இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கோர விபத்து- அது ஏற்படுத்திய தாக்கம் அதனால் இன்றைக்கும் பரிதவிக்கும் மக்கள் என பட்டியல் போட்டால் மிக நீளமாக இருக்கும்.
நேற்று-சென்ற மாதம் என சம்பவங்கள் நடந்ததே பெரும்பாலோர் நினைவுகளிலிருந்து அழிந்துவிடுகின்றது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் என்றால் கால் நூற்றாண்டு காலம். எதை நினைவில் கொள்வது என அலுத்துக்கொள்ளகூட தோன்றும்.
அப்படி புறந்தள்ளிவிட முடியாத- நினைவுகளிலிருந்து அகற்ற முடியாத விபத்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்தது. கடந்த 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் அங்கிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் உள்ள ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு ளியேறியது.
இவ்வாயு வெளியேற்றத்தால் சுமார் 10,000 பேர் உடனடியாக மடிந்திருக்கக்கூடும். (அரசு எண்ணிக்கை 3787). ஆனால் அவ்வாயுவை உள்வாங்கியதால் கிட்டத்தட்ட 25,000 பேர் மடிந்துள்ளனர்.
இவ்வளவு மனித உயிர்கள் மலிவாக இறந்துபோக காரணம் என்ன?
விபத்து – பின்னணி
1969ம் ஆண்டு போபாலில் நிறுவப்பட்ட பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சி மருந்து (கொல்லி)களை தயார் செய்தது. 1979ல் விஷவாயுவான மிதைல் ஐசோசயனேட் வாயு தயாரிக்கும் பகுதியையும் துவக்கியது.
இவ்வாயுவால் எக்காலத்திலும் பிரச்சனை எழக்கூடும் என அறிந்தே நிர்வாகம் உற்பத்தியைத் துவக்கியது. அந்த ஆலையில் விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்த நிபுணர்குழு பின்வரும் காரணங்களை விளக்கியது.
* தயாரிப்பு முறைகள் அனைத்தும் அபாயகரமான பழக்கங்களாக இருந்தவை.
* மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆலையை அமைத்தது.
* பாதுகாப்பு முறைகளில் மற்றும் நடவடிக்கைகளில் இருந்த பலவீனம்
* அந்த ஆலை முழுவதும் மனிதர்களாலே இயக்கப்பட்டது. அதாவது அதிநவீன இயந்திரங்கள் இருந்தும் பயன்படுத்தப்பட வில்லை.
1985ல் இவ்விபத்து பற்றி ஆய்வு நடத்திய மற்றொரு குழு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் மேலும் சில புது தகவல்களை கண்டறிந்து வெளியிட்டது. 1980களிலேயே உற்பத்தியை நிறுத்திய இந்நிறுவனம் 1984ல் எப்படி நச்சு வாயுவை உற்பத்தி செய்ய- சேமிக்க அனுமதிக்கப்பட்டது?
பாதுகாப்பு வசதிகள் தேவையை விடக் குறைவாகவே இருந்தது. பணம் மிச்சப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக, நச்சு வாயுவை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சேமிப்பு தொட்டிகள் முறையாக பராமரிக்கப் படாமல், மேலும் குளிர்பதன வசதிகள் உருவாக்கப்படாமல் இருந்தது.
ஆக மொத்தத்தில் விபத்துக்குக் காரணம் என பட்டியலிட்டால், முதலில் யூனியன் கார்பைடு நிறுவனம், இந்திய அரசு, மத்தியப் பிரதேசமாநில அரசு என வரிசைப்படி செல்லும். இவ்விபத்து நடப்பதற்கு மேலும் ஒரு காரணம் ஊழியர் பற்றாக்குறை. முழுமையான- தேவையான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படாமல், இருந்தவர்களை வைத்தே பெரும் பணிச்சுமையுடன் வேலை வாங்கியது.
முன்னெச்சரிக்கை குரல்கள்
ஆலை துவங்கப்பட்டு 7 ஆண்டுகளிலேயே, அதாவது 1976-ல் அங்கிருந்த இரு தொழிற்சங்கங்கள் மாசுபடுதல் மற்றும் விஷவாயுக்களின் தாக்கம் பற்றி கேட்டன. நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியது.
அதன்பின்னர் 8 ஆண்டுகளில் பல சிறு விபத்துகள் நடைபெற்றது. உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலுங்கூட, அந்த ஆலையில் இருந்த விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என அனைவரும் கூறியது வீணாயிற்று.
விபத்தும் – பாதிப்பும்
இரவில் கசிவு ஏற்பட்டதால், பலர் உறக்கத்தில் இருந்தனர். சிலர் என்ன நடக்கின்றது எனத் தெரியாமலேயே மடிந்தனர். கடுமையான இருமல், நுரையீரல் அடைப்பு, கண் எரிச்சல், வாந்தி என அனைத்தும் ஒருசேர தாக்கியது.
சம்பவ இடத்தைவிட்டு தப்பிப்பதற்காக, ஓடியதால் தேவைக்கு அதிகமான மூச்சை உள்வாங்கியதால் உடனடியாக மரணமடைந்தனர். தெருக்களில், காலனி வீடுகளில் ஏற்பட்ட நெரிசலிலும் பலர் இறந்ததாக சொல்லப்படுகின்றது.
அன்றைய நாள் இரவை விட டிசம்பர் 3 அன்று விபத்தின் கொடூரத்தை உலகம் அறிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ மனைகளிலும், வீடுகளிலும் உயிரிழந்தனர். சுமார் 2 லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
இன்றும் தொடரும்
25 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரையில், விஷவாயு தாக்குதல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சுமார் 2 லட்சம் மக்களுக்கு இவ்விபத்தால் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது தலையிலிருந்து கால் வரை அனைத்து உறுப்புகளிலும் தென்படுகின்றது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டுமென இந்திய அரசு அறிவித்து, சில நடவடிக்கைகளை எடுத்தது. யூனியன் கார்பைடு நிறுவனம் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை தருவதாக அறிவித்து வட்டியுடன் 470 மில்லியன் டாலர் இந்திய அரசால் பெறப்பட்டது.
தன்னிடம் இருக்கும் பங்குகளை நிறுவனம் விற்றது. அந்த வருவாயில் விபத்தில் பாதிக்கப்பட்ட உயிர்காப்பாற்றப்பட்டவர்களுக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது நிறைவேற்றப்பட்டது.
18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இழப்பீடு என அறிவித்தது அரசு. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் குழந்தைகள் தான்.
சில நாட்களுக்கு உணவும்; பின்னர் குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டது. விபத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.25,000, மரணமடைந்தவர்களுக்கு ரூ.62,000 வழங்கப்பட்டது. சில காலம் ஆண்களை இழந்த பெண்களுக்கு விதவை பென்சனாக ரூ.200ம், பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ரூ.750ஆக உயர்த்தப்பட்டது.
1986ல் ஆலை முழுவதும் மூடப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கில், ரசாயன கழிவுகள் சிறு அளவுகளில் இன்றும் இருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆலையை சுற்றியுள்ள பகுதிகள் கழிவுகளை கொட்ட பயன்படுத்தப்பட்டது. அது நிலத்தடி நீரை வெகுவாகப் பாதித்துள்ளது. பல ரசாயன கலவை அத்தண்ணீரிலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாரன் ஆண்டர்சன், கைது செய்யப்பட்டு 3 நாட்களில் விடுதலை ஆனார். (அவ்வளவு செல்வாக்கான மனிதர்).
ஒரு மிகப்பெரிய உயிர்ச்சேதம் விளை வித்த இச்சம்பவம் நடந்து முடிந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. தவறு செய்தவர்களோ உரிய முறையில் தண்டிக்கப்படவில்லை. ஆனால் ஆலை விற்கப்பட்டது. வேறொரு நிறுவனம் இன்றும் தனது உற்பத்தியை செய்து கொண்டிருக்கின்றது.
இப்படி நிலை இருக்க, இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் தங்கள் ஆலைகளை உருவாக்கி பல பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றது ஏகாதிபத்திய நாடுகள். நமது ஆட்சி யாளர்களும் அந்நிய முதலீடு என மார்தட்டிக் கொள்கின்றனர். எச்சங்களையும், மிச்ச சொச்சங்களையும் நம்மீது தள்ளிவிட அனுமதிக்கக்கூடாது.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற கோர விபத்துகளில், போபால் விஷவாயு கசிவு முக்கியமானது. ஆட்சியாளர்களின் நிர்வாக அவலட்சணத்தை படம் பிடித்துக் காட்டிய சம்பவம் இது!
மீண்டும் ஒரு போபால் ஏற்படா வண்ணம் விழிப்பாக இருப்போம்!
இந்தியாவை பாதுகாப்போம்!