மறக்க முடியாத மரணத்தின் நாள்

டிசம்பர் 4, 2009

மறக்க முடியாத மரணத்தின் நாள்

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கோர விபத்து- அது ஏற்படுத்திய தாக்கம் அதனால் இன்றைக்கும் பரிதவிக்கும் மக்கள் என பட்டியல் போட்டால் மிக நீளமாக இருக்கும்.

நேற்று-சென்ற மாதம் என சம்பவங்கள் நடந்ததே பெரும்பாலோர் நினைவுகளிலிருந்து அழிந்துவிடுகின்றது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் என்றால் கால் நூற்றாண்டு காலம். எதை நினைவில் கொள்வது என அலுத்துக்கொள்ளகூட தோன்றும்.

அப்படி புறந்தள்ளிவிட முடியாத- நினைவுகளிலிருந்து அகற்ற முடியாத விபத்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்தது. கடந்த 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் அங்கிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் உள்ள ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு ளியேறியது.

இவ்வாயு வெளியேற்றத்தால் சுமார் 10,000 பேர் உடனடியாக மடிந்திருக்கக்கூடும். (அரசு எண்ணிக்கை 3787). ஆனால் அவ்வாயுவை உள்வாங்கியதால் கிட்டத்தட்ட 25,000 பேர் மடிந்துள்ளனர்.

இவ்வளவு மனித உயிர்கள் மலிவாக இறந்துபோக காரணம் என்ன?

விபத்து – பின்னணி

1969ம் ஆண்டு போபாலில் நிறுவப்பட்ட பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சி மருந்து (கொல்லி)களை தயார் செய்தது. 1979ல் விஷவாயுவான மிதைல் ஐசோசயனேட் வாயு தயாரிக்கும் பகுதியையும் துவக்கியது.

இவ்வாயுவால் எக்காலத்திலும் பிரச்சனை எழக்கூடும் என அறிந்தே நிர்வாகம் உற்பத்தியைத் துவக்கியது. அந்த ஆலையில் விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்த நிபுணர்குழு பின்வரும் காரணங்களை விளக்கியது.

* தயாரிப்பு முறைகள் அனைத்தும் அபாயகரமான பழக்கங்களாக இருந்தவை.

* மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆலையை அமைத்தது.

* பாதுகாப்பு முறைகளில் மற்றும் நடவடிக்கைகளில் இருந்த பலவீனம்

* அந்த ஆலை முழுவதும் மனிதர்களாலே இயக்கப்பட்டது. அதாவது அதிநவீன இயந்திரங்கள் இருந்தும் பயன்படுத்தப்பட வில்லை.

1985ல் இவ்விபத்து பற்றி ஆய்வு நடத்திய மற்றொரு குழு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் மேலும் சில புது தகவல்களை கண்டறிந்து வெளியிட்டது. 1980களிலேயே உற்பத்தியை நிறுத்திய இந்நிறுவனம் 1984ல் எப்படி நச்சு வாயுவை உற்பத்தி செய்ய- சேமிக்க அனுமதிக்கப்பட்டது?

பாதுகாப்பு வசதிகள் தேவையை விடக் குறைவாகவே இருந்தது. பணம் மிச்சப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக, நச்சு வாயுவை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சேமிப்பு தொட்டிகள் முறையாக பராமரிக்கப் படாமல், மேலும் குளிர்பதன வசதிகள் உருவாக்கப்படாமல் இருந்தது.

ஆக மொத்தத்தில் விபத்துக்குக் காரணம் என பட்டியலிட்டால், முதலில் யூனியன் கார்பைடு நிறுவனம், இந்திய அரசு, மத்தியப் பிரதேசமாநில அரசு என வரிசைப்படி செல்லும். இவ்விபத்து நடப்பதற்கு மேலும் ஒரு காரணம் ஊழியர் பற்றாக்குறை. முழுமையான- தேவையான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படாமல், இருந்தவர்களை வைத்தே பெரும் பணிச்சுமையுடன் வேலை வாங்கியது.

முன்னெச்சரிக்கை குரல்கள்

ஆலை துவங்கப்பட்டு 7 ஆண்டுகளிலேயே, அதாவது 1976-ல் அங்கிருந்த இரு தொழிற்சங்கங்கள் மாசுபடுதல் மற்றும் விஷவாயுக்களின் தாக்கம் பற்றி கேட்டன. நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியது.

அதன்பின்னர் 8 ஆண்டுகளில் பல சிறு விபத்துகள் நடைபெற்றது. உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலுங்கூட, அந்த ஆலையில் இருந்த விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என அனைவரும் கூறியது வீணாயிற்று.

விபத்தும் – பாதிப்பும்

இரவில் கசிவு ஏற்பட்டதால், பலர் உறக்கத்தில் இருந்தனர். சிலர் என்ன நடக்கின்றது எனத் தெரியாமலேயே மடிந்தனர். கடுமையான இருமல், நுரையீரல் அடைப்பு, கண் எரிச்சல், வாந்தி என அனைத்தும் ஒருசேர தாக்கியது.

சம்பவ இடத்தைவிட்டு தப்பிப்பதற்காக, ஓடியதால் தேவைக்கு அதிகமான மூச்சை உள்வாங்கியதால் உடனடியாக மரணமடைந்தனர். தெருக்களில், காலனி வீடுகளில் ஏற்பட்ட நெரிசலிலும் பலர் இறந்ததாக சொல்லப்படுகின்றது.

அன்றைய நாள் இரவை விட டிசம்பர் 3 அன்று விபத்தின் கொடூரத்தை உலகம் அறிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ மனைகளிலும், வீடுகளிலும் உயிரிழந்தனர். சுமார் 2 லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

இன்றும் தொடரும்

25 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரையில், விஷவாயு தாக்குதல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சுமார் 2 லட்சம் மக்களுக்கு இவ்விபத்தால் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது தலையிலிருந்து கால் வரை அனைத்து உறுப்புகளிலும் தென்படுகின்றது.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டுமென இந்திய அரசு அறிவித்து, சில நடவடிக்கைகளை எடுத்தது. யூனியன் கார்பைடு நிறுவனம் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை தருவதாக அறிவித்து வட்டியுடன் 470 மில்லியன் டாலர் இந்திய அரசால் பெறப்பட்டது.

தன்னிடம் இருக்கும் பங்குகளை நிறுவனம் விற்றது. அந்த வருவாயில் விபத்தில் பாதிக்கப்பட்ட உயிர்காப்பாற்றப்பட்டவர்களுக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது நிறைவேற்றப்பட்டது.

18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இழப்பீடு என அறிவித்தது அரசு. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் குழந்தைகள் தான்.

சில நாட்களுக்கு உணவும்; பின்னர் குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டது. விபத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.25,000, மரணமடைந்தவர்களுக்கு ரூ.62,000 வழங்கப்பட்டது. சில காலம் ஆண்களை இழந்த பெண்களுக்கு விதவை பென்சனாக ரூ.200ம், பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ரூ.750ஆக உயர்த்தப்பட்டது.

1986ல் ஆலை முழுவதும் மூடப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கில், ரசாயன கழிவுகள் சிறு அளவுகளில் இன்றும் இருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆலையை சுற்றியுள்ள பகுதிகள் கழிவுகளை கொட்ட பயன்படுத்தப்பட்டது. அது நிலத்தடி நீரை வெகுவாகப் பாதித்துள்ளது. பல ரசாயன கலவை அத்தண்ணீரிலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாரன் ஆண்டர்சன், கைது செய்யப்பட்டு 3 நாட்களில் விடுதலை ஆனார். (அவ்வளவு செல்வாக்கான மனிதர்).

ஒரு மிகப்பெரிய உயிர்ச்சேதம் விளை வித்த இச்சம்பவம் நடந்து முடிந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. தவறு செய்தவர்களோ உரிய முறையில் தண்டிக்கப்படவில்லை. ஆனால் ஆலை விற்கப்பட்டது. வேறொரு நிறுவனம் இன்றும் தனது உற்பத்தியை செய்து கொண்டிருக்கின்றது.

இப்படி நிலை இருக்க, இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் தங்கள் ஆலைகளை உருவாக்கி பல பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றது ஏகாதிபத்திய நாடுகள். நமது ஆட்சி யாளர்களும் அந்நிய முதலீடு என மார்தட்டிக் கொள்கின்றனர். எச்சங்களையும், மிச்ச சொச்சங்களையும் நம்மீது தள்ளிவிட அனுமதிக்கக்கூடாது.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற கோர விபத்துகளில், போபால் விஷவாயு கசிவு முக்கியமானது. ஆட்சியாளர்களின் நிர்வாக அவலட்சணத்தை படம் பிடித்துக் காட்டிய சம்பவம் இது!

மீண்டும் ஒரு போபால் ஏற்படா வண்ணம் விழிப்பாக இருப்போம்!

இந்தியாவை பாதுகாப்போம்!

நவம்பர் 22, 2009

சுரங்க அரசியல்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 6:07 மு.பகல்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபுலாபுரம் இரும்புத்தாது சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடு மாறு மத்திய அரசை ஆந்திர அரசு கோரியுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய ரெட்டி சகோதரர்கள் தற்போது ஆந்திர அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஓபுலாபுரத்தில் உள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி குத்தகைக்கு எடுத்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களும், ஜெகன்மோகன் ரெட்டியும் தொழில்முறை கூட்டாளிகள் என்றும், ஜெகன் மோகன் ரெட்டியின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ரெட்டி சகோதரர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றும் தெலுங்குதேசக் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஓபுலாபுரம் இரும்புத்தாது தொழிற்சாலை குத்தகை குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரியுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார். ஓபுலாபுரம் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதை தாம் வரவேற்பதாகவும், சுரங்க முதலாளிகளுக்கு இடையிலான மோதலில் தமது பெயரை தேவையின்றி இழுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். ராஜசேகர ரெட்டி மறைவைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இல்லையென்றால் ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உடனடியாக இதற்கு இசையவில்லை. கர்நாடக மாநிலத்தில் கோஷ்டிப்பூசல் காரணமாக தங்களது சுரங்கக்கொள்ளைக்கு சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று ரெட்டி சகோதரர்கள் கலகம் செய்தனர். எம்எல்ஏக்களை கடத்தி வைத்து, மேலிடத்துடன் பேரம் பேசினர். பாஜக மேலிடம் தலையிட்டு, ரெட்டி சகோதரர்களின் கொள்ளைக்கு தடைவிதிக்க வேண்டாம் என்று பஞ்சாயத்து செய்ததைத் தொடர்ந்து எடியூரப்பாவின் பதவி தப்பியது. ஆனால் அவரது தீவிர ஆதரவாளரான பெண் அமைச்சர் ஷோபாவின் பதவி பறிக்கப்பட்டது. எடியூரப்பாவினால் மாறுதல் செய்யப்பட்ட, ரெட்டி சகோதரர்களுக்கு ஆதவான அதிகாரிகள் மீண்டும் அதே பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த தொழில் அதிபர்களின் செல்வாக்கு மண்டலம் ஆந்திரா வரை பரவியுள்ளதை ஓபுலாபுரம் சுரங்க விவகாரம் உணர்த்துகிறது. அரசியல் என்பது ஜனநாயக முறையில் மக்களுக்கு சேவை செய்யும் பணி என்ற நிலை மாற்றப்பட்டு, முதலாளிகளின் சதுரங்க விளையாட்டு என்ற நிலை உருவாக்கப்படுவது மக்களாட்சியின் மாண்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாகும். தேசிய அரசியலிலும் இதன் நிழல் படிகிறது. முந்தைய ஆட்சியின்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசைக் காப்பாற்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கரன்சி விளையாட்டு நாடாளுமன்ற கட்டிடம் வரை நீண்டதை நாடு பார்த்தது. தேசத்தை நேசிப்போர் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று இது.

நவம்பர் 10, 2009

கருநாடகம்

கோப்பு வகை: அரசியல், இந்துதுவா — குறிச்சொற்கள்: — lightink @ 4:21 மு.பகல்

ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்ளைக் கூட்டத்தோடு உறவாடிய பாஜகவினர் இப்போது ஆப்பசைத்த குரங்காய் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். “பாஜக வித்தியாசமான கட்சி” என்ற அவர்கள் பற்றிய விளம்பர வாசகங்கள் அர்த்தமிழந்து பல்லிளித்து நிற்கிறது கர்நாடகாவில் .

முதன் முதலாக தென் மாநிலத்தில் பாஜக வேரூன்றி விட்டது என கர்நாடக வெற்றியை அவர்கள் வருணித்தார்கள். மதச் சார்பற்ற ஜனதா தளம் செய்த கோமாளித்தனங்களாலும்; காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கசந்து போயிருந்த மக்களிடம் பணத்தை அள்ளிவீசி பெறப்பட்ட வெற்றியே அது. அப்போதும் கூட அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் சுயேட்சைகளையும் இதரர்களையும் விலை கொடுத்து வாங்கி (Opreation Loutus) ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார் எடியூரப்பா. ஆக, கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்ததே பண பலத்தால் தான்.

கர்நாடக அரசியலை ஊன்றிக் கவனிக்கிற யாரும் அங்கே நடப்பது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியென்று கூறமாட்டார்கள். பெல்லாரி ஜனார்த்தன ரெட்டி குடும்ப பிரைவேட் பார்ட்டி என்றே கூறுவார்கள். அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான கனிம வளத்தை கொஞ்சம் சட்டப் பூர்வமாகவும், மிக மிக அதிகமாக சட்ட விரோதமாகவும் கொள்ளையடித்துவிட்டு, அதில் ஒரு சிறு பகுதியை எலும்புத் துண்டுகளைப் போல மக்களுக்கு வீசுகிற ஸ்டைல்தான் அவர்களுடையது.

தங்கள் வெற்றிக்கும் ஆட்சி அதிகாரப் பசிக்கும் அவர்கள் தயவு தேவை என்பதால் இத்தனை காலம் அந்தக் கொள்ளையை கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆயினும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் சற்று கட்டணம் உயர்த்தியதும் “பாலூட்டுகிற காம தேனு”வாக பாஜகவுக்கு காட்சியளித்தவர்கள் “பாசக் கயிறை”வீசுகிற எமனாக காட்சியளிக்கத் துவங்கிவிட்டனர்.

ரெட்டி சகோதரர்கள், தங்களுக்கு 71 எம்எல் ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிவருகின்றனர். இந்த எம்எல்ஏக்களை சென்னை, ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் அடைத்து வைத்துள்ளதாக எடியூரப்பா கோஷ்டியினர் கூறுகின்றனர்.

ஆந்திராவில் காங்கிரஸ் தலைவர்களோடும், கர்நாடகாவில் பாஜகவோடும் உறவாடி தங்கள் கனிமக் கொள்ளையை ஜாம் ஜாம் என நடத்திக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம், ஒரு மாநில ஆட்சிக்கு சவால் விட முடியுமென்றால்; பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கொள்கை லட்சணம் அவ்வளவுதான்.

அதிகாரிகளை, பத்திரிகைகளை, நீதிபதிகளை, விலைக்கு வாங்கும் பணத் திமிங்கலங்களால் விலைக்கு வாங்கப்பட்ட கட்சிதானே பாஜக! அவர்களுக்கு கொள்கையைப் பற்றி, நேர்மையைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. மதவெறியும் பணத் திமிங்கலங்களும் சேர்ந்து நடத்தும் அரசியல் வியாபாரத்தை மக்கள் புரிந்து கொண்டு விரட்டியடிக்க வேண்டும். இந்த ‘புனிதக் கூட்டணி’ ஆட்சி தொடருமானால் அது மக்களாட்சி மாண்புக்கே தலை குனிவாகும். மக்கள் நலனையும் மதநல்லிணக்கத்தையும் முன்னிறுத்துகிற புதிய அரசியல் கலாச்சாரத்துக்காக போராட வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் என்பதே கர்நாடகா சொல்லும் சேதி.

அக்டோபர் 22, 2009

ராஜாவின் புதிய ஊழல்

Capture

தகவல் தொலைத் தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயனடைந்த யூனிடெக் குழுமத்தைச் சேர்ந்த கம்பெனிகள் தங்கள் பங்குகளில் 74 சதவீதத்தை பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இயங்கிவரும் நார்வே டெலிகாம் நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனத்திற்குத் தந்திட பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ‘தி பயனீர்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

நார்வே நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனம் பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இயங்கி வருவதால், யூனிடெக் குழும கம்பெனிகள் தங்களின் பங்குகளை அதற்கு மாற்றிட, மத்திய உள்துறை அமைச்சகமும் புலனாய்வுக் குழுவும் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வும் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆயினும், பின்னர் உள் துறை அமைச்சகம், எதிர்ப்புகளுக்கான காரணங்களை நீர்த்துப்போகச் செய்து விட்டது. உள்துறை அமைச்சகத்தின் புதிய நிபந்தனைகளின்படி டெலினார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் பணியாற்றியிருப்பின் அவர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். ஆனால் இந்தியாவில் பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் பாகிஸ்தானிலோ வங்க தேசத்திலோ பணியாற்றவில்லை என்பதை எவ்விதம் சோதனை செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

டெலினார் நிறுவனம் மத்திய அரசின் அனுமதியை சிங்கப்பூரில் செயல்படும் தங்கள் கிளையின் வாயிலாக வாங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கடந்த ஞாயிறு அன்று சந்தித்துக் கொண்டதற்கு மறுதினம், திங்களன்று மத்திய அரசு இந்த முடிவினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டெலினார்’ பிரச்சனை, கருணாநிதிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சென்ற ஆண்டு டிசம்பர் 4 அன்று கருணாநிதி புது தில்லி வந்திருந்தபோதே, சோனியா காந்தியிடம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ‘டெலினார்’ நிறுவனம் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அன்றைய தினம் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் ‘‘அவலம்’’ தொடர்பாக அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் தில்லி வந்திருந்தார். காலையில் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தபின், கருணாநிதி மட்டும் சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத் சாலைக்குப் பயணித்திருக்கிறார். சோனியா கா தியுடன் புகைப்படம் எடுக்கும் வைபவம் முடிந்த பின்னர், தன்னுடன் வந்திருந்த டி.ஆர். பாலுவையும் அவர் வெளியேறச் சொல்லி விட்டார். அவரது மகள் கனிமொழி மட்டும் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது உடன் இருந்திருக்கிறார்.

சென்ற ஆண்டு, ரியல் எஸ்டேட் கம்பெனியாக இருந்த யூனிடெக் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை 1651 கோடி ரூபாய்களுக்குப் பெற்று, அடுத்து ஒருசில வாரங்களுக்குள் அதில் 60 சதவீத பங்குகளை டெலினார் நிறுவனத்திற்கு 6120 கோடி ரூபாய்க்கு விற்றதைத் தொடர்ந்து பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன. யூனிடெக் நிறுவனம் பல்வேறு பெயர்களில் டெலிகாம் உரிமங்களுக்காக விண்ணப்பித்திருந்தன. மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றொரு அறிவிக்கையை வெளியிட்டநிலையில், யூனி டெக் நிறுவனங்கள் தாம் பெற்ற அனைத்து உரிமங்களையும் ஒன்றிணைத்து விட்டன. இது தொடர்பாக தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையம், குற்றப்புலனாய்வுக் குழு ஆகியவை விசாரித்து வருகின்றன.

பின்னர், யூனிடெக் நிறுவனம் மீண்டும் தன்னை யூனிடெக் ஒயர்லஸ் (தமிழ் நாடு), யூனிடெக் ஒயர்லஸ் (வடக்கு), யூனிடெக் ஒயர் லெஸ் (தெற்கு), யூனிடெக் ஒயர்லஸ் (கொல்கத்தா), யூனிடெக் ஒயர்லஸ் (தில்லி), யூனிடெக் ஒயர்லஸ் (கிழக்கு), யூனிடெக் ஒயர்லஸ் (மும்பை), யூனிடெக் ஒயர்லஸ் (மேற்கு) என எட்டு கம்பெனிகளாக பிரித்துக் கொண்டது.

Update: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு சில தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று மாலை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந் நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள சஞ்சார் பவன் கட்டத்தி்ல் உள்ள அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட் நடத்தி வருகிறது.

மேலும் சில தொலைத் தொடர்பு அலுவலகங்களிலும் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

அக்டோபர் 7, 2009

அவர்களுக்கு இல்லை எந்த நெருக்கடியும்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — lightink @ 7:13 மு.பகல்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து பல மாதங்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த அமைச்சர்கள் வெளியேறி,அரசு மாளிகைகளில் தங்கத்துவங்கினர். சோனியாகாந்தி உள்ளிட்டோர் விமானத்தில் சாதாரண வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்து நாட்டிற்காக “மகத்தான” தியாகம் செய்து வருகின்றனர்.

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது,மக்களும் இதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்வதுதான் காங்கிரசாரின் வழக்கம். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவரே நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். அவர் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கோ, ஆலைத் தொழிலாளர்களுக்கோ, முறைசாரா தொழிலாளர்களுக்கோ அல்ல; மாறாக நாட்டிலுள்ள மிகப்பெரிய முதலாளித்துவ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் குரல் கொடுத்திருக்கிறார்.

பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். உழைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முடிந்த வரை குறைக்க நினைக்கும் முதலாளிகள் சங்கம் கூட இந்த ஊதிய உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிக்கி எனப்படும் முதலாளிகள் அமைப்பின் தலைவர் சிங்கானியா, தலைமை நிர்வாகிகளின் ஊதியம் குறைக்கப்படக் கூடாது. மாறாக இப்போதிருப்பதைவிட இன்னமும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாததால்தான் அரிய பெரிய மூளைகளெல்லாம் வெளி நாட்டுக்கு உழைப்பதற்கு சென்றுவிட்டது. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் முன்பு அப்படியே வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்கள். இப்போது அவர்களுக்கு ஓரளவு நியாயமான ஊதியம் கிடைப்பதால்தான் இந்தியாவில் பணியாற்ற “பெருந்தன்மையோடு” முன்வந்துள்ளனர் என்றும் சிங்கானியா கூறியுள்ளார்.

ஐஐஎம், ஐஐடி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில், முழுக்க முழுக்க அரசு செலவில் படிப்பவர்கள் வெளிநாட்டுக்கு பறந்து செல்வதை தடுக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று முதலாளிகள் சங்கம் கூறவில்லை. மாறாக அவர்களை இங்கேயே தக்கவைக்க உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது.

உலக வங்கியின் தலைவரே, பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாகும் என்று அவ்வப்போது அபாயச் சங்கு ஊதுகிறார். ஆனால் அவர் தனது ஊதியத்தை குறைத்துக்கொள்ள முன் வரவில்லை. மாறாக, தனது ஊதியத்தை மேலும் உயர்த்திக்கொண்டுள்ளார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. பொருளாதார நெருக்கடியின் மொத்த சுமையும் கிராமப்புற எளிய மக்கள், நகர்ப்புற உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஊருக்குத்தான் உபதேசம், நமக்கு இல்லை என்பதுதான் முதலாளிகளின் சித்தாந்தம்.

செப்டம்பர் 30, 2009

துப்பு கெட்ட ஜம்மு & காஷ்மீர் அரசாங்கம்

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 7:56 மு.பகல்

துப்பு கெட்ட அரசாங்கம் என்றால் ஜம்மு & காஷ்மீர் அரசை உதாரணம் காட்டலாம். ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத அரசுக்கு வேறு என்ன பட்டம் சூட்ட முடியும்? ஐந்து மாதமாக சம்பளம் போடாததால் அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் ஆகஸ்ட் 26ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

850 பஸ்கள் ஓடவில்லை. டெல்லி, ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் போக்குவரத்து கழக பணிமனைகளும் அலுவலகங்களும் மூடிக் கிடக்கின்றன. ‘ஃபீஸ் கட்ட முடியாததால் எங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து துரத்தி விட்டார்கள்; நாங்களும் பட்டினி கிடக்கிறோம்; சம்பள பாக்கியை தாருங்கள்’ என்று கோஷமிட்டு குடும்பத்தினருடன் ஊர்வலம் போக முயன்ற ஊழியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீஸ் தடியடி நடத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் காயம் அடைந்திருக்கின்றனர். காஷ்மீரில் அரசு போக்குவரத்து கழகம் 1976ல் தொடங்கப்பட்டது.

சாதாரண மக்களுக்கு இன்றும் அந்த பஸ்கள்தான் உதவுகின்றன. ஆனால் மோசமான நிர்வாகம், அரசியல் தலையீடு காரணமாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இன்றைய தேதியில் அது 400 கோடியை எட்டியுள்ளது. 15 ஆண்டுகள் பணி செய்தவர்கள் தாமாக விலக விரும்பினால் நல்ல தொகை தருகிறோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கழகம் அறிவித்தது. இதுவரை 271 பேர் அப்படி விலக கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு கணக்கு முடிக்க சில கோடிகள் வேண்டும் என்று அரசுக்கு கழகம் கோரிக்கை வைத்தது. லாபம் ஈட்ட முடியாத நிறுவனத்துக்கு சம்பள பணம் தருவதே தண்டம் என்று அரசு அதையும் நிறுத்திவிட்டது. வசதியானது, பாதுகாப்பானது, நம்பகமானது என்று காஷ்மீர் மக்கள் வர்ணிக்கும் அரசு பஸ்கள் இப்போது பேரீச்சம் பழத்துக்கு விற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளன. இதே காலகட்டத்தில் தனியார் பஸ்கள் நூற்றுக் கணக்கில் ஓடி நல்ல லாபம் ஈட்டுகின்றன. வேறு வேறு கட்சிகள் ஆட்சி அமைத்தாலும் நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகளிலும் ஊழல் செழித்து வளர்ந்ததால் நேர்மையான அதிகாரிகளும் கையாலாகாதவர்கள் ஆனார்கள். பயங்கரவாதத்தை விட கொடிய நோயால் மூச்சுத் திணறுகிறது அழகான காஷ்மீர் மாநிலம்.

செப்டம்பர் 25, 2009

ஒபாமாவை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

கோப்பு வகை: அரசியல், டாலர், பகுக்கப்படாதது — குறிச்சொற்கள்: — lightink @ 5:02 மு.பகல்

அமெரிக்க அதிபர் ஒபாமா தன் நாட்டிலுள்ள, எந்த வாய்ப்பும் வசதியுமில்லாத 46 மில்லியன் அமெரிக்க மக்களின் உடல் நலத்துக்கானதோர் காப்பீட்டுத்திட்டம் சம்பந்தமாக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார். அந்த மசோதாவின் மூலமாக அவர் ஜனநாயகக் கட்சியிலுள்ள கன்சர் வேடிவ்கள் மற்றும் குடியரசுக்கட்சியிலுள்ள மிதவாதிகள் ஆகியோரது ஆதரவைப் பெற்றிடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரான் நாட்டை ஒரு தீண்டத்தகாத நாடு என்று ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் அதிபர் ஒபாமா ஈரான் நாட்டுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்திட விரும்புகிறார். அந்த அடிப்படையில் அவர் ஈரான் நாட்டுத் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டு கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனால் டெஹ்ரான் அரசு அவற்றையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.

அதிபர் ஒபாமா ஈரான், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தோல்விமேல் தோல்வியடைந்து வருவதாகக் குடியரசுக் கட்சியினரும், ஏனைய வலதுசாரி விமர்சகர்களும் கண்டனக் கணைகளை எய்து கொண்டேயுள்ளனர்.

டெஹ்ரான் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு இணங்கவில்லை என்றால், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு அமெரிக்க ஆட்சியாளர்கள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்திட முன்வரலாம். அவ்வாறு செய்தால் ஈரான் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்படும்.

ஆனால் மேற்படி பிரச்சனையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் இரண்டும் தங்களுக்கிடையே அமைதிப் பேச்சுக்களைத் தொடங்கிட வேண்டும் என்று அதிபர் ஒபாமா விரும்புகிறார். அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் ஆகிய இருவரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதன் மூலமாக உலக அரங்கில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாமே தவிர ஜெருசலேம் பிரச்சனை, பாலஸ்தீன அகதிகளின் மறுவாழ்வு பற்றிய பிரச்சனை, எல்லைப்பிரச்சனை ஆகியவற்றில் சுமூகமான தீர்வுகளைக் கண்டிட இயலாது. இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு தன் நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகளுடன் கொஞ்சிக் குலவுகிறார். மேலும் பாலஸ்தீனத் தலைமையும் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிபர் ஒபாமாவால் கடந்த ஜூன் மாதம் சட்டமன்றத்தில் தன் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றப்படுவதைத் தடைசெய்வது சம்பந்தமானதோர் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடிந்தது. ஆனால் நிலக்கரி, எரிவாயு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெரிய பெரிய அமெரிக்க நிறுவனங்கள் மேற்படி மசோதாவுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.

ஜனநாயகக் கட்சியினரும் ஒருசில சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த வருடத்திற்குள்ளாவது மேற்படி மசோதாவைச் செயல் படுத்திட இயலுமா என்று சந்தேகப்படுகிறார்கள். அமெரிக்கா மேற்படி பிரச்சனையை தனது நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் தாங்களும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு எதிரான மசோதாவில் கையெழுத்திடுவோம் என்று சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

அதிபர் ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இராக் யுத்தத்திற்கு ஒரு முடிவு கட்டப்போவதாகவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முழுவீச்சுடன் ஈடுபடப்போவதாகவும் மேடைகள் தோறும் முழங்கினார். அதன்படி ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மேலும் 21,000 அமெரிக்கப் படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். இன்றைக்கு ஆப்கன் நாட்டில் 68,000 அமெரிக்கப் படைவீரர்கள் உள்ளனர். மேலும் மிகத்திறமையான ராணுவ நிபுணரான ஜெனரல் ஸ்டான்லி மெக்ரிஸ்டல் என்ற ராணுவ அதிகாரி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தலிபான்களை ஒடுக்கிட விரும்பும் அமெரிக்கத் திட்டங்களுக்குப் பாகிஸ்தானின் ஆதரவு கிடைக்கவில்லை. தான் தலி பான்களை ஆதரித்தால்தான் இந்தியாவின் செல்வாக்கைத் தடுத்திட இயலும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. தன் நாட்டில் நிலவிடும் பொருளாதாரப் பின்னடைவானது அதிபர் ஒபாமாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அமெரிக்க நாட்டில் 10 சதவீதம் பேர் வேலையின்றி வாடுகிறார்கள். இது அரசாங்கம் தரும் புள்ளி விவரம்தான். நாட்டில் இதைவிட அதிகமான நபர்கள் வேலையற்று தெருக்களில் அலைகிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு உயிரூட்டுவதற்காக 787 பில்லியன் டாலர்கள் உதவித்தொகையாக அளிக்கப்பட்டது. மேலும் அது மாதிரிப்பட்ட நிதியுதவிகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அதிபரின் பொருளாதார ஆலோசகரான கிறிஸ்டினா ரோமர் அந்தப் பிரச்சனை பற்றி எதுவும் பேசத் தயாராயில்லை.

இவ்வாறு ஒபாமா உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர் மேற்படி சவால்களைச் சமாளிப்பாரா என்பதை இனிவரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்.

ஆதாரம் : இந்து 10.9.2009

செப்டம்பர் 23, 2009

அத்வானி ஊசிப்போன ஊறுகாய்

பாஜக கூடாரத்துக்குள் உள்குத்து அதிகரித்து வரும் நிலையில், அத்வானி மீது மேலும் ஒரு முக்கியத்தலைவர் தாக்குதல் தொடுத்துள்ளார். அத்வானி ஒரு ஊசிப் போன ஊறுகாய், அவரது ஆட்டம் முடிந்துவிட்டது என்று கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்வானியின் காலம் முடிந்து விட்டது. அடுத்த இரண்டாண்டு காலத்திற்கு அவர் கட்சியின் கார்டியனாக வேண்டுமானால் செயல் படலாம் என்று பாரிக்கர் கூறினார்.

பாரிக்கர், அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ராஜ்நாத் சிங்கிற்கு பிறகு இவர் தலைவராக்கப் படலாம் என்று யூகங்கள் எழுந்த நிலையில், அத்வானி மீது அவர் கடும் தாக்குதல் தொடுத்துள்ளது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்வானி என்னுடைய மதிப்புமிக்க தலைவர், அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரது ஆட்டம் முடிந்து விட்டது. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகத்திலிருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்று, அத்வானியும் அரசியலிலிருந்து விலக வேண்டிய தருணம் இது என்று பாரிக்கர் கூறினார்.

ஊறுகாய் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊற வேண்டியது அவசியம். ஆனால் அதே நேரத்தில் அது ஆண்டுக்கணக்கில் ஊறிக்கொண்டிருந்தால் ஊசிப்போய் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும் என்று பாரிக்கர் கூறினார்.

நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று அவர் கூறினார். அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் மீது ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாரிக்கரும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.

செப்டம்பர் 21, 2009

காங்கிரஸ் கட்சியின் பாலைவனக் கனவு!

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 4:23 மு.பகல்

காங்கிரசை பலப்படுத்தும் நோக்கத்துடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியினர் என ஊருக்கு ஒரு பிரிவினரை சந்தித்து விட்டு, 2011ல் தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைப்பதுதான் காங்கிரசின் நோக்கம் என்று அறிவித்துவிட்டு டில்லிக்கு பறந்துவிட்டார்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை தனித்து அமைக்கப்போவதாக அறிவித்து, ராகுல் காந்தியின் தந்தையார் ராஜீவ் காந்தியும் இத்தகைய காட்சிகளை நடத்தியது உண்டு. ஆனால் அவருக்கு அதில் தோல்வியே கிடைத்தது.

இனிமேல் இளைஞர் காங்கிரசில் நியமனமே இருக்காது என்று ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். இவரே காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான். நியமனம் என்பது காங்கிரசுடன் ஒட்டிப்பிறந்த ஒன்று. மாநில முதல்வர் பதவியிலிருந்து, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி வரை நியமனம் மூலம் நிரப்புவதுதான் காங்கிரசின் கலாச்சாரம். எவ்வளவு வேகமாக நியமிக்கப்படுகிறார்களோ, அதே வேகத்தில் மேலிடத்தால் பதவி பறிக்கப்படுவதும் நடக்கும். மாநில அளவில் சொந்த செல்வாக்கு உள்ள தலைவர்கள் வளர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில் காங்கிரஸ் மேலிடம் எப்போதுமே தனிக் கவனம் செலுத்தும்.

ராகுல் காந்தி வருகையின்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவ-மாணவிகளை சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், அதுவும் இளைஞர் காங்கிரசை வளர்ப்பதற்காக என்ற பெயரில்தான் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு எந்த அடிப்படையில் காமராசர் பல்கலைக்கழகமும், அண்ணா பல்கலைக்கழகமும் மேடை அமைத்துக் கொடுத்தது என்று தெரியவில்லை. இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள், காங்கிசின் கிளை அமைப்புகளாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதே போன்று வேறு கட்சி தலைவர்களுக்கும் இத்தகைய வாய்ப்பு உருவாக்கித் தரப்படுமா என்பது குறித்து அந்தப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

தனது வருகையின்போது திரைப்பட கலைஞர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்பதாக ராகுல்காந்தி வலை விரித்தார். ஆனால் ரஜினிகாந்தும், விஜய்யும் காங்கிரசில் சேரப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இவர்களைப் போன்ற கலைஞர்கள் அந்தக் கட்சிக்கு செல்வதன் மூலம் புதிதாக ஒரு கோஷ்டி உருவாகும் என்பதைத் தவிர அவர்களுக்கும் பிரயோஜனம் இல்லை. தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் அந்தக் கட்சியும் தமிழகத்தில் நிமிர்ந்து நின்றுவிடப் போவதில்லை.

காங்கிரசில் இனிமேல் கோஷ்டி பூசல் இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார். சமுத்திரத்தில் நீர் வற்றினாலும் வற்றும். ஆனால் காங்கிரசில் கோஷ்டி பூசல் ஒழியவே ஒழியாது. இதற்கு காரணம், காங்கிரஸ் மேலிடம் பின்பற்றும் அணுகுமுறைதான். அந்தக் கட்சி பின்பற்றிய, பின்பற்றுகிற கொள்கைகளால்தான் அந்தக் கட்சி தமிழக மக்களிடமிருந்து அன்னியப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல், ஆங்காங்கே எழுந்தருளி கையை ஆட்டிவிட்டுச் செல்வதால் எந்தப் பலனும் ஏற்படாது.

செப்டம்பர் 18, 2009

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள்.

கிராமப்புறங்களில் உள்ள எளிய மக்கள் கிணறு தோண்டும் போது புதையல் கிடைத்தால் அது அரசுக்கு சொந்தம். அதுவே அம்பானிகளுக்கு கிடைத்தால் கரும்பு தின்ன கூலி கொடுக்கும் நமது மத்திய அரசு.

ஓஎன்ஜிசி மூலம் இந்திய எண்ணெய் வயல்களிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் விலை இந்திய உற்பத்தி செலவிற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அம்பானிகளுக்கு, அரசு நிலத்திலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவிற்கு சர்வ தேச விலை கொடுக்க வேண்டுமாம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது முகவரி இல்லாமல் இருந்தார்கள் அம்பானிகள். இன்று, அவர்கள் குடும்பச் சண்டைக்கும் அரசு சொத்தை பங்கு போடுவதற்கும் பிரதம மந்திரி மற்றும் இலாகா மந்திரிகளும் நேரத்தை ஒதுக்குவதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.

எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதியை நம்பியே நம் நாடு உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. அதே நேரத்தில், எரிபொருள் கண்டுபிடிப்பதற்கான அகழ்வாராய்ச்சிக்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது என்ற காரணத்தை கூறி, பாஜக அரசு இத்துறையில் தனியாரை ஈடுபடுத்தியது. காங்கிரசும் எஜமான விசுவாசத்துடன், நீயா-நானா? என்று அம்பானிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு; சேவை செய்து கொண்டு இருக்கிறது,

ஆந்திர மாநிலத்தில் பாயும் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றின் டெல்டா பகுதி மற்றும் இந்நதிகள் கலக்கின்ற வங்கக் கடலின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியையும் சேர்த்து கிருஷ்ணா-கோதாவரி படுகை என்றழைக்கின்றனர். இப்பகுதிதான் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். பாம்பே ஹை எனப்படும் மும்பை ஆழ்கடல் எண்ணெய் வயலை காட்டிலும் பன்மடங்கு பெரிய பரப்பளவு கொண்டது. சுமார் 28,000 ச.கி.மீட்டர் நிலப்பரப்பிலும். சுமார் 21,000 ச.கி.மீட்டர் ஆழ்கடல் பகுதியில் 200 மீ. ஆழத்திலும். சுமார் 18,000 ச.கி.மீ ஆழ்கடலில் 200 மீ முதல் 300 மீ ஆழத்திலும் இப்படுகை பரந்து விரிந்துள்ளது,

நமது நாட்டின் புதிய எண்ணெய் வள அகழ்வாய்வு மற்றும் உரிமம் (என்இஎல்பி) வழங்குதல் கொள்கை அடிப்படையில், ஆங்காங்கு கண்டறியப்பட்ட 57 எண்ணெய் வயல்களை (19 ஆழ் கடல். 9 முகத்துவாரம். 29 நிலப்பரப்பு) தனியார் வசம் ஒப்படைத்து, அகழ்வாய்வு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்ய தனியார் துறைக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஆர்ஐஎல் என்றழைக்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் சுமார் 12பகுதி களை மேற்கண்ட முறையில் 2000ஆம் ஆண்டில் ஏலத்திற்கு எடுத்தது, என்இஎல்பி கொள்கையின்படி இத்தனியார் நிறுவனங்கள் எண்ணெய் உற்பத்தி செய்யவும்; அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன, மேலும் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்திலும் பங்கு பெற்றுக் கொள்ள இத்தகைய உரிமம் வகை செய்துள்ளது,

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பிளாக் 6 எனப்படும் பகுதியை கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்ஐஎல் மற்றும் என்ஐகேஓ நிறுவனமும் இந்திய அரசிடமிருந்து எண்ணெய் உற்பத்தி செய்ய உரிமம் பெற்றன.

ரிலையன்ஸ் நிறுவனம். ஒன்றுபட்ட குழு மமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில். 2003ஆம் ஆண்டு மேற்கு உத்திரப்பிர தேசத்தில் தாதர் என்ற இடத்தில். எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் மின் நிலையம் ஒன்றை நிறுவி, அதற்கு தேவையான எரிவாயுவை கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து கொண்டு செல்ல திட்டமிட்டது. ஆனால் 2005ல் இக்குழுமத்தில் பிளவு ஏற்பட்டு இதில் பங்கு பெற்ற பல்வேறு துறைகளின் நிர்வாக உரிமைகளும் அம்பானி சகோதரர்களிடையே கை மாறின. மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியிடம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையும்; இளைய சகோதரர் அனில் அம்பானி வசம் மின் உற்பத்தி நிர்வாகமும் வந்தது. ஆர்ஐஎல் பிளவுண்டு ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் எனப்படும் நிறுவனம் உருவானது.

தாதர் மின்நிலையத்திற்கு எரிவாயு சப்ளை செய்ய 2005ல் ஆர்என்ஆர்எல் மற்றும் ஆர்ஐஎல் நிறுவனத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி.ஆர்ஐஎல் நிறுவனம், என்டிபிசி எனப்படும் தேசிய அனல் மின் நிலைய திட்டத்திற்கு எந்த விலையில் எரிவாயு விற்பனை செய்யுமோ, அதே விலையில் தாதர் மின் திட்டத்திற்கும் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2003ல் என்டிபிசி நிறுவனம் எரிவாயு சப்ளைக்காக டெண்டர்கள் வரவழைத்தது, இந்த டெண்டரில் ஆர்ஐஎல் வெற்றி பெற்று, ஒரு எம்எம்பிடியு  2.34 டாலர் என்ற விலையில் எரிவாயு சப்ளை செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டது.

மேற்குறிப்பிட்ட விலை நிர்ணயம், அதாது ஒரு யூனிட் எரிவாயு 2.34 டாலர் என்ற அடிப்படையில் ஆர்என்ஆர்எல் நிறுவனத்திற்கு விற்க முடியாது என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வாதம். இதற்கு பல காரணங்களை கூறுகிறது ஆர்ஐஎல்.

ஆர்என்ஆர்எல் நிறுவனத்தின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகும் 2.34 டாலர் என்ற அடிப்படையில் விற்க அரசாங்கம் மறுத்து விட்டது, இந்த 2.34 டாலர் என்பது சந்தை தீர்மானித்த விலையல்ல என்றும், மேலும் எரிவாயு அரசின் சொத்து. அதை இரு சகோதரர்களின் விருப்பப்படி விலை நிர்ணயம் செய்து விட முடியாது.

புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் எரிவாயு சப்ளை செய்ய ஆர்ஐஎல் மறுத்து விட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத் தை நாடியது. மும்பை நீதிமன்றம் வழக்கை விசாரித்தது.ஆர்ஐஎல் மற்றும் ஆர்என் ஆர்எல் நிறுவனத்திற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, நிறுவனத்திற்கு தேவையான எரிவாயுவை சப்ளை செய்ய தக்க ஏற்பாடு செய்ய ஆணையிட்டது. ஆர் என்ஆர்எல் நிறுவனமே உச்ச நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்துள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தின் ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையிலேயே எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்றும் அதில் முறையீடு செய்துள்ளது.

முகேஷ் அம்பானியும் அனில் அம்பானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். தங்கள் நிறுவனத்தின் மீது தேவையற்ற, அடிப்படையற்ற, ஆதாரமற்ற, போதிய தகவல்கள் அற்ற விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளது என குமுறுகிறார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கமிட்டியின் மு.ஆ. சந்திரசேகர், ஆர்ஐஎல் நிறுவனத்தில் செலவினம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என அனில் அம்பானி கூறுகிறார்.

கே.எம்.சந்திரசேகர் அவர்கள், முகேஷ் அம்பானி சேர்ந்து செயல்படும் என்ஜினீயரிங் கம்பெனி மீது சந்தேகப்படுகிறார்.

அனில் நிறுவனம், அரசாங்கம் தலையிட்டு, மத்திய அரசின் தணிக்கைக்கு உட்படுத்த உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.

மேலும் தணிக்கை அறிக்கையை மக்களிடையே சமர்ப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது.

முதலாளித்துவம் தோன்றும்போது, அது தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும் என்று மார்க்ஸ் சொன்னது நினைவிற்கு வருகிறது. இந்த பிரச்சனை சம்பந்தமாக இடதுசாரிகள், இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லி உருவாக்கிய விழிப்புணர்வைவிட முதலாளித்துவ நெருக்கடி (அம்பானி நெருக்கடி) அனில் அம்பானி, தன் சகோதரனுக்கு எதிராக (முதலாளித்துவம் முதலாளித்துவத்திற்கு எதிராக) ஏற்படுத்திய நெருக்கடி பெரியதாகும். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து அரசின் மீது அக்கறை உள்ளது போல்; பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.

சாதாரண மக்கள் குடும்பச் சொத்து பாகப் பிரிவினை செய்யப்படும்போது சொந்த வீட்டை விற்று பணத்தை பிரித்துச் சென்று, வாடகை வீட்டில் குடியிருக்கக்கூடிய சூழ்நிலை. ஆனால், அம்பானிகள் பிளவுபட்டு, சொத்து பிரிந்த பிறகு பணக்கார வரிசையில் ஐம்பதாவது இடத்தில் இருந்து முதலாம் இடத்திற்கு வர முடிகிறது. இது காங்கிரசும் பாஜகவும் எந்த அளவிற்கு அம்பானிகளுக்காக உழைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் 2005-06ல் 76.240கோடி ரூபாய் லாபமும், 2006-07ல் 81.550 கோடி ரூபாயும் அடைந்துள்ளது. பங்குத்தொகையாக 22.886 கோடி ரூபாயில் இருந்து 2006-07ல் 26.805 கோடி ரூபாயாக வழங்கியுள்ளது. சுங்க வரி, கலால் வரி, சேவை வரி, சொத்து வரி, வட்டி. கடன் என்று பல்வேறு வரிகள் மூலமாக அரசுக்கு ரூ.1,47,635 கோடி அளித்துள்ளது. கையிருப்பு மற்றும் உபரி பணமாக 2005-06ல் 3,59,181 கோடி ரூபாயும், 2006-07ல் 4,16,494 கோடி ரூபாயும் உள்ளது. இவ்வளவு அதிகமான லாபத்தையும் கையிருப்பையும் வைத்துள்ள, பொன் முட்டையிடும் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்தாமல் தனியார் துறையை ‘தனியாக” கவனிப்பது ஏனோ?

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் கழுகுகள்.

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.