மும்பை கலவரம் நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கலவரத்தை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டப் பல பேரை குற்றவாளிகள் என அடையாளம் காட்டியிருக்கிறது. எனினும், அரசியல் செல்வாக்கு மிக்க குற்றவாளிகள் ஒருவர் கூட இன்று வரை தண்டிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாகக் கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவோம்” என்ற வாக்குறுதியை அள்ளி வீசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி. ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன் எப்போதும் போல தான் அளித்த உறுதிமொழியை மறந்துவிட்டது. இது ஏதோ ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு அல்ல. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ள போது தான் மும்பை கலவரம் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது கலவரம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் மொத்தம் 2256. இதில் 1,371 வழக்குகள் போலீஸ் விசாரணையின் போதே குழி தோண்டி புதைக்கப்பட்டன. 539 வழக்குகள் நீதிமன்றத்ால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். 253 வழக்குகள் நீதிமன்ற விசாரணை என்னும் நாடகத்தில் சிக்கி தவிக்கின்றன. 93 வழக்குகள் நீதிமன்றதிற்கு அனுப்பப்படாமல், அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மும்பை கலவரம் தொடர்பாக, சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே மற்றும் அக்கட்சியின் நாளேடு “சாம்னா” மீதும் ஒன்பது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மூன்று வழக்குகள் அராசலே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. நான்கு வழக்குகளில் குற்றப் பத்திரிகை வினையப்படாததால்(Framing of Charges) பால் தாக்கரேயும், பிற குற்றவாளிகளும் அவ்வழக்குகளில் இருந்து 1996-ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள இரண்டு வழக்குகளிலும், பால் தாக்கரே நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட போது மகாராஷ்டிரா உயர் நீதி மன்றத்தால் கடந்த ஆண்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
“பழைய வழக்குகளை மீண்டும் தோண்டுவதால் நீதி வழங்கிவிட முடியாது; மாறாக, அது மதரீதியான இருக்கத்தைத் தான் உருவாக்கும். ஏற்கனவே காலம் கடந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில், பால் தாக்கரேயை விடுதலை செய்து விசாரணை நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் தவறு காண முடியாது” என ஒரு தத்துவார்த்தா விளக்கம் வேறு அளித்தது உயர்நீதி மன்றம்.
மும்பை கலவரத்தின் பொழுது, பால் தாக்கரேயின் தளபதியாகச் செயல்பட்ட மதுக்கர் சர்போத்தர் கலவர சமயத்தில் இராணுவத்திடம் பிடிபட்ட பொழுது அவர் பயணம் செய்த ஜீப்பில் இருந்து உரிமம் பெறாத இரண்டு துப்பாக்கிகள், கொலை வாட்கள், ஹாக்கி மட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பதியப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்து மதுக்கர் 1998-99 ஆம் ஆண்டு நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டு விட்டார். “மேல் முறையீடு செய்வதற்கு தகுதியற்ற வழக்குகள் இவை” என உச்சநீதி மன்றத்திடம் கூறி, மதுக்கருக்கு நிரந்தரமாக விடுதலை வாங்கி தந்தது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.இப்படிப்பட்ட நிலையில் மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணி அரசு சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் மும்பை கலவரம் தொடர்பாக இறுதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் “பால் தாக்கரே மீதான மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததில் தவறு காண முடியாது” என குறிப்பிட்டு உள்ளது. மேலும், கலவரம் நடந்த சமயத்தில் பைகுல்லா போலீசு நிலைய ஆய்வாளராக இருந்த வாஹாலே என்ற மிருகம் தான் ஷாநவாஸைச் சுட்டுக் கொன்றான் என்பது ஊருக்கே தெரிந்த உண்மை. ஆனால், வாஹாலே ஷாநவாஸை சுடவில்லை; அவருக்கும் இக்கொலைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை, இதற்கு எந்த சாட்சியும் இல்லை என்பதால் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளது.அடுத்து “ஸ்டார் மெட்டல்” என்ற ஆலை வளாகத்தில், கலவரத்தின் பொழுது 11 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் 1996-ஆம் ஆண்டே தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இவ்வழக்கிலும் மேல் முறையீடு செய்ய முடியாது. என்று பிரமாணப் பத்திரத்தின் மூலம் மறுத்துள்ளது காங்கிரஸ் அரசு.
ஹரி மசூதிக்குள் போலீசு படையோடு நுழைந்து அங்கு தொழுகை செய்து கொண்டிருந்த ஏழு முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற நீக்கில் காப்ஸே என்ற போலீசு ஆய்வாளர் மீது துறை ரீதியாகக் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும், பிராமணப் பத்திரத்தில், “இவ்வழக்கை விசாரிக்க மையப் புலனாய்வுத் துறையை ஏற்கனவே அணுகியதாகவும், சி.பி.ஐ., விசாரிக்க மருத்துவிட்டதாகவும், தற்சமயம் இவ்வழக்கை சி.பி.ஐ., வசமே ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க ஆலோசித்து வருவதாகவும்” கூறி தனது மெத்தனத்தை நியாப்படுத்தியிருக்கிறது, காங்கிரஸ் கூட்டணி.
ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை மீண்டும் மலம் துடைக்கும் காகிதமாக ஆனது தான் மிச்சம்.
சுருக்கமாக சொன்னால், மும்பை கலவரம் தொடர்பான வழக்குகளில் தாமதமாகவாவது நீதி கிடைக்கும் என்று யாராவது நம்பிக் கொண்டுருந்தால் பிரமாணப் பத்திரத்தின் மூலம் அந்த நம்பிக்கையில் நெருப்பை அள்ளிப் போட்டுவிட்டது, மதச் சார்பற்ற காங்கிரஸ் காட்சி.