மாதம் மும்மாரி பொழிகிறதா?

ஜூலை 30, 2008

ரூ.2.5 லட்சம் கோடி பணம் பெப்பே!!!

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 2:56 பிற்பகல்

நாடு முழுவதும் உள்ள 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் சிறு தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதில் கம்பெனி நிர்வாகங்களின் பங்கும் செலுத்தப்பட்டு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சேர்க்கப்பட்டு வருகிறது.

தற்போது மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி பி.எப். நிதி உள்ளது. இந்த நிதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் மத்திய டிரஸ்ட்டிகள் வாரியம் மேலாண்மை செய்து வருகிறது. தொழிலாளர்களின் உழைப்பில் உருவான, அவர்களது எதிர்கால வாழ்வுக்கு உதவுவதற்காக சிறுகச் சிறுக சேமிக்கப்பட்டுள்ள இந்த பெரும் நிதியை மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிர்வகித்து வருகிறது.

மிகப்பெரும் அளவில் சேர்ந்துள்ள பி.எப். நிதியை சூறையாடவும், அதை பங்குச் சந்தையில் வைத்து சூதாடவும் தனியார் பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இவர்களுக்கு ஆதரவாக மன்மோகன் சிங் அரசும் செயல்பட்டு வருகிறது.

பி.எப். நிதிக்கு தற்போது அரசு அளித்து வரும் 8.5 சத வீத வட்டி விகிதத்தை உயர்த்தி தர வேண்டுமென்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட அதை நிறைவேற்ற மறுத்து வரும் மத்திய அரசு, இந்த நிதியை தனியார் பெரு முதலாளிகளின் கைகளுக்கு மாற்றி விட கடந்த நான்காண்டு காலமாக தீவிர மாக முயற்சித்தது.

ஆனால், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்த தன் விளைவாக, அரசின் எண்ணமும் பெரு முதலாளிகளின் எண்ணமும் ஈடேறவில்லை.

ஆனால், தற்போது குதிரை பேரம் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மன்மோகன் சிங் அரசு, நிதித் துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் பாதையில் வேகமாக செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்திற்கும், ஐசிஐசிஐ புருடென்சியல், எச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களுக்கும் அளிப்பது என முடிவு செய்துள்ளது. 

பி.எப். நிதியை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கண்ட தனியார் பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை, இடது சாரி தொழிற்சங்க பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி, செவ்வாய்க்கிழமை டில்லியில் நடைபெற்ற பி.எப். மத்திய டிரஸ்டிகள் வாரியக்கூட்டத்தில், மத்திய அரசின் பிரதிநிதிகளின் பெரும்பான்மை பலத்துடன் அரசு நிறைவேற்றிக் கொண்டது.

இக்கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையேற்றார். டிரஸ்டிகள் வாரியத்தில் இடம் பெற்றுள்ள சிஐடியு அகில இந்தியச் செய லாளர் உ.ரா.வரதராசன் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பையும் மீறி, தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு நிறைவேறியதாக அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் துறை செயலாளர் சுதா பிள்ளை, ரிலையன்ஸ் கேபிடல், ஐசிஐசிஐ புருடன்சியல், எச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களுடன் பாரத ஸ்டேட் வங்கியும் பி.எப். நிதியை நிர்வகிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், பி.எப். நிதியை நிர்வகிக்க 10 நிதி நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரியிருந்தன என்றும், அதில் அவர்களது டெண்டர் அடிப்படையில் மேற்கண்ட நான்கு நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், டிரஸ்டிகள் வாரியத்தின் உறுப்பினரான டி.எல்.சச்தேவா கூறுகையில், ஐசிஐசிஐ, எச்எஸ்பிசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே முதலில் நிதி மற்றும் மூலதனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டன என்றும், ஆனால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பெயர் திடீரென்று சேர்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

ரூ.2.5 லட்சம் கோடி அளவிற்கு சேர்ந்துள்ள தொழிலாளர்களின் இந்த நிதியை `நிர்வகிக்க’ மேற்படி நான்கு நிறுவனங்களுக்கும் எப்படி பகிர்ந்தளிப்பது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சுதா பிள்ளை கூறினார்.

ஜூலை 29, 2008

ரூ.10 ஆயிரம் கோடிக்கு விமானம் வாங்குகிறது இந்தியா!

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 4:22 பிற்பகல்

அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் 210 கோடி டாலர் (சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்) விமான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுகிறது. கடல் எல்லையைப் பாதுகாப்பதற்கான ஆறு விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமாகும் இது. அமெரிக்காவின் போயிங் கம்பெனியுடன் இந்திய கடற்படை இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் “என்ட் யூஸர் அக்ரிமெண்ட்” என்ற ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விமான பேரத்தில் ஈடுபட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சிக்கிறது.

அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பெறும் நாடு அந்த தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு வழங்கவில்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்திக் கொள்ளும். இதற்காக அந்த நாட்டின் விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்ய அமெரிக்காவுக்கு சுதந்திரம் அளிக்கிறது இந்த ஒப்பந்தம். இந்தியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அமெரிக்கா அதை ஏற்கவில்லை.

தற்போதைக்கு இவ்விஷயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளவே இந்தியா அவசரப்படுகிறது. ஒப்பந்தம் செய்த பின் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க நான்கு ஆண்டுகள் ஆகும் என்பதால் பிரச்சனைக்குத் தீர்வு காண கால அவகாசம் இருக்கிறது என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால், இந்தப் பிரச்சனைக்கு ஒப்பந்தத்திற்கு முன்பு தீர்வு காணாவிட்டால் அமெரிக்கா சொல்வதை கேட்க வேண்டி வரும் என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு அமெரிக்காவிடமிருந்து யுஎஸ்எஸ் டிரன்ட் என்ற கப்பல் வாங்கப்பட்ட போது, இந்த ஒப்பந்தம் போன்றதொரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதை மத்திய தணிக்கைக்குழு (சிஏஜி) கடுமையாக விமர்சித்தது.

அமெரிக்காவுடன் ராணுவ ரீதியான உறவு அதிகரித்து வருவதன் விளைவே இந்த ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப அம்சங்களும், விலை சம்பந்தமான விஷயங்களும் விவாதிக்கப்பட்டு உடன்பாட்டிற்கு வந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. அடுத்து கூடவுள்ள பாதுகாப்பு விஷயங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்கும்.

இந்த ஆண்டு அமெரிக்காவுடன் கையெழுத்திடும் இரண்டாவது ஒப்பந்தம் இது. ராணுவ சாதனங்களைக் கொண்டு செல்வதற்கான ஆறு சி-130- ஜெ. விமானங்களை வாங்கும் ஒப்பந்தம்தான் இந்த ஆண்டின் முதல் ஒப்பந்தமாகும்.

அமெரிக்காவின் பகாசுர பன்னாட்டுக் கம்பெனியான லாக்ஹீத் மார்ட்டினுடன் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த யுத்த விமானங்கள், எல்லா பருவ காலங்களி லும் எல்லாப் பகுதிகளி லும் பயன்படுத்தத்தக்க தாகும். 4,500 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தமாகும் இது.

முன்பு ரஷ்யாவிடமிருந்து இந்த விமானம் வாங்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 1,35,000 கோடி ரூபாய்க்கு ஆயுதம் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின் திரைமறைவில் ஆயுதங்களை இந்தியா வின் தலையில் கட்டி விட்டு அவ்வளவு தொகையையும் சுருட்டி விட அமெரிக்க கம்பெனிகள் போட்டி போடுகின்றன. பல்வேறு தேவைகளுக்கான 126 யுத்த விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இதில் முக்கியமானதாகும். 45,000 கோடி ரூபாய் பேரம் இதில் அடங்கியுள்ளது. இதைப் பெற்று விட அமெரிக்க கம்பெனியான லாக்ஹீத் மார்ட்டினும், போயிங்கும், மற்ற கம்பெனிகளும் களத்தில் இறங்கியுள்ளன.

ஜூலை 26, 2008

மன்மோகன் சிங் அரசின் துரோகம்

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 3:46 பிற்பகல்

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன் சிங் அரசாங்கம் விடாப்பிடியாக இருப்பதைத் தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசியல் ஒழுக்கமின்மை என்பது மிகவும் தரம் தாழ்ந்த நிலைக்குச் சென்றது. சுதந்திர இந்தியாவில், நாடாளுமன்ற ஜனநாயகம் இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து இதற்கு முன் சென்றதில்லை. நாடாளுமன்றத்திலேயே கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை உறுப்பினர்கள் உயர்த்திப் பிடித்துக் காட்டியதானது, அரசாங்கத்தை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக, திரைமறைவில் எந்த அளவிற்கு இழிவான முறையில் குதிரை பேரங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டின. தொலைக்காட்சி அலைவரிசைகளில் திரும்பத் திரும்ப காட்டப்பட்ட இந்தக் காட்சி நாட்டு மக்களின் உணர்வினைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதிலிருந்து மக்கள் விடுபட வெகுநாட்களாகும். பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கலாம், ஆனல் அவரது அரசாங்கம் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

எப்படிப்பார்த்தாலும், இது ‘‘நம்பிக்கை’’ வாக்கெடுப்பே அல்ல. பலவிதங்களில் இதனை ‘‘துரோக’’ வாக்கெடுப்பு என்று கூறிடமுடியும். முதலாவதாக, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐமுகூ அரசாங்கம் எப்படிச் செயல்படவிருக்கிறது என்று பிரதமர் இடதுசாரிக் கட்சிகளுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை மீறிய “துரோக”த்தை ஆமோதிக்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கமானது இடதுசாரிக் கட்சிகளுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை மூன்று தடவைகள் மீறியிருப்பதை நாம் ஏற்கனவே விளக்கி இருக்கிறோம். நாடாளுமன்ற மக்களவை இவ்வாறு உறுதிமொழிகளை மீறி இந்த அரசாங்கம் துரோகம் இழைத்திருப்பதை இந்த வாக்கெடுப்பின் மூலம் ஆமோதித்திருக்கிறது.

மிக இழிவான முறையில் குதிரை பேரம் நடைபெறாமல் இருந்திருந்தால், தங்கள் கட்சிக் கொறடாக்கள் விடுத்த கட்டளைகளை மீறி கட்சி மாறி ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட் டுப் பார்த்தோமானால் ஆளும் கூட் டணிக்கு 268 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும். இவ்வாறு குதிரை பேரம் நடத்தி எண்ணிக்கையை பெருக்கிக் கொண்ட இத்தகைய அரசியல் ஒழுக்கமின்மையின் மூலம் நாட்டிற்கு ஆளும் கூட்டணி மற்றொரு துரோகத்தைப் புரிந்திருக்கிறது.

நாட்டு மக்களுக்கு மற்றொரு விதத்திலும் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து உயர்ந்துவரும் பணவீக்கமும், அத்தியாவசியப் பொருள்களின் விண்ணைமுட்டும் விலைவாசியும் சாமானிய மக்களின் மீது சொல்லொண்ணா அளவிற்கு சுமைகளை ஏற்றிக்கொண்டிருக் கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு இவற்றிலிருந்து ஏதேனும் நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, ஐமுகூ அரசாங்கமானது அமெரிக்க புஷ் நிர்வாகத்தைக் குஷிப்படுத்தும் வகையில் இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலேயே அதன்மூலம் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றக்கூடிய வகையிலேயே முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துக்கிஞ்சிற்றும் கவலைப்படாது இங்ஙனம் செயல்படுவதன் மூலம் ஐமுகூ அரசு மக்களின் நலன்களுக்கு முழுமையான முறையில் துரோகம் இழைத்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் தன்னால் கொண்டுவரப்படக்கூடிய நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானத்தில் தன்னாலேயே வாக்களிக்க முடியாத சூழ்நிலை -பிரதமருக்கு ஏற்பட்டிருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும். இது ஒரு சிறிய பிரச்சனை தான். இந்திய அரசியலமைப்புச் சட்டமானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள உறுப்பினர்களில் எவர் ஒருவரும் பிரதமராக இருந்திட அனுமதிக்கிறது. இதைவிட மிக முக்கிய பிரச்சனை என்னவெனில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் விவாதங்களுக்குப் பதிலளிக்க இயலாத நிலை பிரதமருக்கு ஏற்பட்டதும் இதுவே முதல்முறையாகும். மிகக் கேவலமான குதிரைபேரத்திற்கு எதிராக, உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருந்ததற்கு இடையே, மன்மோகன் சிங் தன் பேச்சின் நகலை அவையில் தாக்கல் செய்துவிட்டார்.

தன்னுடைய உரையில் பிரதமர், தன்னை ‘‘கொத்தடிமை’’ போல் நடத்திட விரும்பினர் என்று இடதுசாரிக் கட்சிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இடதுசாரிக் கட்சிகளின் வலுவான ஆதரவின் காரணமாக ஆட்சிபுரிந்து வந்த பிரதமருக்கு இத்தகைய குற்றச்சாட்டுகளை வாரியிறைப்பதற்கு நான்காண்டு காலம் பிடித்திருப்பது வேடிக்கை. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான பேச்சுவார்த்தைகளை முழுமையாக பூர்த்தி செய்திடவும், அதன் பின்னர் அதனை இறுதியாக நடைமுறைப் படுத்தும் சமயத்தில் அதன் விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதற்கும் இடதுசாரிகள் அவரை அனுமதிக்க வில்லையாம். இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது, அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டபின், இந்திய நாடாளு மன்றம் அதனை ஆதரிப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை என்பதை நன்கு புரிந்துகொண்டிருக்கும் காரணத்தாலேயே இடதுசாரிக் கட்சிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தமானது சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால், அதன் அடுத்த நடவடிக்கை என்பது, அதன் அமலாக்கம்தான். ஆகவேதான், பேச்சுவார்த்தைக்கு முன்னமேயே அதனை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்தன. இடதுசாரிக் கட்சிகள் இந்த விஷயத்தில் எப்போதும் திறந்தமனதுடனும் வெளிப்படையாகவும் செயல்பட்டன. இந்த ஒப்பந்தமானது எவ்வாறெல்லாம் நாட்டின் நலன்களுக்கு எதிரானது என்று வாதிட்டன. பிரதமரும் ஐமுகூ அரசாங்கமும் வேறெது வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும். இது குறித்து மக்கள் தீர்மானிக்கட்டும். மிகவும் கேவலமான முறையில் குதிரைபேரத்தில் ஈடுபட்டு, பெரும்பான்மையைப் பெற்று மக்களவையில் நம்பிக் கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தாலேயே, நாடு, இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்விதத் தார்மீகப் பொறுப்பும் ஐமுகூ அரசாங்கத்திற்குக் கிடையாது.

கடந்த நான்காண்டுகளாக, குறைந்த பட்ச பொதுச்செயல் திட்டத்தின் அடிப்படையில், ஐமுகூ அரசாங்கத்திற்கு, இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்து வந்தன. பிரதமரும், ஐமுகூ அரசாங்கமும் தனிப்பட்ட எவருக்கும் ‘கொத்தடிமை’ களாக இருந்திட வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் இந்தக் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு ‘கொத்தடிமை’களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழிகளில் பல குறித்து சிறு துரும்பும் அசைக்கப்படவில்லை. நிறைவேற்றப் பட்டுள்ள உறுதிமொழிகளில் ஒருசிலவும் வேண்டாவெறுப்பாகவே செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக மட்டுமே, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைகள் சட்டம், தகவல் அறியும் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் நிறை வேற்றப்படும் சமயத்திலும் மன்மோகன் சிங் அரசாங்கம் இவற்றை நிறை வேற்றுவதற்கு முகம் சுளித்ததையும் நிறைவேற்றப்பட்டபின் இதனை அமல் படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாகவும், நத்தை வேகத்திலும் செயல்பட்டுவருவதையும் பார்க்கிறோம். அமல்படுத்தப்படும் பல இடங்களில் அரசாங்க அதிகாரிகளின் லஞ்சலாவண்யம் என்னும் சேற்றில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியாது தத்தளிப்பதையும் பார்க்கிறோம்.

குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தைப் பொறுத்த அளவில் உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்கும் சமயத்தில், இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மிக மோசமான முறையில் அவசரப்படுவதற்கான அவசியம் என்ன? உண்மையில் இந்த ஒப்பந்தம் குறித்து குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் கூற முடியும். பிரதமர் தாமாகவே தன்னை ‘ஒரு கொத்தடிமை’ என்று குறிப்பிட்டிருப்பதால், தன் எஜமானரையும் அவ்வாறே அவர் தீர்மானித்துக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது.

மற்றொரு விஷயமும் இங்கே கவனிக்கத்தக்கதாகும். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் அல்லது எதிர்த்து வாக்களிக்காமல் இருந்திருக்கிறார்கள். மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற குதிரைபேரத்தில் இவர்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அல்லது, அதற்கும் மேல் இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? பாஜக வின் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இதனை ஆராய்ந்தோமானால், இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பாஜகவின் எதிர்ப்பு என்பது, உண்மையானதல்ல என்பதையும், பெயரளவிலான ஒன்றே என்பதையும் பார்க்க முடியும். எனவே பாஜகவும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வாக்கெடுப்பில் ஐமுகூ அரசாங்கம் வெற்றி பெறக்கூடிய வகையில் கண்டும்காணாமல் இருந்து விட்டதோ? தன் உறுப்பினர்களில் சிலரைப் பணம் பெற்றுக்கொள்ள அனுமதித்திருக்கிறதோ? வரவிருக்கும் காலங்களில் இதற்கான பதில்கள் நிச்சயமாகத் தெரிந்துவிடும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.