அமெரிக்கக் குடியரசுத்தலைவர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறவுள்ளது. அத்தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளில் ஒன்றாகிய ஜனநாயகக்கட்சி தனது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடை முறையை கடந்த சில மாதங்களாக அரங்கேறிவந்தது. பாரக் ஒபாமாவும், ஹிலாரி கிளின்டனும் இதற்காக தங்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி வந்தனர். இப்போட்டியில் பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனது பிரச்சாரத்தில் கியூபா – அமெரிக்க தேசியக் கழகம் என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசினார். கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறியுள்ள கியூபாமக்களிடையே பேசும் போது கியூபாவை பற்றி வெறுப்பை காட்டியுள்ளார் ஒபாமா. அதில்“எனது வாழ்நாள் காலம் முழுவதும் கியூபாவில் அநீதியும், ஒடுக்கு முறையுமே நிலவி வந்துள்ளன. எனது ஆயுட்காலத்தில் ஒருபோதும் கியூபா மக்கள் சுதந்திரம் என்பதையே அறியவில்லை. கியூபா மக்களின் இரண்டு தலைமுறையினர் ஜனநாயகம் என்பதை அறிந்திருக்கவில்லை, அரை நூற்றாண்டு காலமாக பயங்கரமான சோகமயமான இந்த நிலை தான் மாற்றமின்றித் தொடர்கிறது. தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியமாகவும் நடைபெற்றதில்லை. இந்த அநீதிக்கு ஆதரவாக நான் இருக்கமாட்டேன். நீங்களும் ஆதரவாக இருக்கமாட்டீர்கள். நாம் இருவரும் இணைந்து நின்று கியூபாவின் சுதந்திரத்துக்காக பாடுபடுவோம்.”கியூபா புரட்சியை ஏற்றுக்கொள்ளாமல் கியூபாவை விட்டு ஓடிவந்து அமெரிக்காவின் கைக்கூளிகள் போல செயல்பட்டு வரும் குடியேறிகளின் ஆதரவைக் கோருவதற்கு வந்த ஒபாமா இவ்வாறு பேசியதில் வியப்படைய எதுவுமில்லை. இப்பேச்சை கேட்ட புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ ஒபாமாவிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஒபாமா தமது உரையில் புலம் பெயர்ந்த் கியூபர்களின் அமைப்பின் ஒரு முக்கிய புள்ளியாகிய ஜோஸ்ஹேர்னாண்டஸ் என்பவரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இவர் யார் தெரியுமா? வெனிசுலாவுக்கு கடல் மார்க்கமாக நவீனரக தானியங்கி துப்பாக்கி ஒன்றையும் வேறு சில பயங்கர ஆயுதங்களையும் கடத்தியவர். வெனிசுலா நாட்டின் மார் கரிட்டா நகரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவைக் கொல்லும் சதித்திட்டத்தை அரங்கேற்றவே இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டது. இந்த சதி முறியடிக்கப்பட்டது. இந்த செய்தி பல அமெரிக்க நாளிதழ்களில் வெளிவந்து இவருடைய மானம் கப்பலேறியாது.
இதோ அவர் கேட்டுள்ள கேள்விகள்:
உலகிலுள்ள எந்த ஒருவரையும் எந்த ஒரு காரணத்திற்காகவும் கொலை செய்துவிட உத்தரவிடும் உரிமை அமெரிக்க ஜனாதிபதிக்கு உண்டா?
மற்ற மனித உயிர்களை சித்திரவதை செய்திட அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிடுதல் அறநெறியின் பாற்பட்டதா?
உலகில் அமைதியை நிலை நாட்டுவதற்குக்காக அரசு பயங்கரவதத்தை ஒரு கருவியாக அமெரிக்கா பயன் படுத்தலாமா?
மிகவும் ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த சிறந்த விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் அமெரிக்காவுக்கு ஈர்க்கப்படுவதும் ஒரு வகையான திருட்டு அல்லவா? இது தருமமா நியாயமா?
அமெரிக்கப் பெருநிலப்பரப்பிலுள்ள எந்த நாட்டிலும் ஐரோப்பிய வல்லரசுகள் தலையிட அமெரிக்கா அனுமதிக்காது என்ற மன்றோ கொள்ளையை பெருமையுடன் வலியுறுத்திள்ளீற்கள். அதேசமயம் உலகின் எந்த மூலையிலும் அமெரிக்கா தலையிடுவதற்கான உரிமையும் வலியுறுத்தினீர்கள்? இதற்காகத் தானே நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்களை உலகம் முழுவதிலும் அமெரிக்கா பராமரித்து வருகிறது. கடற்படை, விமானபடை போன்றவைகளை உலகெங்கிலும் நிறுத்தி வைத்துள்ளது? இதுதான் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் நடை முறையா?
60க்கும் மேற்பட்ட இடங்களை உலகின் கருப்பு மூளைகளென்று அறிவித்துவிட்டு அவற்றை வலியச் சென்று தாக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக புஷ் அறிவித்துள்ளாரே அது நியாயமா? யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்து குவிப்பதற்காக கோடிக்கணக்கான டாலர் பணத்தை ராணுவத் தொழில்துறையில் முதலீடு செய்வது ஆரோக்கியமானத்தா? மதிப்புமிக்க செயலா? உலக உயிர்களைப் பலமுறை அழிக்கக்கூடிய அளவுக்கு ஆயுதங்களைத் தயாரிப்பது நியாயமா?
இப்படிப்பட்ட நச்சென்ற கேள்விகளை எழுப்பியுள்ள பிடல் காஸ்ட்ரோ இவை எவற்றுக்கும் தாம் பதில்களை எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றையெல்லாம் பதிவு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே தாம் இவற்றை எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.