RSS

மாதாந்தத் தொகுப்புகள்: நவம்பர் 2011

‘பல்கலைக்கழகங்களைக் கைப்பற்றுவோம்’ அமெ. மாணவர்கள் போராட்டம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒருபகுதியாக அந்நாட்டு மாணவர்களும் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடத்தும் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் கல்விக்கான பட்ஜெட்டில் வெட்களுக்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.  நவம்பர் 28 அன்று முழுமையான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாணவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரவை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.
உயர்கல்வி பற்றிய அரசின் அணுகுமுறை அத்துறையை சீரழித்துவிடும் என்றும், மக்களின் போராட்டங்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டிக்கிறோம் என்றும் அந்தப் பேரவையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களும் அன்றைய தினம் இயங்காது என்று மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மாணவர்கள் அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கும் நவம்பர் 28 அன்று தான், பட்ஜெட்டில் கடுமையான வெட்டுகளை மேற்கொள்வது பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகிகள் கூடிப் பேசுகிறார்கள். மாணவர்களின் கல்விக்கட்டணமும் அதே நாளில் கடுமையாக ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவுகளை மாணவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள் என்பதை வேலை நிறுத்தம் காட்டும் என்பது மாணவர் அமைப்புகளின் கருத்தாகும்.
போராடும் மாணவர்கள் மீது மிளகுத்தூளைத் தூவியதற்கும் அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. அந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் இரண்டு காவல்துறை அதிகாரிகள் நிர்வாக ரீதியான விடுப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 
Leave a comment

Posted by மேல் நவம்பர் 25, 2011 in டாலர்

 

குறிச்சொற்கள்:

கார்கில் ஊழல் – இதுவரை ஒரு குற்றவாளி கூட கைது இல்லை

கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் மேற்கொண்டபோது மத்திய அரசு பெருமளவு பாதுகாப்புக் கருவிகளை வாங்கியது. இந்த கருவிகளை கொள் முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இந்த கார்கில் ஆயுத கொள் முதல் ஊழல் தொடர்பாக கடந்த 12ஆண்டுகளாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகள் யார் என்பதும் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் தெரியவில்லை.
கார்கில் ஊழல் குறித்து மத்திய அரசு எந்தவித நட வடிக்கையும் எடுக்காதது குறித்து நீதிமன்றத்தில் சட்ட உதவி அளிக்கும் நிபுணர்களாக உள்ள மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி சுட்டிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் மத்திய அரசை கண்டித்து கூறுகையில், இந்த வழக்கில் நாங்கள் மிகக் கடுமையாக இருக்க விரும்பவில்லை. ஆனால் இது போன்ற அமைதியாக செல்ல முடியாது என எச்சரித்தது. மத்திய அரசின் நட வடிக்கை எங்களுக்கு திருப்தி தரவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கார்கில் ஊழல் தொடர்பாக அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் உறுதி இல்லாத நிலை விவரத்தை திவேதி சமர்ப்பித்தார்.
கார்கில் போரின்போது ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்கப் பட்டன. இந்தக் கொள்முதலின் போது ஏராளமான குறைபாடுகள் இருப்பதை தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டது இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் சிறிது நேரம் விசாரணை செய்த பின்னர், விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
பாஜக கூட்டணி அரசு ஆட்சியின் போது கார்கில் போரான ‘விஜய்’ நடவடிக்கைக்காக பாதுகாப்பு ஆயு தங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.  இந்தக் கொள் முதலில் நடந்த பெரும் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. 35 விவகாரங்களில் குறைபாடு இருப்பதை சிஏஜி கண்டு பிடித்தது. இருப்பினம் பாதுகாப்புத் துறை 28 விவகாரங்களில் உரிய ஆதாரம் இல்லை என ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது. பாதுகாப்புத் துறை நட வடிக்கைக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது

 
Leave a comment

Posted by மேல் நவம்பர் 22, 2011 in பகுக்கப்படாதது

 

குறிச்சொற்கள்:

உண்மை-பணக்காரர்களுக்கு 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வரி சலுகை

பெட்ரோலின் விலையை மீண்டும் உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளைத் திணித்திருப்பதை நியாயப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அதே சமயத்தில் கேன்ஸ் நகரிலிருந்துதான் இவ்வாறு அவர்
பேசியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ‘‘பல பண்டங்களின்’’ விலைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் நீக்க வேண்டியதன் தேவை இருப்பதாகவும் அப்போது அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்பட இருக்கின்றன என்பதை
இதன்மூலம் அவர் மிகவும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆயினும் எதார்த்த நிலைமை என்ன? 2010-11ஆம் ஆண்டு பொருளாதார சர்வே என்ன கூறியிருக்கிறது? தனியார் இறுதி நுகர்வு செலவினத்தின் வளர்ச்சி விகிதம் 2005-06ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சி
அடைந்திருக்கிறது. மக்கள் எங்கே வளமாக வாழ்கிறார்கள், பிரதமர் அவர்களே?

பிரதமர் நாடு திரும்பிய பின்னர், தன் னுடைய கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பாசாங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரிணாமுல் காங்கிரசின் மிரட்டலுக்கு
அடிபணியாமல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகளை மீண்டும் குறைக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல, இவ்வாறு பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக நடை பெற்ற அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்கேற்றதையும் அவர்களின் ஒப்புதலுடன்தான் இவ்வாறு மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டன என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.

எப்படி இருந்தபோதிலும், மக்களின் மீது சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருப்பதை ஏற்க முடியாது. பெட்ரோல் பணக்காரர்களால்தான் பயன்படுத்தப்படுகிறது என்ப தெல்லாம் பழங்கதை. இப்போது கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தில்  பெரும்பாலானவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை வாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். உண்மையில், பெட்ரோலை வாங்குவதில் அதிகமானவர்கள் இவர்கள்தான். மேலும், பெட்ரோலின் விலையை உயர்த்துவதன் மூலம் போக்குவரத்து சாதனங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து, பண வீக்கத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திடும்.

உண்மை என்ன தெரியுமா? இவ்வாறு விலைகள் உயர்த்தப்படுவதன் மூலம் அரசின் கஜானா அதிக அளவில் பயனடைகிறது என்பதுதான். ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கிடைத்திடும் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு வரிகளாகவும் தீர்வைகளாகவும் சென்றுவிடுகின்றன. இப்போது 2011-12இன் விலைஉயர்வுடன், மத்திய அரசாங்கம் கலால்
தீர்வையாக மட்டும் சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்திற்கு பெட்ரோலியத் துறையிலிருந்து, அனைத்து வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாகக் கிடைத்த மொத்த வருவாய்
என்பது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 69 ரூபாயாகும். இதில் சுமார் 30 ரூபாய் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாயாகச் சென்று விடுகின்றன. இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து அடைந்திடும் வருவாயில் பெரும் பகுதி அரசாங்கத்தைத் தாங்கி நிற்கிறது என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மக்கள்தான் அரசாங்கத்திற்கு மானியம்
அளித்து வருகிறார்களேயொழிய, அரசாங்கம் மக்களுக்கு மானியம் அளித்திடவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் அவற்றை நியாயப் படுத்தி அரசாங்கத்தின் தரப்பில் இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, எண்ணெய் நிறுவனங்கள் ‘‘திரும்பப் பெறுதல்’’ என்ற பெயரில் சர்வதேச விலைகளுடன் ஒப்பிட்டு, ‘‘இழப்புகள்’’ ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு 2010-12இல் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது 2010-11ஆம் ஆண்டில் 78 ஆயிரம் கோடிகளாக இருந்தது. இவ்வாறு ‘‘திரும்பப் பெறுதல்’’ என்றால் என்ன? முந்தைய காலங்களில் நம் நாட்டில் இயங்கி வந்த அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர், அவை இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை சர்வதேச விலைகளின் அடிப்படையிலேயே விற்று வந்தன. இது 1976இல் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக நிர்வாக விலை நிர்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் உண்மையான விலையும்  அதனைச் சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவும் மதிப்பிடப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமான லாபமும் சேர்க்கப்பட்டு, அவ்வாறுதான் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

எடுத்துக்காட்டாக, சர்வதேச சந்தையிலிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல் இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட்ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு
விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக்கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறுதலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊடகங்களும் தூக்கிப்பிடிக்கின்றன.

எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிடவில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி  இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை  49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் – டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலாபம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள், பிரதமர் அவர்களே.

பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம்,
நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கையாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறையில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங்களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்போது மற்றொரு எதார்த்த நிலையையும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறையில்  பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக
உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்ல் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை  என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர்
அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக  நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.

கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித்திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம்என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக்
குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், விவசாயத்தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும்.

சர்வதேசநிதி மூலதனத்தை குஷிப்படுத்திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கைகளைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.

நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.

 
Leave a comment

Posted by மேல் நவம்பர் 15, 2011 in அரசியல், டாலர், பங்குச்சந்தை

 

குறிச்சொற்கள்:

வேலை நிறுத்தம் – முடங்கியது இஸ்ரேல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்ரேல் தொழிலாளி வர்க்கம் நடத்திய பொது வேலை நிறுத்தம் வங்கிகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை களிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இஸ்ரேலின் பெரிய தொழிற்சங்கமான ஹிஸ் டாடிரட்(தொழிலாளர் பொது சம்மேளனம்) பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கெதிராக தேசிய தொழி லாளர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தவும் இஸ்ரேலிய அரசு முனைந்தது. வேலை
நிறுத்தத்தைத் தடை செய்ய முடியாத நிலையில், வெறும் நான்கு மணிநேரங்கள்தான் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று நீதிமன்றம் முரண்டு பிடித்தது. வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முந்தைய நாள் இரவில் நீண்ட நேரம் விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை வேலை நிறுத்தம் நடத்தலாம் என்கிற விநோதமான அனுமதியை வலதுசாரி அரசுக்கு ஆதரவாக இஸ்ரேலிய தேசிய தொழிலாளர் நீதி மன்றம் வழங்கியது. இந்த அனுமதியையும் காலை ஆறுமணிக்குதான் நீதிமன்றம் தந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் பிரச்சனை இது என்று தனது தீர்ப்பின்போது நீதிபதி நிலி அராத் கூறியுள்ளார். ஆனால் தொழிலாளர்களின் பெரும் அளவிலான பங்கேற்பால் கிட்டத்தட்ட முழு வேலை நிறுத்தம் போலவே மாறிவிட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

வேலை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத்
தெரிவித்த கட்சித் தலைவர்களில் ஒருவரான எம்.கே. டோவ் கெனின், “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் ஒட்டு மொத்த இஸ்ரேலிய சமூகமே எதிர்நோக்கும் பிரச்சனையாகும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்
துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை இரண்டாம் தரக்குடியுரிமை மக்களாகக் கருதுவது கொடுமையான விஷயமாகும். சமூக உரிமைகள் இல்லாத, போதிய ஊதியம் பெறாத இந்தத் தொழிலாளர்கள் முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சி சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், சமூகப் போராட்டம் அரசியல் நடவடிக்கையாக மாறும் போதுதான் மாற்றம் ஏற்படும். இஸ்ரேலில் இது நடைபெற வேண்டுமானால் ஒரு விரிவான சோசலிச இயக்கத்தை இந்தப் போராட்டங்களிலிருந்து கட்ட வேண்டும். அத்தகைய இயக்கம் சோசலிச மதிப்புகளோடு கூடிய ஜன நாயகப் போராட்டத்தை நடத்தக்கூடிய இயக்கமாக மலர வேண்டும்.
அதற்கான பணிகளை இந்த வேலை நிறுத்தத்தின் அடுத்த கட்டமாகத் துவங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 
1 Comment

Posted by மேல் நவம்பர் 11, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் திடீர் டிஸ்மிஸ்

மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த புரிந்துணர்வை உருவாக்கவும், அவற்றின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திமுக அரசு 2.7.1990ல் 25ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மாதம் ரூ.200 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தது. ஆனால், 10 மாத காலமே பணி செய்த இவர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எவ்விதக் காரணமும் இன்றி 1991 மே மாதத்தில் பணி நீக்கம் செய்தது.

இதன்பிறகு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 1997ல் மாதம் ரூ.500 தொகுப்பூதியத்தில் திமுக அரசு இவர்களை பணியமர்த்தியது. பின்னர் மேலும் 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

2001ம் ஆண்டில் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2006ல் திமுக
அரசு இவர்களை பணியில் அமர்த்தி மாதம் ரூ.1000 வீதம் தொகுப்பூதியம் வழங்கி ஆணையிட்டது.

மக்கள் நலப்பணியாளர்களின் சரிபாதி பேர் பெண்கள். மேலும் இவர்கள் அனைவரும் 40வயத்திற்கும் அதிகமானவர்கள். பணி நியமனம் பெற்று 2 முறை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க
முடியாது. இந்த வேலையை நம்பி இவர்கள் இருந்து விட்டதால் வேலைவாய்ப்பக பதிவு மூப்பும் கலாவதியாகி விட்டது. அரசுப் பணிகளுக்கான வயது வரம்பும் கடந்து வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலைக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக அரசு மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை 3வது முறையாக செவ்வாயன்று (நவ.8) பணி நீக்கம் செய்து அரசாணை (எண்-86) வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுகின்ற மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மக்கள் நலன் சார்ந்த பணிகளை கடுமையாக பாதிக்கும் என்பதுடன்,
மக்கள் நலனில் இந்த அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கொடூரமான இந்த அரசாணையை திரும்ப
பெற்று மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் இடையறவு (பிரேக்) இன்றி பணியில் தொடர
வழிவகை செய்ய வேண்டும். நியாயமான இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், மக்கள்
நலப்பணியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் போராட நேரிடும் என்றும்
அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

 

 
Leave a comment

Posted by மேல் நவம்பர் 9, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும்
இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது(5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன்
படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009-10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால்
மத்தியஅரசு எப்படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்துகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள் வருமாறு
(24.8.2011)

ஆதார விலை – ரூ. 24.23

சுங்கத்தீர்வை – ரூ.14.35

கல்விவரி – ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் – ரூ.1.05

சுத்திகரிப்பு செலவு – ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு – ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி – ரூ. 5.50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி – ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் – ரூ. 60.72

இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாப கணக்கே… தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 – 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும்.
மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி.
ஆனால் இதே காலத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானியமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய்வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த்தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ.2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை
அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம்.

2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் (2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள்
ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்   (கோடியில்)

ஐஒசி (IOC)  5294 .00 – 832.27 – 6126.27

எச்பிசிஎல்(HPCL)  2142 – 22 90.90 –  2233.12

பிபிசிஎல்  2142 – 22 198.00 – 2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன்
இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?.  இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து
வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம்
இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அதனையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை
கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன்மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது யாருக்கான அரசு?

எப்போது பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும்.
மின்சாரதிற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் அரசு குறியாக இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடிரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்துமுறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்

 
4 Comments

Posted by மேல் நவம்பர் 8, 2011 in அரசியல், டாலர்

 

குறிச்சொற்கள்:

“திருட்டு” தமிழகம் முதல் இடம்

தேசத்தில் தமிழகம் வேறு எதிலே முந்தியிருக்கிறதோ இல்லையோ, தென் மாநிலங்களில் கொள்ளைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் தமிழ் நாடு முதலிடத்தில் இருக்கிறது என்ற செய்தி நிச்சயமாகப் பெருமைப்படத்தக்கதல்ல. குறிப்பாக, 2010ம் ஆண்டில் அதிகமான கொள்ளைப்புகார்கள் இங்கு பதிவாகியுள்ளன.

தேசிய குற்றச்செயல்கள் ஆவணங்கள் துறை (NCRP) வெளியிட்டுள்ள அறிக்கை யின்படி, 2009ம் ஆண்டு 1,144 சம்பவங்கள்தான்
பதிவாகின. 2010ம் ஆண்டிலோ 1,817 கொள் ளைச் சம்பவங்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன.  இது 58.8 விழுக்காடு அதிகரிப்பாகும். கர்நாடகத்தில் இது முறையே 1,825-1,949 (6.8 %), ஆந்திராவில் 544-550 (1.1 %) என பதிவாகியுள்ளது. b தன் மாநிலங்களில் சென்ற ஆண்டு கொள்ளைச் சம்பவங்கள் குறைவாகப் பதிவான மாநிலம் கேரளம்தான். குறைவாகப் பதிவானது மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆண்டை விட 23.4 விழுக்காடு வரையில் (830-636) கொள்ளைச்சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. கன்னம் வைத்து திருடுவது என்பதும் தமிழகத்தில் கடந்த ஆண்டு 11.7 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இதிலேயும் முதலிடம்தான்.

தமிழகத்தில் கொள்ளைகள் அதிகரித்திருப்பதற்கு, இங்கே மக்கள் தொகை அதிகரிப்பும், சங்கிலிப்பறிப்புகள் அதிகரித்து விட்டதும் தான் காரணம் என்று மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர். தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பும் அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் இத்தகைய சங்கிலிப் பறிப்புக் குற்றங்கள் முதல் தகவல் அறிக்கையில் திருட்டு என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அது கொள்ளை என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காரணங்கள் புறக்கணிக்க முடியாதவைதான். ஆனால் இவை மட்டுமே காரணங்கள் என்று வரையறுத்துவிடவும் முடியாது. கொள்ளைக் குற்றத்திற்கு மற்ற திருட்டுகளை விடக் கடுமையான தண்டனைகள் சட்டத்தில் உள்ளன என்ற போதிலும் கொள்ளைகள் அதிகரிக்கின்றன என்பதை எளிதாக ஒதுக்கிவிட இயலாது.

ஒட்டுமொத்தமாக சமூகப் பொருளாதாரம், மத்திய, மாநில அரசுகளின்  கொள்கைகள் என அடிப்படையான பின்னணிகள் உள்ளன. கடுமையான விலைவாசி உயர்வுகள், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கிற கார்ப்பரேட் உலகத்தினரின்
வர்த்தகக் கொள் ளைகள், அதற்கெல்லாம் இசைவாக நடந்து கொள்கிற ஆட்சியாளர்களின் வரலாறு காணாத ஊழல்கள், அதிகார வர்க்கத்தினரின் லஞ்சக் குளியல்கள் ஆகியவை பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை விதைக்கின்றன. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமுதாயக் கட்டமைப்பில், ஏமாற்றத்திற்கு உள்ளாகிறவர்கள் எளிதாக சமூக விரோதிகளின் கைகளில் சிக்க, அந்த எண்ணம் வலுவாக வளர்க்கப்படுகிறது. தங்களது குற்றச் செயலால் மற்றவர்களின் வாழ்க்கை சோகத்தில் மூழ்குவது பற்றிய மனசாட்சி உறுத்தலே இல்லாத கும்பல்கள் பெருகுகின்றன.

இதில் மத்திய அரசின் அணுகுமுறைதான் முக்கியக் குற்றவாளியாக இருக்கிறது என்றா லும், மாநில அரசு நழுவிவிட
முடியாது. அப்படிப் பட்ட அணுகுமுறைகளை வன்மையாக எதிர்ப்பது, அவ்வாறு எதிர்க்கிற சக்திகளுக்குத் துணையாக இருப்பது, காவல்துறை உள்ளிட்ட அரசு எந்திரத்தை சரியாக இயக்குவது, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது, மக்களிடையே எச்சரிக்கை உணர்வுகளை வளர்ப்பது என்ற பன்முகச் செயல்பாடுகளே தேவைப்படுகின்றன.

 
Leave a comment

Posted by மேல் நவம்பர் 3, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்: ,

 
Follow

Get every new post delivered to your Inbox.