வந்திருந்தபோதே, சோனியா காந்தியிடம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ‘டெலினார்’ நிறுவனம் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அன்றைய தினம் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் ‘‘அவலம்’’ தொடர்பாக அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் தில்லி வந்திருந்தார். காலையில் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தபின், கருணாநிதி மட்டும் சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத் சாலைக்குப் பயணித்திருக்கிறார். சோனியா கா தியுடன் புகைப்படம் எடுக்கும் வைபவம் முடிந்த பின்னர், தன்னுடன் வந்திருந்த டி.ஆர். பாலுவையும் அவர் வெளியேறச் சொல்லி விட்டார். அவரது மகள் கனிமொழி மட்டும் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது உடன் இருந்திருக்கிறார்.

சென்ற ஆண்டு, ரியல் எஸ்டேட் கம்பெனியாக இருந்த யூனிடெக் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை 1651 கோடி ரூபாய்களுக்குப் பெற்று, அடுத்து ஒருசில வாரங்களுக்குள் அதில் 60 சதவீத பங்குகளை டெலினார் நிறுவனத்திற்கு 6120 கோடி ரூபாய்க்கு விற்றதைத் தொடர்ந்து பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன. யூனிடெக் நிறுவனம் பல்வேறு பெயர்களில் டெலிகாம் உரிமங்களுக்காக விண்ணப்பித்திருந்தன. மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றொரு அறிவிக்கையை வெளியிட்டநிலையில், யூனி டெக் நிறுவனங்கள் தாம் பெற்ற அனைத்து உரிமங்களையும் ஒன்றிணைத்து விட்டன. இது தொடர்பாக தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையம், குற்றப்புலனாய்வுக் குழு ஆகியவை விசாரித்து வருகின்றன.

பின்னர், யூனிடெக் நிறுவனம் மீண்டும் தன்னை யூனிடெக் ஒயர்லஸ் (தமிழ் நாடு), யூனிடெக் ஒயர்லஸ் (வடக்கு), யூனிடெக் ஒயர் லெஸ் (தெற்கு), யூனிடெக் ஒயர்லஸ் (கொல்கத்தா), யூனிடெக் ஒயர்லஸ் (தில்லி), யூனிடெக் ஒயர்லஸ் (கிழக்கு), யூனிடெக் ஒயர்லஸ் (மும்பை), யூனிடெக் ஒயர்லஸ் (மேற்கு) என எட்டு கம்பெனிகளாக பிரித்துக் கொண்டது.

Update: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு சில தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று மாலை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந் நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள சஞ்சார் பவன் கட்டத்தி்ல் உள்ள அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட் நடத்தி வருகிறது.

மேலும் சில தொலைத் தொடர்பு அலுவலகங்களிலும் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

அக்டோபர் 7, 2009

அவர்களுக்கு இல்லை எந்த நெருக்கடியும்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — lightink @ 7:13 மு.பகல்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து பல மாதங்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த அமைச்சர்கள் வெளியேறி,அரசு மாளிகைகளில் தங்கத்துவங்கினர். சோனியாகாந்தி உள்ளிட்டோர் விமானத்தில் சாதாரண வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்து நாட்டிற்காக “மகத்தான” தியாகம் செய்து வருகின்றனர்.

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது,மக்களும் இதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்வதுதான் காங்கிரசாரின் வழக்கம். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவரே நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். அவர் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கோ, ஆலைத் தொழிலாளர்களுக்கோ, முறைசாரா தொழிலாளர்களுக்கோ அல்ல; மாறாக நாட்டிலுள்ள மிகப்பெரிய முதலாளித்துவ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் குரல் கொடுத்திருக்கிறார்.

பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். உழைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முடிந்த வரை குறைக்க நினைக்கும் முதலாளிகள் சங்கம் கூட இந்த ஊதிய உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிக்கி எனப்படும் முதலாளிகள் அமைப்பின் தலைவர் சிங்கானியா, தலைமை நிர்வாகிகளின் ஊதியம் குறைக்கப்படக் கூடாது. மாறாக இப்போதிருப்பதைவிட இன்னமும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாததால்தான் அரிய பெரிய மூளைகளெல்லாம் வெளி நாட்டுக்கு உழைப்பதற்கு சென்றுவிட்டது. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் முன்பு அப்படியே வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்கள். இப்போது அவர்களுக்கு ஓரளவு நியாயமான ஊதியம் கிடைப்பதால்தான் இந்தியாவில் பணியாற்ற “பெருந்தன்மையோடு” முன்வந்துள்ளனர் என்றும் சிங்கானியா கூறியுள்ளார்.

ஐஐஎம், ஐஐடி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில், முழுக்க முழுக்க அரசு செலவில் படிப்பவர்கள் வெளிநாட்டுக்கு பறந்து செல்வதை தடுக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று முதலாளிகள் சங்கம் கூறவில்லை. மாறாக அவர்களை இங்கேயே தக்கவைக்க உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது.

உலக வங்கியின் தலைவரே, பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாகும் என்று அவ்வப்போது அபாயச் சங்கு ஊதுகிறார். ஆனால் அவர் தனது ஊதியத்தை குறைத்துக்கொள்ள முன் வரவில்லை. மாறாக, தனது ஊதியத்தை மேலும் உயர்த்திக்கொண்டுள்ளார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. பொருளாதார நெருக்கடியின் மொத்த சுமையும் கிராமப்புற எளிய மக்கள், நகர்ப்புற உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஊருக்குத்தான் உபதேசம், நமக்கு இல்லை என்பதுதான் முதலாளிகளின் சித்தாந்தம்.

செப்டம்பர் 30, 2009

துப்பு கெட்ட ஜம்மு & காஷ்மீர் அரசாங்கம்

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 7:56 மு.பகல்

துப்பு கெட்ட அரசாங்கம் என்றால் ஜம்மு & காஷ்மீர் அரசை உதாரணம் காட்டலாம். ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத அரசுக்கு வேறு என்ன பட்டம் சூட்ட முடியும்? ஐந்து மாதமாக சம்பளம் போடாததால் அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் ஆகஸ்ட் 26ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

850 பஸ்கள் ஓடவில்லை. டெல்லி, ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் போக்குவரத்து கழக பணிமனைகளும் அலுவலகங்களும் மூடிக் கிடக்கின்றன. ‘ஃபீஸ் கட்ட முடியாததால் எங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து துரத்தி விட்டார்கள்; நாங்களும் பட்டினி கிடக்கிறோம்; சம்பள பாக்கியை தாருங்கள்’ என்று கோஷமிட்டு குடும்பத்தினருடன் ஊர்வலம் போக முயன்ற ஊழியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீஸ் தடியடி நடத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் காயம் அடைந்திருக்கின்றனர். காஷ்மீரில் அரசு போக்குவரத்து கழகம் 1976ல் தொடங்கப்பட்டது.

சாதாரண மக்களுக்கு இன்றும் அந்த பஸ்கள்தான் உதவுகின்றன. ஆனால் மோசமான நிர்வாகம், அரசியல் தலையீடு காரணமாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இன்றைய தேதியில் அது 400 கோடியை எட்டியுள்ளது. 15 ஆண்டுகள் பணி செய்தவர்கள் தாமாக விலக விரும்பினால் நல்ல தொகை தருகிறோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கழகம் அறிவித்தது. இதுவரை 271 பேர் அப்படி விலக கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு கணக்கு முடிக்க சில கோடிகள் வேண்டும் என்று அரசுக்கு கழகம் கோரிக்கை வைத்தது. லாபம் ஈட்ட முடியாத நிறுவனத்துக்கு சம்பள பணம் தருவதே தண்டம் என்று அரசு அதையும் நிறுத்திவிட்டது. வசதியானது, பாதுகாப்பானது, நம்பகமானது என்று காஷ்மீர் மக்கள் வர்ணிக்கும் அரசு பஸ்கள் இப்போது பேரீச்சம் பழத்துக்கு விற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளன. இதே காலகட்டத்தில் தனியார் பஸ்கள் நூற்றுக் கணக்கில் ஓடி நல்ல லாபம் ஈட்டுகின்றன. வேறு வேறு கட்சிகள் ஆட்சி அமைத்தாலும் நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகளிலும் ஊழல் செழித்து வளர்ந்ததால் நேர்மையான அதிகாரிகளும் கையாலாகாதவர்கள் ஆனார்கள். பயங்கரவாதத்தை விட கொடிய நோயால் மூச்சுத் திணறுகிறது அழகான காஷ்மீர் மாநிலம்.

செப்டம்பர் 25, 2009

ஒபாமாவை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

கோப்பு வகை: அரசியல், டாலர், பகுக்கப்படாதது — குறிச்சொற்கள்: — lightink @ 5:02 மு.பகல்

அமெரிக்க அதிபர் ஒபாமா தன் நாட்டிலுள்ள, எந்த வாய்ப்பும் வசதியுமில்லாத 46 மில்லியன் அமெரிக்க மக்களின் உடல் நலத்துக்கானதோர் காப்பீட்டுத்திட்டம் சம்பந்தமாக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார். அந்த மசோதாவின் மூலமாக அவர் ஜனநாயகக் கட்சியிலுள்ள கன்சர் வேடிவ்கள் மற்றும் குடியரசுக்கட்சியிலுள்ள மிதவாதிகள் ஆகியோரது ஆதரவைப் பெற்றிடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரான் நாட்டை ஒரு தீண்டத்தகாத நாடு என்று ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் அதிபர் ஒபாமா ஈரான் நாட்டுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்திட விரும்புகிறார். அந்த அடிப்படையில் அவர் ஈரான் நாட்டுத் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டு கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனால் டெஹ்ரான் அரசு அவற்றையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.

அதிபர் ஒபாமா ஈரான், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தோல்விமேல் தோல்வியடைந்து வருவதாகக் குடியரசுக் கட்சியினரும், ஏனைய வலதுசாரி விமர்சகர்களும் கண்டனக் கணைகளை எய்து கொண்டேயுள்ளனர்.

டெஹ்ரான் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு இணங்கவில்லை என்றால், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு அமெரிக்க ஆட்சியாளர்கள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்திட முன்வரலாம். அவ்வாறு செய்தால் ஈரான் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்படும்.

ஆனால் மேற்படி பிரச்சனையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் இரண்டும் தங்களுக்கிடையே அமைதிப் பேச்சுக்களைத் தொடங்கிட வேண்டும் என்று அதிபர் ஒபாமா விரும்புகிறார். அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் ஆகிய இருவரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதன் மூலமாக உலக அரங்கில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாமே தவிர ஜெருசலேம் பிரச்சனை, பாலஸ்தீன அகதிகளின் மறுவாழ்வு பற்றிய பிரச்சனை, எல்லைப்பிரச்சனை ஆகியவற்றில் சுமூகமான தீர்வுகளைக் கண்டிட இயலாது. இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு தன் நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகளுடன் கொஞ்சிக் குலவுகிறார். மேலும் பாலஸ்தீனத் தலைமையும் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிபர் ஒபாமாவால் கடந்த ஜூன் மாதம் சட்டமன்றத்தில் தன் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றப்படுவதைத் தடைசெய்வது சம்பந்தமானதோர் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடிந்தது. ஆனால் நிலக்கரி, எரிவாயு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெரிய பெரிய அமெரிக்க நிறுவனங்கள் மேற்படி மசோதாவுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.

ஜனநாயகக் கட்சியினரும் ஒருசில சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த வருடத்திற்குள்ளாவது மேற்படி மசோதாவைச் செயல் படுத்திட இயலுமா என்று சந்தேகப்படுகிறார்கள். அமெரிக்கா மேற்படி பிரச்சனையை தனது நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் தாங்களும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு எதிரான மசோதாவில் கையெழுத்திடுவோம் என்று சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

அதிபர் ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இராக் யுத்தத்திற்கு ஒரு முடிவு கட்டப்போவதாகவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முழுவீச்சுடன் ஈடுபடப்போவதாகவும் மேடைகள் தோறும் முழங்கினார். அதன்படி ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மேலும் 21,000 அமெரிக்கப் படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். இன்றைக்கு ஆப்கன் நாட்டில் 68,000 அமெரிக்கப் படைவீரர்கள் உள்ளனர். மேலும் மிகத்திறமையான ராணுவ நிபுணரான ஜெனரல் ஸ்டான்லி மெக்ரிஸ்டல் என்ற ராணுவ அதிகாரி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தலிபான்களை ஒடுக்கிட விரும்பும் அமெரிக்கத் திட்டங்களுக்குப் பாகிஸ்தானின் ஆதரவு கிடைக்கவில்லை. தான் தலி பான்களை ஆதரித்தால்தான் இந்தியாவின் செல்வாக்கைத் தடுத்திட இயலும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. தன் நாட்டில் நிலவிடும் பொருளாதாரப் பின்னடைவானது அதிபர் ஒபாமாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அமெரிக்க நாட்டில் 10 சதவீதம் பேர் வேலையின்றி வாடுகிறார்கள். இது அரசாங்கம் தரும் புள்ளி விவரம்தான். நாட்டில் இதைவிட அதிகமான நபர்கள் வேலையற்று தெருக்களில் அலைகிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு உயிரூட்டுவதற்காக 787 பில்லியன் டாலர்கள் உதவித்தொகையாக அளிக்கப்பட்டது. மேலும் அது மாதிரிப்பட்ட நிதியுதவிகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அதிபரின் பொருளாதார ஆலோசகரான கிறிஸ்டினா ரோமர் அந்தப் பிரச்சனை பற்றி எதுவும் பேசத் தயாராயில்லை.

இவ்வாறு ஒபாமா உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர் மேற்படி சவால்களைச் சமாளிப்பாரா என்பதை இனிவரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்.

ஆதாரம் : இந்து 10.9.2009

செப்டம்பர் 18, 2009

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள்.

கிராமப்புறங்களில் உள்ள எளிய மக்கள் கிணறு தோண்டும் போது புதையல் கிடைத்தால் அது அரசுக்கு சொந்தம். அதுவே அம்பானிகளுக்கு கிடைத்தால் கரும்பு தின்ன கூலி கொடுக்கும் நமது மத்திய அரசு.

ஓஎன்ஜிசி மூலம் இந்திய எண்ணெய் வயல்களிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் விலை இந்திய உற்பத்தி செலவிற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அம்பானிகளுக்கு, அரசு நிலத்திலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவிற்கு சர்வ தேச விலை கொடுக்க வேண்டுமாம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது முகவரி இல்லாமல் இருந்தார்கள் அம்பானிகள். இன்று, அவர்கள் குடும்பச் சண்டைக்கும் அரசு சொத்தை பங்கு போடுவதற்கும் பிரதம மந்திரி மற்றும் இலாகா மந்திரிகளும் நேரத்தை ஒதுக்குவதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.

எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதியை நம்பியே நம் நாடு உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. அதே நேரத்தில், எரிபொருள் கண்டுபிடிப்பதற்கான அகழ்வாராய்ச்சிக்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது என்ற காரணத்தை கூறி, பாஜக அரசு இத்துறையில் தனியாரை ஈடுபடுத்தியது. காங்கிரசும் எஜமான விசுவாசத்துடன், நீயா-நானா? என்று அம்பானிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு; சேவை செய்து கொண்டு இருக்கிறது,

ஆந்திர மாநிலத்தில் பாயும் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றின் டெல்டா பகுதி மற்றும் இந்நதிகள் கலக்கின்ற வங்கக் கடலின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியையும் சேர்த்து கிருஷ்ணா-கோதாவரி படுகை என்றழைக்கின்றனர். இப்பகுதிதான் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். பாம்பே ஹை எனப்படும் மும்பை ஆழ்கடல் எண்ணெய் வயலை காட்டிலும் பன்மடங்கு பெரிய பரப்பளவு கொண்டது. சுமார் 28,000 ச.கி.மீட்டர் நிலப்பரப்பிலும். சுமார் 21,000 ச.கி.மீட்டர் ஆழ்கடல் பகுதியில் 200 மீ. ஆழத்திலும். சுமார் 18,000 ச.கி.மீ ஆழ்கடலில் 200 மீ முதல் 300 மீ ஆழத்திலும் இப்படுகை பரந்து விரிந்துள்ளது,

நமது நாட்டின் புதிய எண்ணெய் வள அகழ்வாய்வு மற்றும் உரிமம் (என்இஎல்பி) வழங்குதல் கொள்கை அடிப்படையில், ஆங்காங்கு கண்டறியப்பட்ட 57 எண்ணெய் வயல்களை (19 ஆழ் கடல். 9 முகத்துவாரம். 29 நிலப்பரப்பு) தனியார் வசம் ஒப்படைத்து, அகழ்வாய்வு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்ய தனியார் துறைக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஆர்ஐஎல் என்றழைக்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் சுமார் 12பகுதி களை மேற்கண்ட முறையில் 2000ஆம் ஆண்டில் ஏலத்திற்கு எடுத்தது, என்இஎல்பி கொள்கையின்படி இத்தனியார் நிறுவனங்கள் எண்ணெய் உற்பத்தி செய்யவும்; அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன, மேலும் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்திலும் பங்கு பெற்றுக் கொள்ள இத்தகைய உரிமம் வகை செய்துள்ளது,

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பிளாக் 6 எனப்படும் பகுதியை கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்ஐஎல் மற்றும் என்ஐகேஓ நிறுவனமும் இந்திய அரசிடமிருந்து எண்ணெய் உற்பத்தி செய்ய உரிமம் பெற்றன.

ரிலையன்ஸ் நிறுவனம். ஒன்றுபட்ட குழு மமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில். 2003ஆம் ஆண்டு மேற்கு உத்திரப்பிர தேசத்தில் தாதர் என்ற இடத்தில். எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் மின் நிலையம் ஒன்றை நிறுவி, அதற்கு தேவையான எரிவாயுவை கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து கொண்டு செல்ல திட்டமிட்டது. ஆனால் 2005ல் இக்குழுமத்தில் பிளவு ஏற்பட்டு இதில் பங்கு பெற்ற பல்வேறு துறைகளின் நிர்வாக உரிமைகளும் அம்பானி சகோதரர்களிடையே கை மாறின. மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியிடம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையும்; இளைய சகோதரர் அனில் அம்பானி வசம் மின் உற்பத்தி நிர்வாகமும் வந்தது. ஆர்ஐஎல் பிளவுண்டு ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் எனப்படும் நிறுவனம் உருவானது.

தாதர் மின்நிலையத்திற்கு எரிவாயு சப்ளை செய்ய 2005ல் ஆர்என்ஆர்எல் மற்றும் ஆர்ஐஎல் நிறுவனத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி.ஆர்ஐஎல் நிறுவனம், என்டிபிசி எனப்படும் தேசிய அனல் மின் நிலைய திட்டத்திற்கு எந்த விலையில் எரிவாயு விற்பனை செய்யுமோ, அதே விலையில் தாதர் மின் திட்டத்திற்கும் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2003ல் என்டிபிசி நிறுவனம் எரிவாயு சப்ளைக்காக டெண்டர்கள் வரவழைத்தது, இந்த டெண்டரில் ஆர்ஐஎல் வெற்றி பெற்று, ஒரு எம்எம்பிடியு  2.34 டாலர் என்ற விலையில் எரிவாயு சப்ளை செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டது.

மேற்குறிப்பிட்ட விலை நிர்ணயம், அதாது ஒரு யூனிட் எரிவாயு 2.34 டாலர் என்ற அடிப்படையில் ஆர்என்ஆர்எல் நிறுவனத்திற்கு விற்க முடியாது என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வாதம். இதற்கு பல காரணங்களை கூறுகிறது ஆர்ஐஎல்.

ஆர்என்ஆர்எல் நிறுவனத்தின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகும் 2.34 டாலர் என்ற அடிப்படையில் விற்க அரசாங்கம் மறுத்து விட்டது, இந்த 2.34 டாலர் என்பது சந்தை தீர்மானித்த விலையல்ல என்றும், மேலும் எரிவாயு அரசின் சொத்து. அதை இரு சகோதரர்களின் விருப்பப்படி விலை நிர்ணயம் செய்து விட முடியாது.

புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் எரிவாயு சப்ளை செய்ய ஆர்ஐஎல் மறுத்து விட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத் தை நாடியது. மும்பை நீதிமன்றம் வழக்கை விசாரித்தது.ஆர்ஐஎல் மற்றும் ஆர்என் ஆர்எல் நிறுவனத்திற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, நிறுவனத்திற்கு தேவையான எரிவாயுவை சப்ளை செய்ய தக்க ஏற்பாடு செய்ய ஆணையிட்டது. ஆர் என்ஆர்எல் நிறுவனமே உச்ச நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்துள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தின் ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையிலேயே எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்றும் அதில் முறையீடு செய்துள்ளது.

முகேஷ் அம்பானியும் அனில் அம்பானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். தங்கள் நிறுவனத்தின் மீது தேவையற்ற, அடிப்படையற்ற, ஆதாரமற்ற, போதிய தகவல்கள் அற்ற விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளது என குமுறுகிறார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கமிட்டியின் மு.ஆ. சந்திரசேகர், ஆர்ஐஎல் நிறுவனத்தில் செலவினம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என அனில் அம்பானி கூறுகிறார்.

கே.எம்.சந்திரசேகர் அவர்கள், முகேஷ் அம்பானி சேர்ந்து செயல்படும் என்ஜினீயரிங் கம்பெனி மீது சந்தேகப்படுகிறார்.

அனில் நிறுவனம், அரசாங்கம் தலையிட்டு, மத்திய அரசின் தணிக்கைக்கு உட்படுத்த உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.

மேலும் தணிக்கை அறிக்கையை மக்களிடையே சமர்ப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.

முதலாளித்துவம் தோன்றும்போது, அது தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும் என்று மார்க்ஸ் சொன்னது நினைவிற்கு வருகிறது. இந்த பிரச்சனை சம்பந்தமாக இடதுசாரிகள், இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லி உருவாக்கிய விழிப்புணர்வைவிட முதலாளித்துவ நெருக்கடி (அம்பானி நெருக்கடி) அனில் அம்பானி, தன் சகோதரனுக்கு எதிராக (முதலாளித்துவம் முதலாளித்துவத்திற்கு எதிராக) ஏற்படுத்திய நெருக்கடி பெரியதாகும். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து அரசின் மீது அக்கறை உள்ளது போல்; பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.

சாதாரண மக்கள் குடும்பச் சொத்து பாகப் பிரிவினை செய்யப்படும்போது சொந்த வீட்டை விற்று பணத்தை பிரித்துச் சென்று, வாடகை வீட்டில் குடியிருக்கக்கூடிய சூழ்நிலை. ஆனால், அம்பானிகள் பிளவுபட்டு, சொத்து பிரிந்த பிறகு பணக்கார வரிசையில் ஐம்பதாவது இடத்தில் இருந்து முதலாம் இடத்திற்கு வர முடிகிறது. இது காங்கிரசும் பாஜகவும் எந்த அளவிற்கு அம்பானிகளுக்காக உழைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் 2005-06ல் 76.240கோடி ரூபாய் லாபமும், 2006-07ல் 81.550 கோடி ரூபாயும் அடைந்துள்ளது. பங்குத்தொகையாக 22.886 கோடி ரூபாயில் இருந்து 2006-07ல் 26.805 கோடி ரூபாயாக வழங்கியுள்ளது. சுங்க வரி, கலால் வரி, சேவை வரி, சொத்து வரி, வட்டி. கடன் என்று பல்வேறு வரிகள் மூலமாக அரசுக்கு ரூ.1,47,635 கோடி அளித்துள்ளது. கையிருப்பு மற்றும் உபரி பணமாக 2005-06ல் 3,59,181 கோடி ரூபாயும், 2006-07ல் 4,16,494 கோடி ரூபாயும் உள்ளது. இவ்வளவு அதிகமான லாபத்தையும் கையிருப்பையும் வைத்துள்ள, பொன் முட்டையிடும் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்தாமல் தனியார் துறையை ‘தனியாக” கவனிப்பது ஏனோ?

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள்.

செப்டம்பர் 17, 2009

வடிவேலுக்குப் போட்டியாக மன்மோகன் சிங்!-சோலை

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 6:57 மு.பகல்

நாடு விடுதலையடையும் போது, வட மேற்கு எல்லை மாநில மக்கள் ‘இந்தியாவோடு இணைவோம்’ என்றனர். இந்தியா பிளவுண்டபோது அந்த மாநிலம் பாகிஸ்தான் பரப்பிற்குள் அடங்கிவிட்டது. அதனை காந்தியும் நேருவும் ஏற்றுக்கொண்டனர்.

அவர்களோடு தோள் சேர்ந்து போராயவர் கான் அப்துல் கபார் கான். வடமேற்கு மாநில மக்களின் ஒப்பற்ற தலைவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்டவர். தமது மாநிலம் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று அறிவிக்கப்பட்டபோது, அவர் காந்திஜியைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். ‘பாபுஜி எங்களை ஓநாய்களிடம் விட்டுவிட்டீர்களே?’ என்று குமுறினார்.

அப்படித்தான் இன்றைக்கு இந்திய மக்களை வர்த்தகச் சூதாடிகள் என்ற ஓநாய்களிடம் மன்மோகன் சிங் அரசு விட்டுவிட்டது. அந்த ஓநாய்கள், அதிகாரவர்க்கத்தின் ஆசீர் வாதம் பெற்றவைதான். ஆனால் ‘விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம்’ என்று காதுகளில் பூச்சூடி வருகிறார்கள்.

இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி பாதிப்பு தான். வறட்சியால் வாடும் மாவட்டங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்திருக்கிறது. ஆகவே, வறட்சியின் காரணமாக விலை உயரும் என்பதனை ரொம்ப நயமாகக் கூறுகிறார்கள். அவர்களுடைய வாதம் வடிகட்டிய பொய்.

என்றைக்குப் பிரதமராக மன் மோகன் சிங் முடிசூடினாரோ, அதன் பின்னர் பல ஆண்டு கள் நாடு அமோக விளைச்சலைக் கண்டி ருக்கிறது. அப்போதும் விலைவாசி உயரத் தான் செய்தது. எனவே, இப்போது விளைச்சல் இல்லை. ஆகவே விலைவாசி உயர்வு என்று கூறுவது வர்த்தகச் சூதாடிகளைப் பட்டுக் கம்பளத்தால் மறைக்கின்ற காரியமாகும்.

அமோக விளைச்சல் கண்ட காலத்தில் அரிசி விலை 46 சத விகிதமும் கோதுமை விலை 62 சத விகிதமும் உயர்ந்தது. 2008ம் ஆண்டு மார்ச் மாதம் இதே உணவுப் பொருட்களின் விலை மேலும் நாற்பது மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மேலும் நாற்பது சதவிகிதம் விலை உயர்ந்திருக்கிறது. இப்போது விலைவாசி உயர்வின் வேகத்தை நிர்ணயிக்க முடியவில்லை.

சுருங்கச் சொன்னால், மன்மோகன் சிங் ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக நாற்பது சதவிகிதம் என்ற அளவில் ஆண்டு தோறும் விலைவாசி உயர்ந்து வருகிறது. இப்படி விலையை உயர்த்துவது யார் என்பது மத்திய அரசிற்குத் தெரியாதா? தெரியும்.

‘விளைச்சல் பாதித்தால் வெளி நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வோம்’ என்று விவசாய அமைச்சர் சரத் பவார் கூறுகிறார். அவரை நாடு ஒரு கேள்வி கேட்கிறது. இங்கே உணவு தானியங்களைக் கொள்முதல் செய்ய எத்தனை மொத்த வியாபாரிகளை அனுமதித்திருக்கிறீர்கள்? அவர்கள் இப்போது எத்தனை லட்சம் டன் உணவு தானியங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள்? கணக்குத் தெரியுமா? இங்கே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் நெய் வாங்கப் போகிறார்கள்.

உணவு தானியங்களை இறக்குமதி செய்யப் போவது யார்? மத்திய அரசா? அதன் உணவுக்கழகமா? அல்லது அந்த அனுமதியையும் தனியார் மொத்த வியாபாரிகளுக்குத் தாரை வார்க்கப் போகிறார்களா? கோழிக்குஞ்சுகளுக்கு இரைபோடும் பொறுப்பை இவர்கள் நரிகளிடம் ஒப்படைக்கப் போகிறார்கள்.

இப்போது இன்னொரு மரணச் செய்தி தேசத்தை உலுக்கியது. கடந்த இரண்டு மாதங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அந்தச் செய்தி கண்ணீர் வடித்தது. என்ன காரணம்?

உற்பத்திச் செலவிற்கும் விற்பனை விலைக்கும் பெரும் ஏற்றத் தாழ்வு இருக்கிறது. எனவே, கடன் சுமையால் கண்கலங்கும் விவசாயிகள், இதுதான் இறுதித் தீர்வு என்று தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

எனவே, விவசாயிகளின் தற்கொலைகளை மன்மோகன் சிங் அரசின் நூறு நாள் சாதனைப் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.

இதோ! விலைவாசியைக் கட்டுப்படுத்துகிறோம். அதோ கட்டுப்படுத்துகிறோம் என்று பம்மாத்துப் பண்ணுவார்கள். நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா உணவுப் பொருள்களின் விலையும் கிலோ 100 ரூபாய் என்று உயர்ந்துவிடும்.

அப்போதும் ‘விலைவாசியை ஏறவிட்ருவமா? கட்டுப்படுத்து வோம்ல’ என்று வடிவேலுவுக்குப் போட்டியாக தமாஷ்தான் செய்வார்கள்.

‘குமுதம் ரிப்போர்ட்டர்’-17.9.2009

செப்டம்பர் 5, 2009

இந்திய விவசாயிகளை கொள்ளும் மன் மோகன் சிங்

உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர, நீடித்து வந்தமுட்டுக்கட்டைகள் தகர்ந்து விட்டதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்று பேச்சு வார்த்தைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின. இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய அம்சமாக, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வரும் நிலையில், அதற்கு வேட்டு வைக்கும் பொருட்டு விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை பெருமளவு வெட்டிக் குறைக்க வேண்டு மென்று வளர்ந்த நாடுகள் நிர்ப்பந்தம் செலுத்தின. மேலும், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத உற்பத்தி பொருட்களின் சந்தைக்குள் நுழைவதற்கு வளர்ந்த நாடுகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும் நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. அப்படி அனுமதித்தால், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களின் நலன் மிகக் கடுயாக பாதிக்கப்படும்.

எனவே இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை உலக வர்த்தக அமைப்பால் மேலும் தொடர முடியவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாதது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் கொள்ளை லாபத்திற்கு உதவவில்லை. எனவே, எப்படியேனும் இந்தியா போன்ற நாடுகளின் விவசாயத்தை அழிக்கவும், சந்தையை கைப்பற்றவும் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடர மன்மோகன் சிங் அரசுக்கு அமெரிக்காவும், உலக வர்த்தக அமைப்பின் தலைமையும் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன.

உலக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் நாசகர புதிய தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது என்று முடிவெடுத்து செயல்பட்டு வரும் மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு உதவி புரிவதாக உறுதி மொழி அளித்துள்ளது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு, செப்டம்பர் 3, 4 தேதிகளில் தலைநகர் டில்லியில், நாடாளுமன்றத்திற்கு தெரியாமல், நாட்டு மக்களுக்கு தெரியாமல் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளது வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 35 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். வெள்ளியன்று இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நின்று போயுள்ள உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை மேலும் தீவிரமாக தொடர்வது என்ற ஒப்பந்தத்தை இக்கூட்டத்தில் எட்டியிருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும், தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

செப்டம்பர் 14-ம்தேதி ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் தலைமை பேச்சுவார்த்தை குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து, தற்போது எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், பேச்சுவார்த்தையை மேலும் தொடர்வது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் ஆனந்த் சர்மா கூறினார்.

செப்டமப்ர் 14-ம்தேதி ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்திய விவசாயத்திற்கு அழிவுப் பாதையை உருவாக்கும் உலக வர்த்தக அமைப்பின் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மன்மோகன் சிங் அரசின் அமைச்சர் ஆனந்த் சர்மாவும் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இந்திய விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இத்தகைய நாசகர நடவ டிக்கையை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிக் கட்சிகளும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 3, 2009

மோடிகேரின்(Modicare) ஏமாற்றுத்தனம்

கோப்பு வகை: டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 5:09 மு.பகல்

பன்றிக் காய்ச்சல் நோய் தொடர்பாக ஊடகங்கள் மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் பயத் தையே மூலதனமாகக் கொண்டு சில தனியார் நிறுவனங்கள் பணம் சம்பா திக்கத் துவங்கிவிட்டனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் எச்1என்1 வைரஸ் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்நோய் காரணமாக சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். ஆயினும் இந்நோய் தாக்கம் இந்தியாவில் வருங்காலங்களில் குறைந்துவிடும் என ஐநா வின் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் நோய் பலி தினசரி செய்தித்தாள்களில் இடம் பெற்றுவருவதை அடுத்து, பலருக்கும் அது தொடர்பான பயம் தோன்றியுள்ளது. இதனையே மூலதனமாகக் கொண்டு நோய் தடுப்பு மருந்துகள் விற்பனையில் சில தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

இந்தியாவில் நேரடி விற்பனை மூலம் வியாபாரம் நடத்தி வரும் மோடிகேர் நிறுவனம், எச்1என்1 வைரசை கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும் மருந்து ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. கிருமி நாசினியான இம் மருந்தை சுவர்கள், தரைகள், படுக்கைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்துவதன் மூலம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கும் ஒருபடி மேலே சென்றுள்ள வார்ட்ரோப் எனப்படும் உலர்சலவை நிறுவனம், துணிகளை தங்கள் நிறுவனம் மூலம் சுத்தம் செய்வதன் மூலம் எச்1என்1 வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளது. வீடுகளில் துணிகளை துவைப்பதற்கு பதிலாக தங்கள் நிறுவனத்தில் உலர் சலவை மேற்கொள்ள இந்நிறுவனம் இத்தகைய விளம்பரத்தினை மேற் கொண்டுள்ளது. இந்த வார்ட்ரோப் நிறுவனம் ஆஸ்திரேலிய இந்திய கூட்டு தனியார் நிறுவனமாகும்.

இவை குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள், இவையெல்லாம் பொருட்களை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் உத்தி தவிர வேறொன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். லாபத்துக்காகவே இத்தகைய நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்று கூறியுள்ள அவர்கள், இதன் மூலம் வைரஸ்களை அழிக்க முடியாது என்றும் கூறினர்.

SwineFlueAlert

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.