வெறிப்பேச்சு பாஜக வேட்பாளர் கைது


ஒரிசா

மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவிஎச்பிபஜ்ரங்தள் உள்ளிட்ட ஆர் எஸ்எஸ் அமைப்பின் மதவெறி பரிவாரங்கள், கிறிஸ்தவ பழங்குடி சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்ட விழ்த்து விட்டன. அந்த வன்முறையை முன்னின்று நடத்தியவர்களுள் அசோக்சாகு மற்றும் மனோஜ் பிரதான் போன்ற விஎச்பி மற்றும் பாஜக நிர்வாகிகளும் அடங்குவர்.

கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது வன்முறையை ஏவியும், அவர்களது வீடுகள், குடிசைகள், தேவாலயங்களை எரித்து நாசமாக்கியும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி கிறிஸ்தவ பழங்குடி மக்களை அவர்களது உறைவிடங்களிலிருந்து விரட்டியடித்தும் கொடுமைகள் புரிந்த மதவெறியர்களை தற்போது மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது பாஜக.

பெரும் வன்முறை நடத்தப்பட்ட காந்தமால் தொகுதியில் பாஜக மதவெறியர் அசோக் சாகு, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாவார்.

கடந்த ஏப்ரல் 5-ம்தேதி காந்தமால் தொகுதியில் உள்ள ரெய்க்கியா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர், வன்முறையை தூண்டும் விதத்திலும், சிறுபான்மை மக்களை மிரட்டும் விதத்திலும் பேசினார். இதுதொடர்பாக, இவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது.

மதவெறியைத் தூண்டுதல், பொது இடத்தில் இழிவாக நடந்து கொள்ளுதல், இதர பகுதி மக்களை திட்டமிட்டு ஆத்திரமூட்டுதல், கலவரம் விளைவிக்கும் நோக்கோடு பேசுதல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505, 295, 153, 125 ஆகிய பிரிவுகளின் கீழ் காந்தமால் மாவட்ட காவல் துறை, அசோக் சாகு மீது வழக்குகள் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, அசோக் சாகு தலைமறை வாகிவிட்டார். நயாகர் மாவட்டத்தில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காந்தமால் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து, பாஜக வேட்பாளர் அசோக் சாகுவை தேடி வந்தனர்.இந்நிலையில், செவ்வாயன்று புல்பானி நகரில் அசோக் சாகு கைது செய்யப்பட்டுள்ளார்.

அசோக் சாகு மட்டுமின்றி ஒரிசாவில் ஜி.உதயகிரி மக்களவை தொகுதியில் பாஜக, மனோஜ் பிரதான் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவரும் காந்தமாலில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதான வழக்குகளுக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்சமயம் சிறையில் இருக்கிறார். இவர் ஒரு அப்பட்டமான குற்றவாளி என்று தெரிந்தும், பாஜக இவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மறுமொழி இடுக